» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

என் அண்ணனை போலீசார் அடித்துக் கொன்றார்கள் : தூத்துக்குடியில் ஆசிரியை பரபரப்பு புகார்

சனி 4, ஜூலை 2020 9:27:30 PM (IST)

என் அண்ணனை போலீஸார் அடித்து கொன்றிருக்கிறார்கள், என்று தூத்துக்குடியில் ஆசிரியை சாந்தி என்பவர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் எஸ்.பியிடம் கொடுத்ததாக சொல்லப்படும் மனுவில், ‘’நான் தூத்துக்குடியில் அப்பாவுடன் அண்ணாநகர் ஏழாம் தெருவில் வசித்து வருகிறேன். தனியார் பள்ளியில் ஹிந்தி, ஆங்கில ஆசிரியையாக கடந்த 10 வருடன் பணியாற்றி வருகிறேன். எனது அண்ணன் வாசுதேவன், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தூத்துக்குடியில் கடந்த 12 வருடமாக பணியாற்றி வந்தார். அவருக்கும் அவர் மனைவி சசிகலாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவர்கள் பிரிந்திருந்தனர். 22.2.2020 அதிகாலை 4 மணிக்கு அவருடைய உயரதிகாரிகள் தமிழ்நாடு முதல் மந்திரி வருகையிருப்பதால் அவசரகால மின்சார பழுதை பார்ப்பதற்கு வருமாறு அழைத்தார்கள். 

என் அண்ணன் உடனே தன்னுடைய மோட்டார் பைக்கில் தன்னுடைய அலுவலகத்திற்கு சென்று விட்டார். காலையில் சுமார் 7.30 என் அக்காவின் மகள் பவித்ரா மற்றும் என் அண்ணன் மனைவியும் தொலைபேசி மூலம் என் அண்ணன் இறந்து விட்டதாக கூறினார்கள். நான் உடனே அரசு மருத்துவமனைக்கு சென்று பார்த்தேன். அங்கு நின்ற போலீஸ் என் அண்ணன் வாகன விபத்தில் இறந்து விட்டதாக சொன்னார். என் அண்ணனின் மனைவியிடம் என் அண்ணன் வாகன விபத்தில் இறந்து விட்டதாக புகார் மனுவில் கையெழுத்து வாங்கியதாக சொன்னார்கள்.

அந்த புகார் மனுவில் யாரோ அடையாளம் தெரியாத வாகனம் என் அண்ணன் சென்ற வாகனத்தின் மீது மோதி என் அண்ணன் இறந்து விட்டதாக சொன்னார்கள். நான் அவர் இறந்த இடத்தை பார்க்க எஃப்.சி.ஐ குடோன் பக்கம் சென்றேன். அங்குள்ளவர்களிடம் விசாரித்தேன். அவர்கள் அங்கு அப்படி ஒரு விபத்தே நடக்கவில்லை என்று சொன்னார்கள். என் அண்ணனை ரோந்து பணியில் முதல்-மந்திரி பாதுகாப்பில் இருந்த காவலர் அழகிய நம்பியார் அடித்து காயப்படுத்தியதாகச் சொன்னார்கள். முதல்-மந்திரி வருகையின் காரணமாக ஏகப்பட்ட காவலர்கள் அந்த ரோட்டில் நின்று கொண்டிருந்தார்கள். 

ஆகவே மோதிய வாகனம் மோதி விட்டு தப்பிக்க முடியாது. பொய்யாக புகார் மனுவை தயாரித்து என் அண்ணனின் மனைவியிடம் கையெழுத்து வாங்கி முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்கள். நான் அதிர்ச்சியடைந்து காவல்துறை அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் தமிழ்நாடு உள் துறை அதிகாரிகளுக்கும் நீதி வேண்டும் என்று கேட்டு புகார் அளித்து அனுப்பி உள்ளேன். அந்த புகார் மனுக்கள் மீது காவல் நிலையத்தில் விசாரணை இருக்கிறது என்று சொல்லி காவலர் ஒருவர் என்னை தொடர்புகொண்டு அழைத்தார். அதற்காக காலை ஜூன் மாதம் ஒன்றாம் தேதி 11 மணி அளவில் காவல் நிலையம் சென்று விசாரணை அதிகாரி காவல் நிலைய ஆய்வாளர் வரவில்லை அரை மணி நேரம் கழித்து வந்தார். 

நான் அவரிடம் என் அண்ணன் மேற்படி போலீஸ் காவலர் அடித்துதான் மரணத்தை விளைவித்திருக்கிறார்கள். பொய்யாக எஃப்.ஐ.ஆர் போடப்பட்டு இருக்கிறது. ஆகவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டேன். அதற்கு ஆய்வாளர் கிருஷ்ணகுமார் மிகவும் கோபப்பட்டு இந்த மனுக்களை வாபஸ் வாங்கும்படி வற்புறுத்தினார். நான் முடியாது என கூறினேன். உடனே அவர் தலைமுடியை பிடித்து இழுத்து உள்ள அறைக்குள் கொண்டுபோய் தன் கைகளினால் முதுகில் பலமுறை ஓங்கிக் குத்தினார் அடித்தார் வலியால் அழும் பொழுது தன் காலால் என் வயிற்றில் பல முறை எட்டி உதைத்தார். நான் கீழே விழுந்துவிட்டேன் கெட்ட வார்த்தைகள் பேசி வாயில் பலமுறை அசிங்கமாக திட்டினார் என்னை அடித்தார். அதனால் எனக்கு உடல் உடம்பு காயம் ஏற்பட்டது. என்னைக் கைதுசெய்து தூத்துக்குடி முதல் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1 முன்பு என்னை இரவு 8 மணி அளவில் ஆஜர் படுத்தினார். 

அதுவரை என்னை காவல் நிலையத்தில் வைத்து கொடுமைப் படுத்தினார்கள் எனக்கு குடிக்க தண்ணீர் சாப்பிட சாப்பாடு வரவில்லை நான் நீதியுடன் நீதிபதியிடம் காவல் நிலையத்தில் நடந்த அத்தனை சம்பவங்களையும் கூறினேன். நீதிபதி அவர்கள் அத்தனையையும் எழுதிக்கொண்டார். என் உடம்பில் உள்ள அனைத்து காயங்களையும் கூறினேன். என் உடம்பில் உள்ள காயங்களை பார்வையிட்டார். அதன் குறித்து கொண்டார். அதன் பின் என்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு இருந்த டாக்டர் என் உடம்பு உள்ள அத்தனை காயங்களையும் பார்வையிட்டு குறித்துக் கொண்டார். காயங்களுக்கான சிகிச்சையும் கொடுக்கப்பட்டது. காவல் நிலையத்தில் சிசிடிவி கேமரா இருந்தால் நிச்சயமாக என்னை இழுத்து போனது பதிவாகி இருக்கும். ஆகையால் தயவு கூர்ந்து பெண் என்றும் பார்க்காமல் அடித்து உதைத்து அசிங்கப்படுத்தின காரணத்துக்கு தகுந்த நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்’’ இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Black Forest Cakes

Anbu Communications


Thoothukudi Business Directory