» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கரோனா பாதிப்பு குறையத் தொடங்கி உள்ளது: சுகாதாரத்துறை செயலர் பேட்டி

புதன் 5, ஆகஸ்ட் 2020 3:19:24 PM (IST)

தூத்துக்குடியில் கரோனா பாதிப்பு படிப்படியாக குறையத் தொடங்கி உள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வரும் கரோனா சிகிச்சை விவரங்கள் மற்றும் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பு பணிகள் குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் தெரிவித்ததாவது: தமிழகம் முழுவதும் கோவி்ட் 19 தடுப்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் குறிப்பாக தென் மாவட்டங்களில் அதிக கவனம் எடுத்துக் கொள்ளப்பட்டு வருகிறது. நான் தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றி இருக்கிறேன்.

தூத்துக்குடியில் கரோனா பாதிப்பு ஏறுமுகத்தில் இருந்த நிலையில் தற்போது படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. கரோனா பரவலை கட்டுப்படுத்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி நிர்வாகம் சிறப்பாக பணியாற்றி வருகிறது.தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்த வகையில் கரோனா இறப்பு விகிதம் மிக குறைவாக 0.7% என்ற அளவில் உள்ளது. இருப்பினும் அரசு விதிமுறைகளை மக்கள் கடைபிடித்தாலே கரோனாவில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளமுடியும். பொதுமக்கள் முக கவசம் அணிவதை சரியாக பின்பற்றுவதில்லை. கரோனாவின் அடுத்த அலையை தடுக்க பொது மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கினால், கரோனா தொற்றை கட்டுப்படுத்தலாம்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா நேயாளிகளுக்காக கூடுதல் படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.தூத்துக்குடியில் கடல் சார்ந்த மீனவ பகுதிகள் உள்ளன. இங்கு அடுத்தடுத்து வீடுகள் அமைந்துள்ன. இதுபோன்ற பகுதிகளில் சிறப்பு முகாம்கள் அமைத்து இதுவரை 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர். சுகாதரத்துறை இந்த விசயத்தில் சிறப்பான ஒத்துழைப்பை அளித்து வருகிறது. தமிழகத்தில் கரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.  கரோனா பாதிப்பு எண்ணிக்கையை பார்த்து மக்கள் அச்சப்பட தேவையில்லை. 

தமிழகத்தில் கரோனா நோயாளிகளுக்கு 70 ஆயிரமாக இருந்த படுக்கை வசதிகள், தற்போது 1.18 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. கரோனா சிகிச்சை மையம், கரோனா நல மையம், கரோனா கவனிப்பு மையம், வீட்டுத் தனிமை என தொற்றின் தாக்கத்துக்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது படுக்கை வசதி இல்லாமல், ஆக்சிஜன் இணைப்புடன் கூடிய படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் ரூ.75 கோடி மதிப்பிலான பணிகள் முடிவடைந்துள்ளது. தனியாக கட்டிட வசதியுடன் 50 படுக்கைக்கு மேல் இருந்தால் அங்கு ஆக்சிஜன் இணைப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூடுதல் கட்டணம் தொடர்பாக பொதுமக்கள் 104 எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். முகக்கவசம், பாதுகாப்பு உடை உள்ளிட்ட கரோனா மருத்துவக் கழிவுகளை பாதுகாப்பாக கையாள வேண்டும். அலட்சியமாக கையாளுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

ஆய்வின்போதுமாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன், தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரான் ஜீத் சிங் கலோன், மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர்கள் கிருஷ்ண லீலா, உமா சங்கர், மருத்துவக் கல்லூரி முதல்வர் ரேவதி பாலன், மாநகராட்சி நகர்நல அலுவலர் அருண்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Anbu Communications


Black Forest Cakes
Thoothukudi Business Directory