» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அண்ணா விருது பெற்ற உதவி ஆய்வாளருக்கு எஸ்பி வாழ்த்து

புதன் 18, செப்டம்பர் 2019 5:14:42 PM (IST)தூத்துக்குடி மாவட்டத்தில் அண்ணா விருது பெற்ற உதவி ஆய்வாளரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், வாழ்த்தினார்
.
2019ம் ஆண்டுக்கான தமிழக முதல்வர் அவர்களின் அண்ணா விருது தூத்துக்குடி மாவட்டத்தில் புதியம்புத்தூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் எஸ்.ஐ. காமராஜ், தமிழக காவல்துறையில் சிறந்த பணிக்காக 15.09.2019 டாக்டர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசு அறிவித்துள்ளது. விருது பெற்ற காமராஜ் 25.05.1988 அன்று இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்து, பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றி முதல் நிலைக் காவலர், தலைமைக்காவலர் என பதவி உயர்வு பெற்று தற்போது புதியம்புத்தூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.இவர் பணியில் சேர்ந்த நாள் முதல் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியமைக்காக இது வரை சுமார் 300 விருதுகள் பெற்றுள்ளார்.

மேலும் இவர் 2003ம் ஆண்டு முதலமைச்சர் காவலர் பதக்கமும், 2013ம் ஆண்டு இந்தியக் குடியரசு தலைவர் பதக்கமும் பெற்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறைக்கு பெருமை சேர்த்துள்ளார். இவருடைய பணிக்காலத்தில் பல காவல் நிலையங்களில் நிலைய எழுத்தராகவும், முக்கிய வழக்குகளில் புலன் விசாரணை மேற்கொள்வதில் உதவியாகவும், 1991ம் ஆண்டு கயத்தாறு காவல் நிலையத்தில் எழுத்தராக இருந்தபோது சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திருமலாபுரத்தில் ஏற்பட்ட கலவரத்தில் அரிவாளால் வெட்டி காயம்பட்ட தலைமைக்காவலர் பெருமாள் என்பவரை துரிதமாக செயல்பட்டு, அங்கிருந்து அவரை காப்பாற்றி மருத்துவமனையில் சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்தார்.

மேலும் 1992ம் ஆண்டு சில சமூக விரோதிகள் கார் ஒன்றை வாடகைக்கு பிடித்து, அந்த கார் டிரைவரை கொலை செய்து, கார் டிக்கியில் மறைத்து வைத்து பின்பு விருதுநகர் மாவட்டம் கல்லுப்பட்டி சென்று, அங்குள்ள கோவில் சிலைகளை திருடி வந்தவர்களை கைது செய்வதற்கும், கொலையுண்டவர் யார் என கண்டுபிடித்து, கொலையாளிகளை கைது செய்வதற்கும் சிறப்பாக செயல்பட்டுள்ளார்.

1996ம் ஆண்டு மணியாச்சி மற்றும் நாரைக்கிணறு பகுதிகளில் நடைபெற்ற கலவரங்களில் சி.பி.சி.ஐ.டி பிரிவில் சிறப்பாக பணியாற்றி எதிரிகளை கைது செய்;வதற்கும், புலன் விசாரணை மேற்கொள்வதற்கும் உதவியாக இருந்து சிறப்பாக பணியாற்றியுள்ளார். 

2004ம் வருடம் தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் பணிபுரிந்தபோது ஹரிகரசுதன் என்ற 7 வயது சிறுவனை கொலை செய்து சாக்கு மூடையில் கட்டி, வீட்டுக்குள் மறைத்து வைத்திருந்த எதிரியை கைது செய்து, சிறப்பாக புலன் விசாரணை மேற்கொண்டதன் மூலம் மேற்படி எதிரிக்கு நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.

மேலும் தூத்துக்குடி பழைய பேரூந்து நிலையம் அருகில் பழக்கடை உரிமையாளர் லாலா என்ற மணிவண்ணன் என்பவரை எதிரிகள் கொலை செய்து, பழக்கடை உரிமையாளரின் காரில் தப்பிச் சென்ற எதிரிகளை கைது செய்து, சிறப்பாக புலன் விசாரணை மேற்கொள்வதற்கு உதவியாக இருந்துள்ளார். இவ்வழக்கில் நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் பணிபுரிந்தபோது சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்த எதிரிகளை கைது செய்து, அவர்களிடமிருந்து 8 கை துப்பாக்கிகள் 103 தோட்டாக்களை கைப்பற்றி, எதிரிகளை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்வதற்கு உதவியாக இருந்துள்ளார்.இவர் தட்டப்பாறை காவல் நிலையத்தில் 2016ம் ஆண்டு நடந்த இரட்டை கொலை வழக்கில் எதிரியை கைது செய்து, குண்டர் தடுப்புச்சட்டத்தில் வைத்தும், சிறப்பாக புலனாய்வு செய்வதற்கு உதவியாக இருந்துள்ளதன் மூலம் மேற்படி எதிரிக்கு நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.

மேலும் இவருடைய பணிக்காலத்தில் 34 குற்றவாளிகளை குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்வதற்கு உதவியாக இருந்துள்ளார். இவருக்கு சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை தாலுகாவைச் சேர்ந்த தோணித்துறை கிராமம் ஆகும். தற்போது இவர் தூத்துக்குடியில் உள்ள ரஹ்மத் நகரில் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார். இவருக்கு சாந்தி என்ற மனைவியும், மகள்கள் சோபியா, ரோஜினா மற்றும் புஷ்பா ஆகியோர்கள் உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam PasumaiyagamCSC Computer Education

Anbu Communications

Black Forest Cakes

Thoothukudi Business Directory