» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சுகாதாரமற்ற முறையில் தீபாவளி பலகாரங்கள் தயாரித்து விற்றால் கடும் நடவடிக்கை - ஆட்சியர் எச்சரிக்கை

வெள்ளி 6, நவம்பர் 2020 8:42:49 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தீபாவளித் திருநாளில் மக்களின் அன்றாட தேவைகளில் அவசியமானதாக விளங்கும் இனிப்பு மற்றும் கார உணவுப் பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பினை உணவு வணிகர்கள் உறுதி செய்திட வேண்டும் எனவும், தவறும்பட்சத்தில் கடும் நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

தற்போது பண்டிகை காலம் தொடங்கியுள்ள இந்த காலகட்டத்தில் அனைத்து விதமான இனிப்பு மற்றும் கார வகை உணவு பதார்த்தங்களின் விற்பனைகளும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. முக்கியமாக தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலத்தில் விதவிதமான இனிப்பு பலகாரங்கள், காரங்கள் மற்றும் கேக் போன்ற பேக்கரி உணவு பொருட்களை மக் கள் விரும்பி வாங்கி உண்பதும், உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் அன்பளிப்பு அளிப்பதும் நமது கலாச்சாரமாக விளங்கி வருகிறது. எனவே, இனிப்பு மற்றும் கார வகை போன்ற உணவு பதார்த்தங்களின் தயாரிப்பாளர்களும், விற்பனையாளர்களும் பின்வரும் உணவு பாதுகாப்பு நிபந்தனைகளைப் பின்பற்றி தரமான மற்றும் பாதுகாப்பான உணவு நுகர்வோரைச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டியது கட்டாயமாகும்.

1. தீபாவளி பண்டிகையில் இனிப்பு மற்றும் கார பண்டங்களுக்கு சீட்டு நடத்துபவர்கள், தற்காலிக ஸ்வீட் ஸ்டால்கள் உட்பட அனைத்து இனிப்பு மற்றம் கார தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உணவு பாதுகாப்புத் துறையில் உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் பெற்ற பின்னரே பொது மக்களுக்கு விநியோகம் செயய வேண்டும். இந்த வணிகர்கள் மட்டுமல்லாது அனைத்து வகையான உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்பு அலுவலகத்தினை தொடர்பு கொண்டு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006ன் கீழ் தங்களது வணிகத்தினை பதிவு செய்து உரிமம் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

2. ஸ்வீட்ஸ் மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பவர்கள் FSSAI-ல் உரிமம் பெற்ற தரமான மூலப்பொருட்களைக் கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து பாதுகாப்பான உணவுப் பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும்.

3. உணவு தயாரிப்பில் கலப்படமான பொருட்களையோ, அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமாக செயற்கை நிறமிகளையோ உபயோகிக்கக் கூடாது.

4. பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருட்களுக்கு, விபரச்சீட்டு இடும்போது அதில், தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவு பொருளின் பெயர், தயாரிப்பு (அ) பேக்கிங் செய்யப்பட்ட தேதி, சிறந்த பயன்பாட்டு காலம் (காலவதியாகும் காலம்) சைவ மற்றும் அசைவ குறியீடு ஆகியனவற்றை அவசியம் குறிப்பிட வேண்டும்.

5. ஸ்வீட் பாக்ஸ்களை விற்பனை செய்யும் வணிகர்கள் அந்த பாக்ஸில் ஸ்வீட்ஸ் தயாரிக்கப்பட்ட தேதி மற்றும் உண்ணத் தகுந்த காலம் ஆகியவற்றை தவறாமல் குறிப்பிட வேண்டும்.

6. உணவு பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதரமான சூழலில் பொது மக்களுக்கு விற்பனை செய்திடல் வேண்டும்.

7. ஸ்வீட் ஸ்டால்களில் பயன்படுத்தப்படும் நெய் மற்றம் எண்ணெய் விபரங்களை கடையில் நுகர்வோர்களின் பார்வையில் தெரியுமாறு காட்சிப்படுத்தப்பட வேண்டும். அக்மார்க் மற்றும் FSSAI உரிமம் நெய், FSSAI உரிமம் பெற்ற பொட்டலமிட்ட எண்ணெய் வகைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

8. ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயைத் திரும்ப பயன்படுத்துதல் கூடாது.

9. சமீபத்திய FSSAI-ன் வழிகாட்டுதல்படி, விற்பனைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள அனைத்து ஸ்வீட் வகைகளுக்கும் தயாரிப்பு தேதி மற்றும் உண்ணத் தகுந்த காலம் ஆகியவற்றை அந்தந்த ஸ்வீட் அருகே ஒரு சிறிய போர்டில் எழுதி காட்சிப்படுத்த வேண்டும். உதாரணம்:

a. ரசகுல்லா : குளிர்சாதனப் பெட்டியில், 2 நாட்கள்.

b. ஜிலேபி : அறை வெப்பநிலையில் 2 நாட்கள்

c. பால் கோவா மற்றும பேடா : அறை வெப்பநிலையில் 4 நாட்கள்

d. அதிரசம், மைசூர் பாக் மற்றும் அல்வா : அறை வெப்பநிலையில் 7 நாட்கள்

10. பணியாளர்கள் கையுறை, முடிக் கவசம் போன்ற பாதுகாப்புக் கவசங்கள் அணிந்து தான் பணியாற்ற வேண்டும்.

11. பொதுமக்களும், பண்டிகை காலங்களில் பலகாரங்கள் வாங்கும்போது, உணவு பாதுகாப்பு துறையில் பதிவு பெற்ற நிறுவனங்களில் மட்டும் வாங்குமாறும், பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களை விபரச்சீட்டு இருந்தால் மட்டுமே வாங்கி உபயோகிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இது தொடர்பான புகார்கள் ஏதும் இருப்பின், தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலகத்திலோ அல்லது 94440 42322 என்ற கட்செவி எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆடசித் தலைவர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Black Forest Cakes

Anbu Communications

Thoothukudi Business Directory