» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு இல்லை : விழிப்புணர்வுடன் இருக்க ஆட்சியர் அறிவுறுத்தல்

வெள்ளி 13, மார்ச் 2020 5:28:11 PM (IST)தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு ஏதும் இல்லை என்றாலும், அன்டை மாநிலமான கேரளத்தில் பாதிப்புள்ளதால் நாம் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார். 

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா காய்ச்சல் பராவாமல் தடுக்கும் வழிமுறைகள் மற்றும் விழிப்புணர்வு தொடர்பாக அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்களுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியர் சந்தீப் நந்தூரி,  தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் மருத்துவத்துறை அலுவலர்கள், கரோனா காய்ச்சல் பாதிப்புகள் மற்றும் முன்னெச்சரிக்கை தொடர்பாக அரசு மேற்கொண்டுள்ள விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்பாகவும், மருத்துவமனைகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் விளக்கமாக எடுத்து கூறினர்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது: உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கரோனா காய்ச்சல் பரவி பல்வேறு உயிர்சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் இதுவரை 78 நபர்களுக்கு கரோனா காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவர் இறந்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு ஏதும் இல்லை. இதுவரை வெளிநாடுகளுக்கு சென்று வந்த நபர்கள் மூலம் தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டாலும், சாதாரண மக்களுக்கு பரவ விடாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளது. 

மருத்துவமனைகளில் கிருமி நாசினிகளை கொண்டு முழுமையாக துடைத்து சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். மருத்துவமனையில் பணிபுரியும் அனைத்து பிரிவு பணியாளர்களுக்கும் கரோனா தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய சுகாதார நடவடிக்கை தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். மேலும் பொதுமக்கள் அவசியமில்லாமல் அதிக கூட்டமான இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு வரும் காய்ச்சல் நோயாளிகளிடம், அவர் வெளிநாட்டுக்கு சென்று வந்தாரா என்ற பயண விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும். 

கரோனா உறுதி செய்யப்பட்டால் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவர் சந்தித்த நபர்களையும் பரிசோதிக்க வேண்டும். மருத்துவமனைகளில் தேவையான கிருமி நாசினிகள், மாஸ்குகள் இருப்பில் வைக்க வேண்டும். பொதுமக்களுக்கு தன் சுத்தம் பேணுதல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கரோனா காய்ச்சல் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படும் நபர்களுக்கென வார்டுகளை ஏற்படுத்த வேண்டும்.  தடுப்பு உபகரணங்கள் மற்றும் மாத்திரை, மருந்துகளை தேவையான அளவு இருப்பில் வைக்க வேண்டும். கரோனா குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா காய்ச்சல் பாதிப்பு ஏதும் இல்லை. 

அன்டை மாநிலமான கேரள மாநிலத்தில் பாதிப்புள்ளதால் நாம் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தனியார் மருத்துவமனைகள் மருத்துவத்துறை அலுவலர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும். கரோனா பாதிப்பு குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு உடனுக்குடன் தகவல் அளிக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா காய்ச்சல் பாதிப்புகள் ஏதும் இல்லாத நிலையையும், விழிப்புணர்வையும் உருவாக்க வேண்டும் என பேசினார். கூட்டத்தில், மருத்துவ பணிகள் இணை இயக்குநர் மரு.பரிதாசெரின், தூத்துக்குடி துணை இயக்குநர் (சுகாதார பணிகள்)கிருஷ்ணலீலா, அரசு மருத்துவமனை மருத்துவர்கள், தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவர்கள், தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Anbu CommunicationsThoothukudi Business Directory