» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் தூத்துக்குடி பாழாகியுள்ளது : கீதாஜீவன் எம்எல்ஏ குற்றச்சாட்டு

வெள்ளி 12, பிப்ரவரி 2021 8:48:49 PM (IST)

"ஸ்மார்ட் சிட்டி” திட்டத்தால் தூத்துக்குடி மாநகரம் பாழாகியுள்ளது என  தி.மு.க., வடக்கு மாவட்ட பொறுப்பாளா் கீதாஜீவன் எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "மத்திய அரசு "ஸ்மார்ட் சிட்டி” திட்டம் என தூத்துக்குடி மாநகராட்சிக்கு கோடிக்கணக்கில் பணம் ஒதுக்கியுள்ளது. இந்த திட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சியில் அத்தியாவசிய திட்டங்களை நிறைவேற்றாமல் கமிஷன் கிடைக்கும் திட்டங்களை மட்டும் அ.தி.மு.க அரசு செயல்படுத்தி வருவதால் தூத்துக்குடி மாநகரமே பாழாகியுள்ளது.குறிப்பாக "ஸ்மார்ட் சிட்டி” ரோடு என்ற பெயரில் மாநகரத்தின் நன்றாக உள்ள முக்கிய சாலைகள் அனைத்தையும் தோண்டி போக்குவரத்தை சீா்குலைத்துள்ளனா். 

இத்திட்டத்தில் ஏற்கனவே இருந்த சாலை அகலத்தை குறைத்ததோடு மட்டுமல்லாது வாகன நிறுத்துமிடம் என கூறி ஒவ்வொடு வீட்டு வாசலையும் அடைத்துவிட்டனா். அதுபோல பூங்காக்களை அழகுபடுத்துகிறோம் என சொல்லி ஏற்கனவே பாளையங்கோட்டை ரோட்டில் நன்றாக இருந்த MGR பூங்காவை சீரமைக்கிறேன் என்று ரூ.4 கோடியை வீணடித்துவிட்டனா். அது போல மழைக்காலத்தில் தண்ணீா் தேங்கும் பகுதியான வ.உ.சி கல்லூரி முன்பு உள்ள பகுதி, சுந்தரவேல் புரம் ஆகிய பகுதிகளில் பூங்கா அமைக்கிறேன் என்று சொல்லி பல கோடியை வீணடித்ததோடு மட்டுமல்லாது அந்த பகுதியை மேடாக்கி விட்டார்கள். 

அதனால் மழைநீா் முழுவதும் குடியிருப்பு பகுதிகளில் தேங்குவதற்கு வழி செய்துள்ளனா். அதுபோல மாநகரத்திற்கு வெளியே ஸ்டெர்லைட் அமைந்துள்ள பகுதியில் இருந்து வரும் மழைவெள்ள நீா் சி.வ.குளத்திலும் அது நிரம்பி மாடன் குளத்திலும் தேங்கி நின்றது. தற்சமயம் சி.வ.குளத்தை  ஸ்மார்ட் சிட்டியில் சீரமைக்கிறோம் என சொல்லி ரூ.19 கோடியை வீணடித்து மழைநீா் வரும் பாதையை அடைத்தது மட்டுமே மிச்சம். இதனால் மழைநீா் குளத்திற்கு செல்லாமல் P&T காலணி, V.M.S.நகா், நேதாஜிநகா், தேவா்காலணி, தனசேகரன்நகா், முத்தம்மாள் காலணி, ராம்நகா், ரஹ்மத்நகா் ஆகிய குடியிருப்புகளை சூழ்ந்தது மட்டுமே அ.தி.மு.க வின் சாதனை.

