» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு : அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்

ஞாயிறு 5, ஜனவரி 2020 5:09:29 PM (IST)தூத்துக்குடி மாவட்டத்தில் 4.79 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.50.25 கோடி மதிப்புள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் பொங்கல் ரொக்கத்தொகை ரூ.1,000 வழங்கும் பணிகளை கழுகுமலையில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ துவக்கி வைத்தார். மேலும், விலையில்லா 3,77,623 சேலைகள், விலையில்லா 3,77,271 வேட்டிகள் ரூ.4.18 கோடி மதிப்பில் வழங்கும் பணிகளையும் துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை மற்றும் வானரமுட்டி நியாய விலைக்கடைகளில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் வேட்டி, சேலைகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தலைமையில் இன்று (05.01.2020) நடைபெற்றது. இவ்விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்துகொண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் வேட்டி, சேலைகளை பயனாளிகளுக்கு வழங்கி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் வழங்கும் பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசியதாவது: தமிழ்மொழி பேசும் மக்கள் அனைவரும் சாதி, மத பேதமின்றி கொண்டாடும் ஒரே விழா பொங்கல் விழாவாகும். ஏழை, எளிய மக்களும் பொங்கல் பண்டிகையை இனிமையாக பொங்கல் வைத்து சிறப்போடு கொண்டாடும் வகையில் புரட்சித்தலைவி அம்மா தாயாக இருந்து தமிழக மக்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தினை கொண்டு வந்தார்கள். 

பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.100 ரொக்கமும் வழங்கினார்கள். புரட்சித்தலைவி அம்மா நம்மை விட்டு பிரிந்தவுடன் கொண்டு வந்த பல்வேறு திட்டங்கள் இனி தொடர்ந்து செயல்படாது என ஒருசிலர் கூறி வந்தனர்.  அம்மா வழியில் வந்த தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் சிறப்பாக செயல்படுத்தியதுடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டத்தையும் வழங்கி ரூ.1,000/- வழங்கிடவும் உத்தரவிட்டார்கள். அதனடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் அரிசி பெறும் 2 கோடியே 63 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000/- மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இத்திட்டம் சுமார் ரூ.2,363 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்த மறுதினமே அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணிகளை தொடங்கி வைத்துவிட்டு வரவேண்டும் என்று உத்தரவிட்டதன் அடிப்படையில் இன்று கழுகுமலை மற்றும் வானரமுட்டியில் வழங்கப்பட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பொங்கல் பரிசு வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை அனைவரும் பொங்கலிட்டு சிறப்பாக கொண்டாட வேண்டும் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் பேசினார்.

விழாவில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது: தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையை இனிமையாக கொண்டாடும் வகையில் தமிழக அரசால் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி சேலைகள் வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசு தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர்ந்த திராட்சை, 5 கிராம் ஏலக்காய், 2 அடி கரும்புத்துண்டு, இதற்கென வடிவமைக்கப்பட்ட துணிப்பை மற்றும் பொங்கல் ரொக்க பணம் ரூ.1,000/- ஆகியவை அடங்கிய பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறது.  இத்திட்டத்தின்கீழ், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 957 நியாய விலைக்கடைகளில் இணைக்கப்பட்டுள்ள 4,78,877 தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு மொத்தம் ரூ.50.25 கோடி மதிப்புள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் பொங்கல் ரொக்கத்தொகை ரூ.1,000/- ஆகியவை வழங்கப்பட உள்ளது.

தமிழக அரசின் விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டத்தின்கீழ், தூத்துக்குடி வட்டத்தில் 89,019 சேலைகள், 88,834 வேட்டிகள், திருவைகுண்டம் வட்டத்தில் 26,874 சேலைகள், 26,760 வேட்டிகள், திருச்செந்தூர் வட்டத்தில் 49,197 சேலைகள், 49,197 வேட்டிகள், ஏரல் வட்டத்தில் 30,358 சேலைகள், 30,365 வேட்டிகள், சாத்தான்குளம் வட்டத்தில் 21,215 சேலைகள், 21,220 வேட்டிகள், கோவில்பட்டி வட்டத்தில் 54,636 சேலைகள், 54,574 வேட்டிகள், ஓட்டப்பிடாரம் வட்டத்தில் 26,177 சேலைகள், 26,176 வேட்டிகள், விளாத்திகுளம் வட்டத்தில் 33,673 சேலைகள், 33,677 வேட்டிகள், எட்டயபுரம் வட்டத்தில் 18,232 சேலைகள், 18,226 வேட்டிகள், கயத்தார் வட்டத்தில் 28,242 சேலைகள், 28,242 வேட்டிகள் என மொத்தம் 3,77,623 சேலைகள், 3,77,271 வேட்டிகள் ரூ.4 கோடியே 18 லட்சம் மதிப்பில் வழங்கப்படுகிறது. பொதுமக்கள் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி, சேலைகளை பெற்று பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் விஜயா, மாவட்ட வழங்கல் அலுவலர் அமுதா, தூத்துக்குடி மண்டல இணைப்பதிவாளர் ரவிசந்திரன், தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் கணேஷ்பாண்டியன்,மாவட்ட கூட்டுறவு அச்சக தலைவர் அன்புராஜ், வட்டாட்சியர்கள் பாஸ்கரன் (கயத்தார்), மணிகண்டன் (கோவில்பட்டி), வானரமுட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் சுந்தர்ராஜ், கழுகுமலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் முத்தையா, கோவில்பட்டி கூட்டுறவு சரக துணை பதிவாளர்கள் ஜெயசீலன் (சரகம்) ரவிசந்திரன் (பொ.வி.நி.) மற்றும் முக்கிய பிரமுகர்கள் கருப்பசாமி, முத்துராஜ், வண்டானம் கருப்பசாமி, கப்பல் ராமசாமி, அலங்காரபாண்டியன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Anbu Communications
Thoothukudi Business Directory