» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அமெரிக்கன் மருத்துவமனையில் கரோனா வார்டு: ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆய்வு

வியாழன் 9, ஜூலை 2020 3:30:27 PM (IST)தூத்துக்குடி அமெரிக்கன் மருத்துவமனையில் கரோனா வார்டு அமைப்பது தொடர்பாகவும், நந்தகோபாலபுரம் நோய் கட்டுபாட்டு பகுதிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி,  நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் அமைந்துள்ள அமெரிக்கன் மருத்துவமனையில் கரோனா வார்டு அமைப்பதற்கு ஏற்படுத்தபட்டுள்ள வசதிகளையும், கூடுதலாக படுக்கை வசதிகள் ஏற்படுத்துவது தொடர்பாகவும் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி,  நேரில் சென்று இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட நந்தகோபாலபுரம் நோய் கட்டுபாட்டு பகுதியில் மாநகராட்சி பணியாளர்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் மற்றும் வீடு வீடாக சென்று தெர்மல் ஸ்கிரினங் மற்றும் பல்சஸ் பரிசோதனை பணிகளை ஆய்வு செய்து நோய் கட்டுபாட்டு பகுதியில் உள்ள அனைத்து வீடுகளிலும் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 33,400 நபர்களுக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 923 நபர்கள் பூரணம் குணம் பெற்று வீடு திரும்பி உள்ளார்கள். தற்போது 627 நபர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் சளி, காய்ச்சல், இரும்பல் போன்ற அறிகுறிகள் உள்ள 2 அல்லது 3 நபர்கள் ஒரே பகுதியில் கண்டறியப்பட்டால் உடனடியாக மருத்துவ குழுவினர் அப்பகுதிக்கு சென்று சுழற்சி முறையில் பல்வேறு நபர்களின் மாதிரிகள் சேகரிக்கப்படுகிறது. கடந்த 3 நாட்களான திரேஸ்புரம் பகுதியில் 200 மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. இதில் 40 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் அந்த பகுதி நோய் கட்டுபாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு கிருமி நாசினி மற்றும் மருத்தவ பரிசோதனை பணிகள் மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல் விளாத்திகுளம் காய்கறி மார்கெட் பகுதியில் கரோனா தொற்று அறிகுறி இருந்தால் அப்பகுதியில் மார்கெட்டில் பணிபுரியும் 137 நபர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் கிட்டதட்ட 40 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் அவர்களுடன் தொடர்பில் உள்ள நபர்களையும் கண்டறியப்பட்டு மாதிரிகள் சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக கூடுதலாக படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதிகமாக பாதிப்புக்கு உள்ளாகிய நபர்களை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதற்காக 600 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. லேசான அறிகுறி உள்ள நபர்களை தாலுக்கா மருத்துவமனையில் (Covid Hospital) அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

மேலும் கரோனா அறிகுறி இல்லாத நபர்களை தூத்துக்குடி தொழில்நுட்ப கல்லூரி, கோவில்பட்டி நேஷனல் பொறியல் கல்லூரி, எட்டயபுரத்தில் ஒரு கல்லூரியும், திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் கல்லூhயில் 200 படுக்கைகள் உள்ளிட்ட இடங்களில் அனுமதிக்கப்பட்டு கோவிட் கேர் செண்டராக செயல்பட உள்ளது. இந்த கோவிட் கேர் செண்டரில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியாற்றுவார்கள். அங்கு அனுமதிக்கப்பட்ட நபர்களுக்கு தேவையான உணவு வசதிகளும் வழங்கிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

மேலும் தனியார் மருத்துவமனையில் கரோனா தொற்று நோயாளிகளுக்கு கூடுதல் படுக்கைகள் மற்றும் மருத்துவ வசதிகள் ஏற்படுத்துவது தொடர்பாக இன்று தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் அமைந்தள்ள அமெரிக்கன் மருத்துவமனையில் ஆய்வு செய்யப்பட்டது. கோவிட் கேர் செண்டரில் 600 படுக்கைகள் தற்போது தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் 1,000 படுக்கைகளாக உயர்த்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நமது மாவட்டத்தில் 10 நாட்களாக சிகிச்சை பெற்று பூரணம் குணம் பெற்று வீடு திரும்பும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
 
தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்துள்ளபடி பொதுமக்கள் முககவசங்களை அணிந்து வெளியே வர வேண்டும். கரோனா அறிகுறிகள் உள்ள நபர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். அவசியம் இல்லாத வேலைக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். ஏற்கனவே நமது மாவட்டத்தில் 500 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. பின்னர் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுப்படி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கரோனா தொற்று பரிசோதனை ஆய்வகம் திறந்து வைக்கப்பட்டதால் தினம்தோறும் 1,200 மாதிரிகள் வரை பரிசோதனை செய்யப்படுகிறது. 

முககவசங்கள் அணியாமல் வெளியில் செல்பவர்களுக்கு முதல் கட்டமாக ரூ.50 அபராதம் விதிக்கப்படுகிறது. பின்னரும் விதிமுறைகளை பின்பற்றாமல் முககவசங்கள் அணியாத நபர்களுக்கு ரூ.200 அபராதம் இரண்டாம் கட்டமாக விதிக்கப்படுகிறது. தொடர்ந்து கடைபிடிக்காத நபர்கள் மீது காவல்துறையினர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பொதுமக்கள் அவசிய வேலைக்கு வெளியே வரும்போது கட்டாயமாக முககவசங்களை அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும், மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் கரோனா தடுப்பு பணிகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி,  ஏரல் பேருராட்சிக்கு உட்பட்ட சவுக்கை அம்மன் கோவில் தெரு நோய் கட்டுபாட்டு பகுதியில் வீடு வீடாக சென்று தெர்மல் ஸ்கிரினங் மற்றும் பல்சஸ் பரிசோதிக்கும் பணிகளை ஆய்வு செய்து, பல்சஸ் குறைவாகவோ, அதிகமாகவோ இரந்தால் மீண்டும் பரிசோதனை செய்ய வேண்டும் எனவும், அதற்கு பின்னரும் அதிக மாற்றங்கள் ஏற்பட்டால் உடனடியாக சம்மந்தப்பட்ட வட்டார மருத்துவ அலுவலர் அவர்களிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன், திருச்செந்தூர் கோட்டாட்ச்சியர் தனப்ரியா, மாநகராட்சி நகர் நல அலுவலர்  அருண்குமார், ஏரல் வட்டாச்சியர் அற்புதமணி, ஏரல் செயல் அலுவலர் சுந்தரவேல், வட்டார மருத்துவ அலுவலர்  கல்யாணராம், மாநகராட்சி சுகாதார அலுவலர் ஹரிகணேஷ், அமெரிக்கண் மருத்துவமனை நிர்வாகி லீஸ் ஜாண் மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Black Forest CakesAnbu Communications
Thoothukudi Business Directory