அதுபோல மற்றொன்று 8 ஏக்கரில் அமைந்திருந்த சலவை தொழிலாளா்களின் தொழிற்கூடத்தை "ஸ்மார்ட் சிட்டி” திட்டத்தில் சீரமைக்கிறேன் என்று சொல்லி அங்கு இரண்டு உயிர்களை பழிவாங்கியது மட்டுமே இவா்களின் மற்றொரு சாதனை. ஆறு மாதத்திற்கு மேல் அதில் தேங்கியிருக்கும் மழைநீா் தற்போது சாலைகளிலும், குடியிருப்புகளிலும் தேங்கியிருக்கிறது. மேலும் மார்க்கெட் என்பது நடுத்தர, ஏழை, எளிய மக்கள் எளிதில் சென்று பொருட்கள் வாங்கி உபயோகப்படுத்தி வரும் இடமாகும். மாநகரத்திலுள்ள அனைத்து மார்க்கெட்டுகளையும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இடித்துவிட்டு வணிக வளாகம் கட்டுவதும் இவா்களின் நிர்வாக சீா்கேடுகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

ஏற்கனவே ஓடிக்கொண்டிருக்கும் கழிவு நீா் கால்வாய்களைத்தான் கோடிக்கணக்கான ரூபாய் ஒதுக்கீடு செய்து இடித்து மீண்டும் கட்டுகிறார்கள்.உதாரணத்திற்கு அண்ணாநகா், டூவிபுரம், வி.இ.ரோடு, போல்டன்புரம், பீங்கான் ஆபீஸ் முன்பு உள்ளிட்ட பல்வேறு இடங்கள். ஆனால் கழிவுநீா் கால்வாய் இல்லாத பகுதிகளில் புதிய கான்கள் அமைக்கப்படவில்லை. 2008-ல் தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்ட பாதாள சாக்கடைத் திட்டம் இன்றுவரை செயல்படுத்தப்படவில்லை.

புதியதாக மாநகராட்சியோடு இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு பாதாள சாக்கடை வைப்புத் தொகை வசூலிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் இல்லை. ஏற்கனவே கழிவு நீா் எடுத்து வந்த சிறிய வண்டியும் பழுதாகி விட்டது எனக் கூறி சிறிய தெருக்களில் கழிவு நீா் தொட்டியிலிருந்து கழிவு நீா் அகற்றுவதேயில்லை. தற்போது கழிவு நீா் அகற்றுவதற்கும் பணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் தெருக்கள் அனைத்தும் சுகாதாரக் கேடாக உள்ளது.ஆனால் டெங்கு கொசுப்புழு பார்க்க மட்டும் மாநகராட்சி வேலை செய்கிறது. மற்ற சுகாதார சீா்கேட்டை கருதுவதே கிடையாது.

மாநகராட்சியில் எற்கனவே நல்ல முறையில் எரிந்து கொண்டிருந்த டியூப் லைட்டுகளை மாற்றிவிட்டு LED விளக்குகள் பொருத்தப்பட்டது. அந்த விளக்குகள் சரியாக எரியாமல் மாநகர தெருக்கள் முழுவதும் இருளில் மூழ்கியுள்ளன. 2016 சட்டமன்ற தோ்தலுக்குப்பின் நடைபெற்ற முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில் தூத்துக்குடி தொகுதியில் மழைநீா் வடிகால்கள் அமைத்திட வேண்டும், வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என சட்டசபையில் குரல் எழுப்பினேன். 

அப்படி நான் போராடி பெற்று தந்திட்ட நிதியும் மக்களுக்கு பயன் இல்லை. மதுரை பைபாஸ் ரோட்டில் தென்வடலாக மழைநீா் வடிகால் கட்டி வீணடித்து விட்டனா். குப்பைகளை சேகரிக்கவும் தனியாக குப்பை வரி வசூலிக்கப்படுகிறது. ஆனாலும் தெருக்கள் எல்லாம் குப்பை மேடாக காட்சி தருகிறது. மாநகரத்தில் 60%க்கும் மேற்பட்ட இடங்களில் சாலைகளும், மழைநீா் கால்வாய்களும் இல்லை.

