» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாஸ்க் அணியாததால் வாலிபரை கொடூரமாக தாக்கிய போலீஸ் : எஸ்டிபிஐ கண்டனம்

ஞாயிறு 28, ஜூன் 2020 9:28:45 AM (IST)முகக்கவசம் அணியாத காரணத்தால்  காயல்பட்டினம் இளைஞரை கொடூரமாக தாக்கிய ஆறுமுகநேரி காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ கட்சி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; சாத்தான்குளம் காவல்நிலைய சித்திரவதை படுகொலைகள் மிகப்பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறுமுகநேரி காவல்நிலையத்திலும் காயல்பட்டினத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மீது நிகழ்த்தப்பட்ட மனித உரிமைக்கு எதிரான தாக்குதல் காரணமாக, அவர் இன்று மிகவும் பரிதாபகரமான முறையில் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். காவல்துறையின் மனிதத் தன்மையற்ற இந்த தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியது.

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்த 32 வயது ஹபீப் முகமது என்பவர் கடந்த ஜூன்.09 அன்று  காயல்பட்டினம் குத்துக்கல் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கொரோனா கட்டுப்பாட்டு பகுதி வழியாகவும், முகக்கவசம் அணியாமலும் சென்ற காரணத்திற்காக, ஹபீப் முகமது ஆறுமுகநேரி காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்டு கடுமையான முறையில் சித்திரவதை தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதல் காரணமாக அவரின் சிறுநீரகம் மிகவும் பாதிக்கப்பட்டு, நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், தற்போது டயாலிஸிஸ் சிகிச்சை பெற்று வருகிறார்.

காவல்துறையினரின் மிரட்டல் காரணமாக இதுகுறித்து ஹபீப் முகமது குடும்பத்தினர் புகார் தெரிவிக்க அஞ்சியுள்ளனர். எனினும், ஹபீப் முகமதுக்கு நிகழ்த்தப்பட்ட தாக்குதல் குறித்த தகவல்கள் வெளியேவர, அதுகுறித்த செய்தி இன்றைய (ஜூன்.27) டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் வெளியாகியுள்ளது. முன்னதாக தாக்குதலை அடுத்து உடல்நலம் பாதிக்கப்பட்ட ஹபீப் முகமது அன்றைய தினமே காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு சென்று தனக்கு எவ்வாறு இந்த காயங்கள் ஏற்பட்டன என்பதனை தெரிவித்து சிகிச்சை பெற்றுள்ளார்.  காயல்பட்டினம் அரசு மருத்துவமனையின் விபத்துக்கள் பதிவேட்டில் ஆறுமுகநேரி காவல்நிலையத்தில் 4 பேர் சேர்ந்து தாக்குதல் நடத்தியதாக ஹபீப் கூறியது பதிவாகியுள்ளது.

அப்போது அங்கு வந்த காவல்துறையினர் ஹபீப் முகமது குடும்பத்தினரை மிரட்டி  மருத்துவ உதவி கிடைக்கச் செய்யாத சூழலை உருவாக்கியுள்ளனர். தொடர்ந்து  சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குச் செல்ல 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்ட நிலையில், காவல்துறையினரின் நிர்பந்தத்தினால் ஹபீப் முகமதுவை அழைத்துச் செல்லாமல் ஆம்புலன்ஸ்  திரும்பி சென்றுள்ளது.

அதனைத் தொடர்ந்து ஹபீப் முகமது நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தற்போது சிறுநீரகம் பாதிக்கப்பட்டு டயாலிஸிஸ் செய்யும் நிலைக்கு அவர் சென்றுள்ளார். இதற்காக அவரது குடும்பத்தினர் லட்சங்களை செலவு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது,  நடந்த சம்பவம் குறித்து விசாரிக்க  துணை கண்காணிப்பாளர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு தெரிவித்துள்ளார்.

சாத்தான்குளம் சம்பவமும், ஆறுமுகநேரி காவல்நிலைய சம்பவமும் கொரோனா நடவடிக்கை பேரில் காவல் அதிகாரிகள் மேற்கொண்ட அடாவடி அதிகார துஷ்பிரயோகமாகும். சாதாரண எச்சரிக்கை விடுத்து பிரச்சினையை முடிக்க வேண்டிய காவல்துறை அதிகாரிகள், தங்களுக்கு எதிரான பொதுமக்களின் கேள்விகளை கிரிமினல் குற்றமாகக் கருதியும், ஊரடங்கு நடவடிக்கைகளை மீறுபவர்கள் மீதும் மனித உரிமைக்கு எதிரான மிருகத்தனமான தாக்குதலை தொடுத்த காரணத்தால், சாத்தான்குளத்தில் அப்பாவிகள் இருவரின் உயிரைப் பறித்துள்ளனர். அதேபோல் காயல்பட்டினத்தில் அப்பாவி ஒருவரை நடைபிணமாக்கியுள்ளனர்.

காயல்பட்டினம் இளைஞர் மீதான தாக்குதல் குறித்து மாவட்ட எஸ்.பி. நேரடியாக விசாரணை நடத்த வேண்டும். ஏனெனில், ஹபீப் முகமது மீது தாக்குதல் நடத்திய காவல்நிலைய ஆய்வாளர் சாந்தி மற்றும் துணை ஆய்வாளர் சரவணன் ஆகியோர் வழக்கமாகவே அனைவரையும் ஒருமையில் பேசியும், மத அடையாளங்களை குறிப்பிட்டு முஸ்லிம் விரோத போக்குடன் நடந்துகொள்பவர்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது. அதனடிப்படையிலேயே ஹபீப் முகமது மீது இரண்டு அதிகாரிகளும் மூன்று காவலர்களும் இணைந்து மிருகத்தனமான தாக்குதலை நடத்தியுள்ளனர். 

ஆகவே, தாக்குதல் தொடர்பாக தமிழக அரசு வழக்குப் பதிவு செய்து நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். தாக்குதலில் தொடர்புடைய காவல் ஆய்வாளர் சாந்தி, துணை ஆய்வாளர் சரவணன் மற்றும் 3 காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட இளைஞர் ஹபீப் முகமதுவின் அனைத்துவிதமான மருத்துவச் செலவுகளையும் அரசே ஏற்பதோடு, ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்


மக்கள் கருத்து

M.sundaramJun 28, 2020 - 12:37:24 PM | Posted IP 108.1*****

Some thing is wrong with the police personnel's attitude towards the public while discharging their responsibility during duty.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Black Forest Cakes
Anbu CommunicationsThoothukudi Business Directory