» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தந்தை மகன் மரணம் - நடந்தது என்ன? சிசிடிவி கேமரா காட்சி வெளியானதால் பரபரப்பு

செவ்வாய் 30, ஜூன் 2020 8:35:50 AM (IST)

சாத்தான்குளத்தில் தந்தை- மகன் உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பமாக, சம்பவத்தன்று நிகழ்ந்தது தொடர்பாக, செல்போன் கடையின் அருகில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் முழுவதும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும் ஊரடங்கை மீறி, தங்களது செல்போன் கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி, சாத்தான்குளம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு கைது செய்யப்பட்டனர். பின்னர் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட2 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து மதுரை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க தமிழக அரசு பரிந்துரைத்துள்ளது.

இதற்கிடையே, சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் முதல் தகவல் அறிக்கையில், அவர்கள் 2 பேரும் ஊரடங்கை மீறி இரவு 9 மணியை கடந்தும், தங்களது செல்போன் கடையை திறந்து வைத்திருந்ததாகவும், இரவு 9.15 மணி அளவில் அங்கு சென்ற போலீசார், கடையை மூடுமாறு கூறியதாகவும், அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் தந்தையும், மகனும் சேர்ந்து போலீசாரை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்தும், தரையில் தாங்களாகவே புரண்டு தகராறு செய்ததில் காயம் ஏற்பட்டதாகவும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் போலீசாரின் முதல் தகவல் அறிக்கைக்கு மாறாக, ஜெயராஜின் பக்கத்து கடையில் இருந்த சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் நேற்று ‘வாட்ஸ்-அப்’ உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த காட்சியில், போலீசார் அழைத்ததும் செல்போன் கடை அருகில் இருந்து ஜெயராஜ் போலீஸ் வாகனத்தை நோக்கி செல்வதும், தொடர்ந்து சிறிது நேரத்தில் தனது தந்தையை போலீசார் அழைத்து செல்வதை அறிந்து பென்னிக்ஸ் கடையில் இருந்து வெளியே வருவதும், பின்னர் அவர் கடையை பூட்டி விட்டு, நண்பருடன் மோட்டார் சைக்கிளில் போலீஸ் நிலையத்துக்கு புறப்பட்டு செல்வதும் பதிவாகி இருந்தது.

மேலும், அப்போது பக்கத்து கடைகள் திறந்து இருந்ததும், செல்போன் கடை முன்பு கூட்டமும், எந்தவித தகராறும் நடைபெறவில்லை என்பதும் பதிவாகி உள்ளது. இது போலீசாரின் முதல் தகவல் அறிக்கைக்கு முற்றிலும் மாறாக உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். சாத்தான்குளத்தில் தந்தை-மகன் உயிரிழந்த விவகாரத்தில் போலீசாரின் முதல் தகவல் அறிக்கைக்கு மாறாக வெளியான சி.சி.டி.வி. கேமரா காட்சி இந்த வழக்கில் திடீர் திருப்பத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Anbu CommunicationsBlack Forest Cakes


Thoothukudi Business Directory