» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பஸ்சில் வந்த பயணிகளுக்கு கரோனா பரிசோதனை: 4 மணி நேரம் காத்திருக்க வைத்ததால் பரபரப்பு!!

புதன் 3, ஜூன் 2020 6:59:46 AM (IST)

நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் இருந்து குமரிக்கு பஸ்சில் வந்த பயணிகளுக்கு கரோனா பரிசோதனை செய்வதற்காக 4 மணி நேரம் காத்திருக்க வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், 68 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் நேற்று முன்தினம் முதல் அரசு பஸ்கள் ஓடத் தொடங்கின. கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முதல் பஸ்கள் இயக்கப்பட்டன. அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை பின்பற்றி, குமரி மாவட்டத்தில் பஸ்களில் பயணிகள் ஏற அனுமதிக்கப்பட்டனர். 

குமரி மாவட்டத்தில் இருந்து நெல்லை, தூத்துக்குடிக்கு பயணிகள் உற்சாகத்துடன் புறப்பட்டு சென்றனர். அவர்களுக்கு எந்தவொரு தடங்கலும் இல்லை. ஆனால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட இடங்களில் இருந்து குமரி மாவட்டத்துக்கு பஸ்களில் வந்த பயணிகளை ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தினர். அங்கு பயணிகளின் பெயர் விவரங்களை சேகரித்து, அவர்களை அறிஞர் அண்ணா கல்லூரிக்கு அழைத்து சென்று, கரோனா பரிசோதனை நடத்தினர்.

இதனால் அனைத்து பயணிகளும் கரோனா பரிசோதனைக்காக சுமார் 4 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து காலையில் வேலைக்கு செல்வதற்காக வந்த அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு வேலைக்கு செல்ல முடியாததால் கடும் அவதிக்கு ஆளானார்கள். அப்போது சோதனைச்சாவடியில் இருந்த குமரி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு) ராஜாமணியிடம் பயணிகள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே குமரி மாவட்டத்துக்கு பஸ்களில் வந்த பயணிகளில் பலர், தங்களது உறவினர்களை சோதனைச்சாவடிக்கு வரச்சொல்லி, அவர்களின் வாகனங்களில் ஏறி, கரோனா பரிசோதனையில் இருந்து தப்பி சென்றனர். மேலும் சிலர் சோதனை சாவடியில் இருந்து கரோனா பரிசோதனைக்கு செல்லாமல், அருகில் உள்ள பஸ் நிறுத்தத்துக்கு சென்று, அங்கிருந்து டவுன் பஸ் மூலம் நாகர்கோவிலுக்கு சென்றனர். மேலும் பயணிகளை பரிசோதனைக்காக இறக்கி விட்டதும், அரசு பஸ்கள் ஆரல்வாய்மொழி பஸ் நிலையத்துக்குள் கொண்டு போய் நிறுத்தப்பட்டன. பயணிகள் பரிசோதனை முடிந்து வந்ததும், அவர்களை ஏற்றி கொண்டு பஸ் நாகர்கோவிலுக்கு புறப்பட்டு சென்றது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Black Forest Cakes

Anbu Communications


Thoothukudi Business Directory