» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இரட்டை படுகொலை வழக்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மனு விசாரணைக்கு ஏற்பு

வியாழன் 9, ஜூலை 2020 5:23:06 PM (IST)

சாத்தான்குளம் காவல்நிலைய இரட்டை படுகொலை வழக்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டது. 

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட சிபிஎம் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ், சித்ரவதை செய்யப்பட்டு, துன்புறுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் அதிர்வு அலைகளை ஏற்படுத்தியது. மதுரை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தானாக விசாரணைக்கு எடுத்து கொண்டு மேற்பார்வை செய்து வந்ததுடன் பல்வேறு பாராட்டதக்க உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளது. ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினரில் யாராவது ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும், ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்கிடவேண்டும், சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணையை மேற்கொள்ள வேண்டும். 

கைது செய்யப்பட்டவர்களுக்கு மருத்துவ தகுதி சான்றிதழ் வழங்குவது சம்பந்தமாக நீதிமன்றம் வகுக்கும் விதிமுறைகளை தழிழக அரசும், காவல்துறையும், சிறைத்துறையும் பின்பற்ற உத்தரவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன் 29.06.2020 அன்று மதுரை உயர்நீதி மன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார். மேற்படி ரிட் மனுவானது 09.07.2020 அன்று விசாரணைக்கு வரப்பெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வழக்கறிஞர்கள் எல்.சாஜிசெல்லன், டி.சீனிவாசராகவன், எஸ்.எம்.மோகன்காந்தி, இ.சுப்புமுத்துராமலிங்கம் ஆகியோர் ஆஜராகினர். மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம் மருத்துவ தகுதி சான்றிதழ் வழங்குவது சம்பந்தமாக மாதிரி வழிகாட்டிடும் விதிகளை தாக்கல் செய்ய வழக்கறிஞர்களுக்கு அனுமதி வழங்கியது. மேலும் சிபிஎம்-ன் மனுவிற்கு தமிழக அரசு பதில் தாக்கல் செய்திட உத்தரவிட்டது. 

மேலும் சாத்தான்குளம் காவல்நிலைய மரணம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றம் மேற்கொண்டு வருகின்ற வழக்கில் சிபிஐ நிலை அறிக்கை தாக்கல் செய்திடவும் உத்தரவிட்டது. சாத்தான்குளம் காவல்நிலைய படுகொலை நடந்த பிறகு 23.06.2020 அன்று முதன்முதலாக சாத்தான்குளத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன் தலைமையிலான குழுவினர் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். மேற்படி 23.06.2020 அன்றே மேற்படி வழக்கு சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும், தொடர்புடைய சிசிடிவி பதிவுகளையும் கைப்பற்றி சம்பந்தப்பட்ட போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டுமென்று கட்சியின் மாவட்ட செயலாளர் உயர் அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பிவைத்தார். 

மேலும் 24.06.2020 அன்று திருநெல்வேலி மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் வைத்து பிரேத பரிசோதனை நடந்த போது கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன் தலைமையிலான குழுவினர் சென்றனர். மேலும் கோவில்பட்டி குற்றவியல் நீதித்துறை நடுவர் மேற்கொண்ட விசாரணையிலும் 29.06.2020 அன்று கட்சியின் மாவட்ட செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன் ஆஜராகி சாட்சியமளிக்க மனுக்கொடுத்துள்ளார். அவருக்கு அழைப்பாணை நீதிமன்றம் மூலம் அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேற்படி 29.06.2020 அன்றுதான் ஜெயராஜ், பென்னிக்சன் குடும்பத்தினரும் நீதித்துறை நடுவரிடம் சாட்சியமளித்தனர். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநிலக்குழு சார்பில் சம்பந்தப்பட்ட போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட வேண்டுமென்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது. மேலும் கோவில்பட்டி குற்றவியல் நீதித்துறை நடுவர் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் விசாரணை மேற்கொண்ட போது அவரை அவமரியாதை செய்ய காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்யவேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது. 06.07.2020 அன்று கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சாத்தான்குளத்திற்கு நேரில் வந்து குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். 

அது சமயம் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம்யெச்சூரி பென்னிக்சின் சகோதரி பெர்சியிடம் தொலைபேசி மூலமாக பேசி ஆறுதல் தெரிவித்தார். தற்பொழுது மேற்படி காவல்நிலைய இரட்டை படுகொலை வழக்கில் 07.07.2020 அன்று மத்திய புலனாய்வு பிரிவு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து மேல்விசாரணை செய்திட இருக்கின்ற நிலையில் இது போன்று தமிழகத்தில் இனியும் ஒரு மனித உரிமை மீறல் படுகொலை நடைபெறாத வண்ணம் தடுத்து நிறுத்தும் வகையில் சாத்தான்குளம் வழக்கில் சட்டப்படி போலீசாருக்கு தண்டனை கிடைத்திடுவதற்கு ஏதுவாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துணையாக நிற்கும் என்று தெரிவித்தார். .


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest CakesAnbu Communications

Thoothukudi Business Directory