» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்கள் சிறப்பாக செயல் படுத்தப்படுகிறது: அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தகவல்

வியாழன் 21, நவம்பர் 2019 3:17:33 PM (IST)தமிழகத்தில் மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது என அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்தார்..
 
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் முடுக்குமீண்டான் பட்டியில் மத்திய களவிளம்பரத்துறை மூலம் மத்திய மாநில அரசு திட்டங்களை பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த சிறப்பு விழிப்புணர்வு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ துவக்கி வைத்தார். விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் போ.சின்னப்பன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது: தமிழகத்தில் மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. குறிப்பாக மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டம் தமிழகத்தில் மற்ற மாநிலங்களை காட்டிலும் மிக சிறந்த முறையில் செயல்படுத்தப்பட்டதற்கு மத்திய அரசு விருது வழங்கியுள்ளது. 

புரட்சித்தலைவி அம்மா வழியில் தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து திட்டங்களையும் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். தூய்மை பாரத திட்டத்தினை தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தியமைக்காக இந்திய அளவில் 7வது இடத்தையும், தென்னிந்திய அளவில் 2வது இடத்தையும் பெற்று மத்திய அரசின் ஸ்வச் சர்வேகாஷன் கிராமீன் விருதினை பெற்று சிறப்பு சேர்த்துள்ளார்கள். அரசின் நலத்திட்டங்கள் பொதுமக்களுக்கு நமது விவசாய முதலமைச்சர் வாறி வழங்கி வருகிறார்கள். புரட்சித்தலைவி அம்மா கொண்டு வந்த மழைநீர் சேகரிப்பு திட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு அனைத்து வீடுகளிலும் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தினை தற்போது மத்திய அரசு இந்தியா முழுவதும் செயல்படுத்தியுள்ளது. 

தமிழ்நாடு முதலமைச்சர் குடிமராமத்து திட்டத்தினால் குளங்கள், ஏரிகள், கண்மாய்கள் ஆழப்படுத்தப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டு வரத்து கால்வாய்கள் தூர்வாரப்பட்டதால் இன்று அனைத்து குளம், குட்டைகளும் நிரம்பி வழிகிறது. சுகாதாரத்துறை அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதால் மத்திய அரசின் 7 விருதுகளை பெற்றுள்ளது. உணவு தானிய உற்பத்தியில் தமிழகம் தொடர்ந்து முதல் நிலையில் விளங்குவதால் மத்திய அரசின் கிருசி கர்மான் விருது தொடர்ந்து 5 ஆண்டுகளாக பெற்று வருகிறது. கோவில்பட்டி பகுதியில் அதிக அளவு தீப்பெட்டி தொழிற்சாலைகள் உள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை சந்தித்து தீப்பெட்டி தொழிலுக்கான ஜி.எஸ்.டி. வரியை குறைக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். 

உள்ளாட்சி துறையில் அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதால் உள்ளாட்சித்துறை அமைச்சர் மத்திய அரசின் 13 விருதுகளை பெற்று வந்துள்ளார்கள். விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் ரூ.300 கோடி மதிப்பில் தொழிற்பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதன்மூலம் இப்பகுதியில் 1000க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்த முகாமில் அரசின் நலத்திட்ட உதவிகள் குறித்தும், அவைகளை பெறுவது குறித்தும் அரசு அலுவலர்கள் விளக்கவுரையாற்ற உள்ளார்கள். நீங்கள் அனைவரும் இவைகளை தெரிந்து கொண்டு, அரசின் நலத்திட்டங்களை பெற்று பயன்பெற வேண்டும். இந்த முகாமிற்கு வராதவர்களுக்கும் இந்த முகாமின் பயன்கள் குறித்து எடுத்துச்சொல்லி அவர்களும் பெற உதவிட வேண்டும் என அமைச்சர் பேசினார். 

முன்னதாக அமைச்சர் பொதுமக்களுக்கு இலவச மரக்கன்றுகளை வழங்கினார். தொடர்ந்து நெகிழியை ஒழிப்பதற்காக துணி பைகளையும், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் கோவில்பட்டி துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) போஸ்கோ ராஜா, கள விளம்பர அலுவலர் போஸ்வெல் ஆசீர், மாவட்ட சமூக நல அலுவலர் தனலெட்சுமி, அறங்காவலர் குழு உறுப்பினர் ராமசந்திரன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் கணேஷ்பாண்டியன், நிலவள வங்கி தலைவர் இ.பி.ரமேஷ், முக்கிய பிரமுகர்கள் விஜயபாண்டியன், அய்யாத்துரை பாண்டியன், வினோபாஜி, கிருஷ்ணசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிரி, மாணிக்கவாசகம், தமிழ்நாடு கிராம வங்கி கடன் துறை அலுவலர் ரிச்சர்ட், தமிழ்நாடு வேளாண்மை அலுவலர் செல்வி.ரீனா, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சண்முகசுந்தரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Anbu CommunicationsBlack Forest CakesThoothukudi Business Directory