» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு ஒரே தீர்வு சமூக விலக்கு : அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேட்டி

புதன் 25, மார்ச் 2020 5:17:35 PM (IST)கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு ஒரே தீர்வு மருத்துவத்தை விட மக்கள் அதிகமாக கூடாமல் சமூக விலகலோடு இருக்க வேண்டும் என்பதுதான் என அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பழைய நகராட்சி அலுவலக வளாகத்தில் மகளிர் திட்டத்தின் மூலம் கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக முகமூடி (மாஸ்க்), சோப்பு ஆயில், கிளினர் (லைசால்), கை கழுவும் திரவம் ஆகிய பொருட்கள் விற்பனை அங்காடி திறப்பு நிகழ்ச்சி இன்று (25.03.2020) நடைபெற்றது. நிகழ்ச்சியில் சென்னையில் இருந்து வருகை தந்து உடனடியாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்துகொண்டு அங்காடியை திறந்து வைத்தார். மேலும், கோவில்பட்டி நகராட்சி பேருந்து நிலைய பகுதியில் நடைபெறும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.  

பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: உலக நாடுகளை அச்சுறுத்துகின்ற கரோனா வைரஸ் உலகில் உள்ள 195 நாடுகளில் 9 நாடுகளை தவிர 186 நாடுகளில் கரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. கொரனோ வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கைகளில் அனைத்து நாடுகளும் மேற்கொண்டு வருகிறது. பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி மற்றவர்களுக்கு பரவாமல் தடுப்பதோடு அவர்களையும் காப்பாற்றும் பணிகள் செய்யப்படுகிறது. இந்தியாவில் கரோனா பரவாமல் தடுக்க வெளிநாடுகளில் வரும் விமானங்கள், கப்பல்கள் மற்றும் ரயில் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன. கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு ஒரே தீர்வு மருத்துவத்தை விட மக்கள் அதிகமாக கூடாமல் சமூக விலகலோடு இருக்க வேண்டும் என்பதுதான். இன்று பாராளுமன்றமும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

சட்டமன்றமும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து தொழிற்சாலைகளும், அலுவலகங்களும் இயங்காமல் மக்களின் அத்யாவசிய தேவைகளுக்கு மட்டும் குறைந்த அளவில் பணிபுரிய வேண்டும் என்று பாரத பிரதமர் அவர்களும், தமிழகத்தில் முதலமைச்சர் அவர்களும் வலியுறுத்தியுள்ளார்கள்.  பாரத பிரதமர் அவர்களின் கோரிக்கையை ஏற்று மக்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு உத்தரவை நல்ல முறையில் கடைபிடித்தார்கள். மருத்துவ பணியாளர்கள், செவிலியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களை பாராட்ட வேண்டும். தான் இன்று அர்ப்பணிப்பு உணர்வோடு கடவுளாக பணியாற்றி வருகிறார்கள். இன்று நாடே முடங்கியுள்ள நிலையில் துப்புரவு பணியாளர்கள் நாட்டினை காக்க வேண்டும் என்றும், நாட்டு மக்களை காக்க வேண்டும் என்றும் அர்ப்பணிப்பு உணர்வோடு கடவுளாக பணியாற்றி வருகிறார்கள். 

தமிழக முதலமைச்சர் சட்டமன்றத்தில், பொதுமக்களின் பொருளாதார இழப்பீட்டினை தீர்ப்பதற்காக ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் ரூ.1,000/- ரொக்கமும், வருகின்ற மாதத்திற்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட ரேசன் பொருட்களை விலையில்லாமல் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்கள். மேலும் இயற்கை பேரிடர் நிதியில் இருந்து ரூ.500 கோடி வரை ஒதுக்கியுள்ளார்கள். மேலும் எவ்வளவு தேவைப்பட்டாலும் ஒதுக்குவேன், மக்கள் பாதிக்கப்படக்கூடாது அடித்தட்டு மக்கள் ,அமைப்புசாரா தொழிலாளர்கள் எவ்விதத்திலும் பாதிக்கப்படக்கூடாது என்பதுடன் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்கும் தீர்வு காணவும் தமிழக முதலமைச்சர் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதால்தான் தமிழகத்தில் கரோனா வைரஸ் தாக்கம் குறைவாக உள்ளது. நமது மாவட்டத்தில் 41 வருவாய் கோட்டங்கள் இருக்கின்றன. அந்த கோட்டங்கள் மூலமாக முழுமையாக கணக்கெடுக்ப்பட்டு சுமார் 600 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றன.  