அ.தி.மு.க ஆட்சியில் உள்ளாட்சி தோ்தலே நடத்தாமல் வீட்டு தீா்வை, தண்ணீர் வரி, காலிமனை தீா்வை, மாநகர கடைகள் வாடகை, குப்பை வரி, தொழில்வரி, பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் கட்டணம் என வரிகள், கட்டணங்கள், அபராதத் தொகை தாறுமாறாக உயா்த்தப்பட்டுள்ளது. ஆனால் மக்களுக்கான அடிப்படை வசதிகள் எதுவும் செயல்படுத்தவில்லை. இப்படி "ஸ்மார்ட் சிட்டி” திட்டத்தில் மாநகரத்தையே பாழ்படுத்தும் திட்டங்களை சொல்லிக்கொண்டே போகலாம். இப்படி மாநகருக்கு தேவையில்லாத திட்டங்களை "ஸ்மார்ட் சிட்டி” நிதியில் நிறைவேற்றி மாநகரத்தையே அ.தி.மு.க அரசு பாழாக்கிவிட்டது. இதற்கெல்லாம் விரைவில் நல்ல முடிவு காணப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.


மக்கள் கருத்து

TN69Feb 14, 2021 - 08:38:49 AM | Posted IP 108.1*****

நீர் மட்டும் நில ஆக்கிரமிப்பை அகற்றாமல் மாநகராட்சி நிர்வாகமும் ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் பணத்தை விரயம் செய்கின்றனர் என்று தெரியவில்லை புதிதாக அமைக்கும் பாதாள சாக்கடை திட்டம் ஆகட்டும் மற்றும் சாலையோர ஆகட்டும் அனைத்திலும் இருக்கும் குறுகிய ரோட்டிலேயே அனைத்து விதமான வேலைகளையும் செய்து மக்களுக்கு இடையூறு தான் மேலும் ஏற்படுத்துகின்றன அதுமட்டுமா ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையம் முடிந்தபாடில்லை ஏன் என்று தெரியவில்லை யாருக்காக இப்படி செய்கிறார்கள் என்றும் புரியவில்லை மக்களின் நலனை கருத்தில் கொண்டே செயல்படுங்கள்😭😰😭😰🥺

TN69Feb 14, 2021 - 08:27:03 AM | Posted IP 108.1*****

நீர் மட்டும் நில ஆக்கிரமிப்பை அகற்றாமல் மாநகராட்சி நிர்வாகமும் ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் பணத்தை விரயம் செய்கின்றனர் என்று தெரியவில்லை புதிதாக அமைக்கும் பாதாள சாக்கடை திட்டம் ஆகட்டும் மற்றும் சாலையோர ஆகட்டும் அனைத்திலும் இருக்கும் குறுகிய ரோட்டிலேயே அனைத்து விதமான வேலைகளையும் செய்து மக்களுக்கு இடையூறு தான் மேலும் ஏற்படுத்துகின்றன அதுமட்டுமா ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையம் முடிந்தபாடில்லை ஏன் என்று தெரியவில்லை யாருக்காக இப்படி செய்கிறார்கள் என்றும் புரியவில்லை மக்களின் நலனை கருத்தில் கொண்டே செயல்படுங்கள்😭😰😭😰🥺

TN69Feb 14, 2021 - 08:27:01 AM | Posted IP 173.2*****

நீர் மட்டும் நில ஆக்கிரமிப்பை அகற்றாமல் மாநகராட்சி நிர்வாகமும் ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் பணத்தை விரயம் செய்கின்றனர் என்று தெரியவில்லை புதிதாக அமைக்கும் பாதாள சாக்கடை திட்டம் ஆகட்டும் மற்றும் சாலையோர ஆகட்டும் அனைத்திலும் இருக்கும் குறுகிய ரோட்டிலேயே அனைத்து விதமான வேலைகளையும் செய்து மக்களுக்கு இடையூறு தான் மேலும் ஏற்படுத்துகின்றன அதுமட்டுமா ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையம் முடிந்தபாடில்லை ஏன் என்று தெரியவில்லை யாருக்காக இப்படி செய்கிறார்கள் என்றும் புரியவில்லை மக்களின் நலனை கருத்தில் கொண்டே செயல்படுங்கள்😭😰😭😰🥺

