» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பனிமய மாதா திருவிழாவில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டாம் : ஆயர் - ஆட்சியர் வேண்டுகோள்

வியாழன் 23, ஜூலை 2020 5:17:54 PM (IST)



தூத்துக்குடியில் வருகிற 26ம் தேதி துவங்க உள்ள பனிமய மாதா ஆலயத் திருவிழாவில் பொதுமக்கள் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும் என ஆயர் ஸ்டீபன் மற்றும் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆகியோர்  வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி,  தலைமையில் இன்று (23.07.2020) நடைபெற்றது. கூட்டத்தில் தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் முன்னிலை வகித்தார்கள். இக்கூட்டத்தில், தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழா கொடியேற்றம், தூய பனிமய அன்னையின் பெருவிழா ஆகிய நிகழ்ச்சிகள் தொடர்பாகவும், திருவிழா நேரடியாக ஒளிபரப்புவது செய்வது தொடர்பாகவும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது: ஓவ்வொரு ஆண்டும் முத்து நகரில் மிக சிறப்பாக கொண்டாடப்படும் திருவிழாவில் பனிமய மாதா பேராலய திருவிழா ஒன்றாகும். இந்த ஆண்டு நடைபெறும் தூய பனிமய மாதா திருவிழா 438வது ஆண்டு திருவிழாவாகும். தற்போது கொரோனா தொற்று நோய் காலத்தினை கருத்தில் கொண்டு கொடியேற்றம், தூய பனிமய அன்னையின் பெருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் சமூக இடைவெளியை பின்பற்றி சில நபர்கள் மட்டும் கலந்துகொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் கொரோனா தொற்று நோயில் இருந்து நாம் விடுதலை பெற நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம்.

அரசு கொரோனா நோய் தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளும், கட்டுபாடுகளும் விதித்துள்ளது. இதனை நாம் அனைவரும் பின்பற்ற வேண்டும். கொடியேற்றம், தூய பனிமய அன்னையின் பெருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் இந்த ஆண்டு பொதுமக்கள் நேரில் வருவதை தவிர்த்து யூடுயுப் மற்றும் தொலைக்காட்சி மூலமாக நேரடியாக ஒளிபரப்பு செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. ஆகவே பொதுமக்கள் நேரடியாக பனிமயமாதா கோவிலுக்கு வருவதை தவிர்த்து தங்களது வீட்டில் இருந்தே ஒளிபரப்பு செய்யும் நிகழ்ச்சிகளை பார்த்து பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி,  செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது: ஒவ்வொரு ஆண்டும் தூத்துக்குடி பனிமயமாதா திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்வார்கள். இந்த ஆண்டு பனிமயமாதா திருவிழா நிகழ்ச்சி 26 ஜூலை முதல் ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெறுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் ஜூலை 31ம் தேதி வரை சுய ஊரடங்கு உத்தரவினை நீடித்துள்ளார்கள். மேலும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடமான திரையரங்கம், வணிக வளாகங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி அளிக்கவில்லை.

ஆகவே இந்த ஆண்டு பனிமயமாதா பேராலய திருவிழாவை பொதுமக்கள் நேரடியாக வந்து பிரார்தனை செய்ய அனுமதி இல்லை. 26ம் தேதி கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கு பொதுமக்கள் வர அனுமதி இல்லை. மேலும் கொடியேற்றுவதற்கு சில நபர்கள் மட்டும் அனுமதி கேட்டுள்ளார்கள். அதனை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று சில நபர்கள் மட்டும் சமூக இடைவெளியுடன் கலந்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் மற்றும் பனிமய மாதா பங்குதந்தை அவர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அனைத்து நிகழ்ச்சிகளும் வழிபாட்டு தலத்துக்குள் செய்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகளிலும் பொதுமக்கள் கலந்துகொள்ள அனுமதி இல்லை.

மேலும் பனிமயமாதா பேராயலயம் மூலம் நடைபெறும் நிகழ்ச்சிகள் அனைத்தும் யூடுயுப் மற்றும் தொலைக்காட்சிகள் மூலமாக நேரடியாக ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆகவே பொதுமக்கள் நேரில் வந்து நிகழ்ச்சிகளை காண அனுமதி இல்லை. பொதுமக்கள் அதிகமாக கூடும் பட்சத்தில் நோய் தொற்று ஏற்பட அதிக அளவு வாய்ப்பு உள்ளது. பொதுமக்கள் கருத்தில் கொண்டு தங்களது வீட்டில் இருந்தே நேரடி நிகழ்ச்சிகளை பார்த்து பயன் பெற வேண்டும்.

வருகிற ஞாயிற்றுக்கிழமை 26ம் தேதி முழு ஊரடங்கு உத்தரவு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே பேராலயத்துக்கு பொதுமக்கள் நேரடியாக வருகை தருவதை தவிர்க்க வேண்டும். சுமார் 700 காவல் துறை பணியாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கும் பொதுமக்கள் நேரில் வர அனுமதி இல்லை. இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.



அதனைத்தொடர்ந்து கொடியேற்றம் செய்யும் இடத்தினை தூத்துக்குடி மேதகு ஆயர் ஸ்டீபன் மற்றும் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி,  ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார், சார் ஆட்சியர் சிம்ரோன் ஜீத் சிங் காலோன், மாதா கோவில் பேரவை பங்கு தந்தை குமாரராஜா, மறைமாவட்ட முதன்மை குரு பங்கு தந்தை பன்னீர்செல்வம், ஆயர் செயலாளர் பங்கு தந்தை தினேஷ் மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications


Black Forest Cakes








Thoothukudi Business Directory