» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நெற்பயிரில் ஆனைக்கொம்பன் ஈ தாக்குதலைக் கட்டுப்படுத்த வழிமுறைகள் - ஆட்சியர் தகவல்!!

வியாழன் 12, டிசம்பர் 2019 12:50:44 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் நெற்பயிரில் ஆனைக்கொம்பன் ஈ தாக்குதலைக் கட்டுப்படுத்த மேலாண்மை முறைகளை பின்பற்றிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இந்த பூச்சியானது மஞ்சள் கலந்த பழுப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறமாகவும், கொசுவை போல சிறியதாகவும், நீண்ட மெல்லிய கால்களுடன் இருக்கும். இதன் வாழ்க்கை சுழற்சியானது 14 - 21 நாட்களை கொண்டது. 

இந்த ஈ தாக்குதலினால் நெற்பயிரில் தூர்களுக்கு பதிலாக கொம்பு போன்ற கிளைப்புகள் வெண்மை நிறத்திலோ அல்லது இளஞ்சிவப்பு நிறத்திலோ வெங்காய இலையைப்போல் தோன்றும். பார்ப்பதற்கு யானையின் கொம்பை போன்ற தோற்றம் இருக்கும். தாய் ஈக்கள் சராசரியாக 100 முதல் 150 முட்டைகள் வரை இலைகள், தாள்களின் மேல்புறம் இடும். இதிலிருந்து வரும் புழுக்கள் நெற்பயிர்களின் குருத்துகளை துளைத்து குழல்களாக மாற்றிவிடும். இதனால் பயிரின் தூர்களில் நெற்கதிர்கள் உருவாகாமல் விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு ஏற்படும். நெல் நடவு செய்த 35 முதல் 45 நாட்களில் இந்த பூச்சியின் தாக்கம் அதிகம் காணப்படும்.

ஆனைக்கொம்பன் ஈ (Gall midge) தாக்குதலில் இருந்து நெற்பயிர்களைப் பாதுகாக்க, பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: நெல் வயலில் களைகள் இல்லாமல் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். விளக்குப் பொறிகளை வைத்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். பரிந்துரைக்கப்பட்ட அளவுக்கு மேல் தழைச்சத்து உரங்களைப் பயன்படுத்தக் கூடாது. பரிந்துரைக்கப்பட்ட அளவு பொட்டாஷ் உரத்தினை இட வேண்டும். ஆனைக்கொம்பனின் இயற்கை எதிரிகளான நீளதாடை சிலந்தி, ஊசித்தட்டான் குளவி போன்றவற்றை அழியாமல் பாதுகாக்க வேண்டும்.

10 சதவீதத்துக்கும் மேல் தாக்குதல் தென்பட்டால், இராசாயன கொல்வி மருந்துகளான கார்போசல்பான் 25% EC -400மி.லி அல்லது பிப்ரோனில் 5% SC -500கிராம் அல்லது பிப்ரோனில் 0.3% G -10 கிலோ அல்லது பிப்ரோனில் 0.3% G -10 கிலோ அல்லது குளோர்பைரிபாஸ் 20% EC -500மி.லி அல்லது பாசலோன் 35% EC -600 மி.லி அல்லது தயோமீதாக்ஸம் 25% WG-40 கிராம் அல்லது குயினைல்பாஸ் 5% G-2 கிலோ என ஏதாவது ஒரு மருந்தை ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

விவசாயிகள் பரிந்துரைக்கப்பட்ட வழிமுறைகளை ஒருங்கிணைத்து பின்பற்றினால் நெற்பயிரில் ஆனைக்கொம்பன் தாக்குதலை முற்றிலும் கட்டுப்படுத்தலாம். மேலும் தங்கள் பகுதி வேளாண் உதவி அலுவலர் அல்லது வேளாண் அலுவலரை தொடர்பு கொண்டு மேல் விவரங்களை பெற்று உடனடியாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Thalir Products


Nalam PasumaiyagamThoothukudi Business Directory