தூத்துக்குடி ஏரியா காரன்Feb 13, 2021 - 09:06:38 PM | Posted IP 108.1*****

முதல்ல பாதாள சாக்கடை அமைக்கும் போது தோண்டி நாசமாகி , மீண்டும் வலது புறம் கடைகள் வாசலில் தோண்டி திறந்தவெளி சாக்கடை ஆகி , மீண்டும் இடதுபுறம் கால்வாய் என்று கூறி அதுவும் சாக்கடையாகி ரோட்டை நாசமாக்குவதே மாநகராட்சியின் நோக்கம் , ஆனால் சாலையில் குடிநீர் லீக் ஆனால் கவனிக்கமாட்டார்கள் . எல்லாம் தூத்துக்குடி மாநகராட்சி சாக்கடை துட்டு பயலுக தான் காரணம் ..ஒரே ரோட்டில் 3 பக்கமும் சாக்கடை ச்சை . இனி தூத்துக்குடி டெங்கு நகரமாக மாற போகிறது..

ராமநாதபூபதிFeb 13, 2021 - 10:05:01 AM | Posted IP 173.2*****

தூத்துக்குடி நகரத்துக்குள் நடக்கும் அனைத்து பணிகளையும் L&T நிறுவனத்திடம் முழுமையாக ஒப்படைக்கவேண்டும். அவர்கள் செயற்கைகோள் மூலமாக நகரத்தின் அனைத்துப்பகுதிகளையும் ஆராய்ந்து கட்டவேண்டிய சாக்கடை உயரம் அமைக்கவேண்டிய சாலை உயரம் என அனைத்தையும் கணக்கிட்டு சிறப்பாக செய்து முடிப்பார்கள். இதற்கு நெய்வேலி நகரமே சிறந்த உதாரணம். ஆனால் ஆட்சியாளர்களுக்கு கமிஷன் கிடைக்காது என்ற ஒரே காரணத்தினால் இது நடக்க வாய்ப்பு இல்லை. எல்லாம் மக்களின் தலையெழுத்து

ராமநாதபூபதிFeb 13, 2021 - 10:04:38 AM | Posted IP 173.2*****

தூத்துக்குடி நகரத்துக்குள் நடக்கும் அனைத்து பணிகளையும் நிறுவனத்திடம் முழுமையாக ஒப்படைக்கவேண்டும். அவர்கள் செயற்கைகோள் மூலமாக நகரத்தின் அனைத்துப்பகுதிகளையும் ஆராய்ந்து கட்டவேண்டிய சாக்கடை உயரம் அமைக்கவேண்டிய சாலை உயரம் என அனைத்தையும் கணக்கிட்டு சிறப்பாக செய்து முடிப்பார்கள். இதற்கு நெய்வேலி நகரமே சிறந்த உதாரணம். ஆனால் ஆட்சியாளர்களுக்கு கமிஷன் கிடைக்காது என்ற ஒரே காரணத்தினால் இது நடக்க வாய்ப்பு இல்லை. எல்லாம் மக்களின் தலையெழுத்து

ப. சுகுமார்Feb 13, 2021 - 01:58:58 AM | Posted IP 173.2*****

வியாபாரிகள், தொழிற்சங்கவாதிகள், தொழில் வல்லுநர்கள்,லோக்கல் பிரமுகர்கள், அரசியல்வாதிகள், கல்வியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ICCI, Lions Club Jaycees Club... அமைப்பை சார்ந்தவர்கள்… அடங்கிய ஓர் 'சிறப்பு கமிட்டி' அமைக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் ஊழல் குறைய வாய்ப்புண்டு. பணிகள் திறம்பட செயல்படும்;'சுமார்ட் சிட்டி திட்டமும் வெற்றி பெரும்.

AnbuFeb 12, 2021 - 09:01:27 PM | Posted IP 108.1*****

முற்றிலும் உண்மை.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam

Thalir Products

Black Forest CakesThoothukudi Business Directory