» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கில் சாட்சிகளிடம் மாஜிஸ்திரேட் விசாரணை

செவ்வாய் 30, ஜூன் 2020 8:49:56 AM (IST)

வியாபாரி-மகன் உயிரிழந்த வழக்கில், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் விடிய, விடிய ஆய்வு நடத்திய மாஜிஸ்திரேட், சாட்சிகளிடம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்தார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு, கோவில்பட்டி சிறையில் அடுத்தடுத்து இறந்தனர். இதுதொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. கோவில்பட்டி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் முழுமையாக விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பிக்க உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது. அதன்பேரில் கடந்த 27-ந் தேதி கோவில்பட்டி ஜெயிலில் மாஜிஸ்திரேட் பாரதிதாசன், தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் ஹேமா ஆகியோர் விசாரணை நடத்தினர். 

இதில் சிறையில் இருந்த கைதிகள் மற்றும் சிறைக் காவலர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. அதேபோன்று சிறையில் இருந்து ஆவணங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து நேற்று முன்தினம் மதியம் 12.10 மணிக்கு மாஜிஸ்திரேட் பாரதிதாசன் சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு சென்று விசாரணையை தொடங்கினார். தொடர்ந்து பல்வேறு ஆவணங்களை கேட்டு உள்ளார். அப்போது அங்கு ஏற்கனவே பணியாற்றிய எழுத்தர்உள்ளிட்ட 2 பேர் ஆவணங்களை கொடுத்ததாக கூறப்படுகிறது. அவற்றை அவர் ஆய்வு செய்தார். விடிய, விடிய நடந்த இந்த விசாரணை நேற்று அதிகாலை 4 மணிக்குமுடிந்தது.

சுமார் 16 மணி நேரம் நடந்த விசாரணைக்கு பிறகு மாஜிஸ்திரேட் காவல் நிலையத்தில் இருந்து வெளியேறினார். நேற்று சாத்தான்குளத்தில், இறந்த வியாபாரிகளின் உறவினர்களிடம் விசாரணை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதே நேரத்தில் போலீசார் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் நேற்று காலை 11.30 மணிக்கு திருச்செந்தூர் அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்தார். தொடர்ந்து சாத்தான்குளத்தில் இறந்த வியாபாரிகளின் குடும்பத்தினர் மற்றும் சாட்சி அளிப்பவர்கள் திருச்செந்தூருக்கு வரவழைக் கப்பட்டனர். அங்கு சாட்சிகள் ஒவ்வொருவராக அழைத்து விசாரணை நடத்தப்பட்டது. 

அப்போது, காவல் நிலையத்தில் வியாபாரிகள் தாக்கப்பட்டபோது, மாற்று உடை கொடுத்து விட்டு வாங்கி வைத்திருந்த ரத்தக்கறை படிந்த உடைகளை மாஜிஸ்திரேட் முன்னிலையில் உறவினர்கள் தாக்கல் செய்து உள்ளனர். முதலில் 3 சாட்சிகளிடமும், தொடர்ந்து ஜெயராஜ் மனைவி செல்வராணியிடமும் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தினார். தொடர்ந்து மற்றவர்களிடம் இரவு வரை விசாரணை நடந்தது. அப்போது சாட்சிகள் அளித்த வாக்குமூலத்தை அவர் பதிவு செய்து கொண்டார். இந்த விசாரணை அறிக்கை விரைவில் மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Anbu Communications

Black Forest Cakes
Thoothukudi Business Directory