வருவாய் துறை ஊழியர்கள், மருத்துவ துறை ஊழியர்கள், காவல் துறையினர் மற்றும் உள்ளாட்சி துறையினர் ஆகிய நான்கு துறையை சேர்ந்தவர்கள் வீடு வீடாக சென்று கணக்கெடுத்து இந்த 600 குடும்பங்கள் கண்டறியப்பட்டிருக்கின்றன.  வெளியே தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என்று கட்டுப்படுத்தப் பட்டிருக்கிறார்கள். எனவே தமிழகத்தில் கரோனா வைரஸ் தாக்கம் குறைவாக உள்ளது. நமது மாவட்டத்தில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் இதுவரை ஒரு நோயாளி கூட கரோனா வைரஸ் பாதிப்பில் வராவிட்டாலும் தனியாக வார்டு அமைக்கப்பட்டு அங்கு மருத்துவர்களும், செவிலியர்களும் தயார் நிலையில் உள்ளனர். மருத்துவமனை முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு முழு கட்டுப்பாட்டில் உள்ளது. தூத்துக்குடியில் மகளிர் திட்டத்தின் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாயிலாக முகமூடி (மாஸ்க்), சோப்பு ஆயில், கிளினர் (லைசால்), கை கழுவும் திரவம் ஆகிய பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை அங்காடி இன்று காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

தற்போது கோவில்பட்டி நகராட்சி பழைய அலுவலக வளாகத்தில் முகமூடி (மாஸ்க்), சோப்பு ஆயில், கிளினர் (லைசால்), கை கழுவும் திரவம் விற்பனை அங்காடி திறக்கப்பட்டு மக்களுக்கு குறைந்த விலையில் வழங்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டி, சாத்தான்குளம், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், ஆழ்வார்திருநகரி, புதூர், திருவைகுண்டம், கயத்தாறு, செய்துங்கநல்லூர், உடன்குடி உள்ளிட்ட 14 இடங்களில் மகளிர் திட்டத்தின் மூலம் கரோனா வைரஸ் தடுப்புக்கு தேவைப்படும் பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க விற்பனை செய்யப்படும். அரசு எத்தகைய நடவடிக்கை எடுத்தாலும் மக்கள் சுய கட்டுப்பாட்டுடன் இருந்தால்தான் கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும், பாரத பிரதமர் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளார்கள். மக்கள் ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என்று கைகூப்பி வேண்டி கேட்டுக்கொண்டுள்ளார்கள். எனவே அரசின் உதவியோடு மக்களின் பங்களிப்போடு இந்தியாவிலும், தமிழகத்திலும் கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

முன்னதாக சென்னையில் இருந்து வருகை தந்தவுடன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வார்டு பகுதியை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் பார்வையிட்டார். மேலும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை பாராட்டினார். மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். நிகழ்ச்சியில் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் விஜயா, துணை இயக்குநர் சுகாதார பணிகள் (பொறுப்பு) மரு.அனிதா, மகளிர் திட்டம் திட்ட அலுவலர் ரேவதி, கோவில்பட்டி நகராட்சி ஆணையர் ராஜாராம், காவல் துணை கண்காணிப்பாளர் ஜெபராஜ், முக்கிய பிரமுகர்கள் அய்யாத்துரைபாண்டியன், விஜயபாண்டியன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து

இவன்Mar 27, 2020 - 08:36:23 PM | Posted IP 162.1*****

மீன்கள் ஏற்றுமதியால் மக்களுக்கு நல்ல மீன்கள் கிடைக்காமல் போனதற்கு காரணம் , தூத்துக்குடி மக்களுக்கு ஊட்டச்சத்து இல்லாமல் இருக்க காரணம் , காசுக்காக மட்டும் வெளிநாட்டுக்கு அனுப்புவதுதான் ... கார்போரேட் கம்பெனிகளை தடை செய்ய வேண்டும் , அப்படி தடை செய்தால் மக்களுக்கு குறைந்த விலையில் நிறைய மீன்கள் கிடைக்கும்...

தூத்துகுடியன்Mar 25, 2020 - 06:41:21 PM | Posted IP 173.2*****

எல்லாம் சரி சார்.....இன்று மீன், நண்டு ஏற்றுமதி நிறுவனங்கள் பல செயல்பட்டதே அதன் மீதும் நடவடிக்கை எடுங்கள் ..பணியாளர்கள் அதிகமாக ஒரே இடத்தில நின்று வேலைசெய்வார்கள் அங்கே .....நோய் தோற்று அதிகம் ஏற்பட வாய்ப்புஉள்ளது ...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

சேகர தலைவரை தாக்கிய முன்னாள் ஊழியர் கைது

புதன் 30, செப்டம்பர் 2020 11:02:19 AM (IST)

Sponsored Ads


Anbu Communications
Black Forest Cakes
Thoothukudi Business Directory