» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி சிவன் கோயிலில் ஐப்பசி தேரோட்டம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

புதன் 23, அக்டோபர் 2019 11:01:32 AM (IST)தூத்துக்குடி சிவன் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தேரோட்டம் இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

அருள்மிகு ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீ சங்கரராமேஸ்வரர் திருக்கோயில் என அழைக்கப்படும் தூத்துக்குடி சிவன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மற்றும் ஐப்பசி மாதங்களில் திருவிழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டுக்கான ஐப்பசி திருக்கல்யாண திருவிழா அக். 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற்றன. மேலும், அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அம்பாள் திருவீதி உலா நடைபெற்று வந்தது. விழாவின் சிகர நிகழ்வான ஐப்பசி திருக்கல்யாண தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. 

இதையொட்டி, கோயிலில் காலை 6 மணிக்கு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, 8.45 மணிக்கு அம்பாள் அலங்கரிக்கப்பட்டு திருத்தேருக்கு எழுந்தருளினார். இதையடுத்து, காலை 9.50 மணிக்கு சிவத் தொண்டர்களின் தேவார இன்னிசையுடன் தேரோட்ட நிகழ்ச்சி தொடங்கியது. கீழ ரதவீதியில் உள்ள தேரடிவீதியில் இருந்து புறப்பட்ட தேர் தெற்கு ரதவீதி, மேற்கு ரதவீதி, வடக்கு ரதவீதி வழியாக தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தில் சிலம்பாட்டம், ஒயிலாட்டம் போன்ற நாட்டுப்புற கலைநிகழ்ச்கள் நடைபெற்றது. தேரோட்ட நிகழ்ச்சியில், சிவன்கோயில் நிர்வாக அதிகாரி கிருஷ்ணமூர்த்தி, கீதாஜீவன் எம்எல்ஏ, தொழிலதிபர்கள் ஏவிஎம்வி மணி, ஏவிஎம்வி முத்துராஜ், டி.ஏ.தெய்வநாயகம், அபிராமி சந்திரசேகர், திருநாவுக்கரசர், கமலஹாசன், இ.பி.பழனியப்பன், ஓஎம் முருகன், எம்ஆர் கனகராஜ், கே.ஏ.பி. சீனிவாசன், கோட்டுராஜன், திருவனந்தன் மாரியப்பன், இந்து முன்னணி செல்வகுமார், ஏ நடராஜன், பிஎஸ்கே ஆறுமுகம், செந்தில்குமார், சுரேஷ்குமார், வைரவநாதன், மாரியப்பன், செல்வம் பட்டர், சண்முகம் பட்டர், சுப்பிரமணியன் பட்டர் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேரோட்டத்தையொட்டி, மத்தியபாகம் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் சங்கர் முன்னிலையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். 


மக்கள் கருத்து

பக்தர்களின் வேதனைOct 23, 2019 - 01:00:49 PM | Posted IP 162.1*****

தேரோட்டத்திற்காக ரத வீதிகளில் எந்த ஒரு அடிப்படை வேலைகளையும் அறநிலையத்துறை, மாநகராட்சி நிர்வாகம் செய்யவில்லை... தேரோட்டம் நடக்கும் வீதிகளில் உள்ள மரக்கிளைகளை அகற்றவில்லை.... தேரோட்ட சாலைகளில் உள்ள பள்ளங்களை ஒழுங்காக செப்பனிடவில்லை... காலனி இல்லாமல் பக்தர்கள் தேர் இழுக்கின்றனர்.....வழக்கமாக தேரோட்டத்தின் போது ரத வீதிகளில் தண்ணீர் தெளிக்கப்படும் இம்முறை அதுவும் செய்யவில்லை..... பக்தர்களுக்கு குடிக்க தண்ணீர் சரியாக ஏற்பாடு செய்யவில்லை... மொத்தத்தில் அறநிலையத்துறை பக்தர்களை தவிக்கவிட்டுவிட்டது.... காவல்துறையினர் மிகவும் சிறப்பாக செயல்பட்டனர்...பக்தர்களின் இந்த தவிப்பை பார்த்து அவர்களே அருகில் இருந்த கடைகளில் இருந்து தண்ணீரும் , குளிர்பானங்களும் பக்கதர்களுக்கு வாங்கி வழங்கினார்....காவல்துறையினர்க்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu CommunicationsBlack Forest CakesFriends Track CALL TAXI & CAB (P) LTDThoothukudi Business Directory