» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நிலச்சரிவில் சிக்கிய தொழிலாளர்களை மீட்க வேண்டும் : கயத்தாறில் உறவினர்கள் கதறல்

சனி 8, ஆகஸ்ட் 2020 8:30:55 AM (IST)மூணாறு நிலச்சரிவில் சிக்கிய கயத்தாறு தொழிலாளர்களை மீட்க வேண்டும் என்று உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். 

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே நயமக்காடு எஸ்டேட் பெட்டிமுடி டிவிசன் மலைப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. இங்கு தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கியிருந்து வேலை செய்து வந்தனர். இந்நிலையில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவில் விடிய விடிய பலத்த மழை பெய்தது. அப்போது தேயிலை எஸ்டேட் தொழிலாளர்கள் தங்கியிருந்த மலைப்பகுதியில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. 

அப்போது தொழிலாளர்கள் தங்கியிருந்த குடியிருப்புகளின் மீது மண் மற்றும் பாறாங்கற்கள் விழுந்து அமுக்கியது. இதனால் தூங்கி கொண்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 10-க்கு மேற்பட்ட இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்றது. அங்கு குடியிருப்புகளில் 80 குடும்பத்தினர் வசித்த பகுதி முழுவதுமாக மண்ணால் மூடப்பட்டதால், உயிர் பலி அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இதற்கிடையே, அங்கு வசித்தவர்களில் பெரும்பாலான தொழிலாளர்கள், தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பாரதி நகரைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அங்கு வசிக்கும் உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர் பாரதிநகர் பகுதி மக்கள், கயத்தாறு தாலுகா அலுவலகத்துக்கு சென்று, தாசில்தார் பாஸ்கரனிடம் கோரிக்கை மனு வழங்கினர். அதில், கேரள மாநிலத்தில் நடந்த நிலச்சரிவில் சிக்கி, கயத்தாறு பாரதி நகரைச் சேர்ந்த 71 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களில் பலரும் உயிரிழந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. எனவே, அவர்களுடைய உறவினர்கள், கேரள மாநிலத்துக்கு செல்வதற்கு இ-பாஸ் வழங்க வேண்டும். நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.

இதுகுறித்து பாரதி நகர் பகுதி மக்கள் கூறுகையில், எங்களுடைய உறவினர்கள் பலரும் கேரளாவில் உள்ள தனியார் தேயிலை எஸ்டேட்டில் குடும்பத்துடன் தங்கியிருந்து பல ஆண்டுகளாக வேலை செய்து வந்தனர். அந்த நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பாரதி நகரைச் சேர்ந்த மேகநாதன் பணியாற்றினார். மேலும் அப்பகுதியில் வார்டு உறுப்பினராக ஜெயராமன் உள்ளார்.

நிலச்சரிவில் சிக்கி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலரும் உயிரிழந்துள்ளனர். இந்த துயர சம்பவம் பற்றி அறிந்ததும், மேகநாதன், ஜெயராமன் ஆகியோரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டு அறிந்தோம். நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்ட உறவினர்களை மீட்பதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். இதேபோன்று கயத்தாறு அருகே தலையால் நடந்தான்குளம், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்களும், கேரளாவில் நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கியதாக உறவினர்கள் கதறி அழுதனர். இந்த சம்பவம் தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest CakesAnbu Communications

Thoothukudi Business Directory