» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காதல் திருமணம் செய்த போலீஸ்காரர் மர்ம மரணம் : உறவினர்கள் புகார்

திங்கள் 9, செப்டம்பர் 2019 5:46:46 PM (IST)

திருச்செந்தூர் அருகே காதல் திருமணம் செய்த போலீஸ்காரர் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் அவரது உறவினர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம் வந்த நல்லூரை சேர்ந்தவர் சந்தனகுமார் (28). இவர் சென்னை ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார். இவர் கல்லூரியில் படிக்கும் போது திருச்செந்தூர் அருகே உள்ள நாதன்கிணறு கிராமத்தை சேர்ந்த லிங்கஜோதி (25) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமுகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், லிங்க ஜோதி வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இந்நிலையில் சந்தனகுமார் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு லிங்கஜோதியை காதல் திருமணம் செய்தார். அதன் பிறகு 2 பேரும் சென்னையில் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில் லிங்க ஜோதி, தனது வீட்டில் அனைவரும் சமரசம் ஆகிவிட்டார்கள். இதனால் ஊரில் நடைபெறும் விழாவுக்கு செல்ல வேண்டும் என்று காதல் கணவர் சந்தனகுமாரை அழைத்தார். இதைத் தொடர்ந்து போலீஸ்காரர் சந்தனகுமார் விடுப்பு எடுத்து கொண்டு திருச்செந்தூர் அருகே நாதன்கிணற்றில் உள்ள தனது மனைவி லிங்கஜோதியின் வீட்டிற்கு வந்தார்.

அங்கு தங்கியிருந்த போது, போலீஸ்காரர் சந்தனகுமார் திடீரென்று மயங்கி விழுந்து விட்டார் என்று கூறி திருச்செந்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் போலீஸ்காரர் சந்தனகுமார் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். அவர் எப்படி இறந்தார், என்ன காரணம்? என்பது மர்மமாக உள்ளது. இதுபற்றி திருச்செந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீஸ்காரர் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

மருத்துவமனையில் உறவினர்கள் முற்றுகை

சந்தனகுமார் இறந்தது குறித்து அவரது உறவினர்களுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம் வந்தநல்லூரை சேர்ந்த சந்தனகுமாரின் தந்தை ஆறுமுகம் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்து நெல்லை அரசு மருத்துவமனைக்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். அவர்கள் சந்தனகுமார் சாவில் மர்மம் இருப்பதாக புகார் கூறியுள்ளனர். இது தொடர்பாக போலீசாரிடமும், கோட்டாட்சி தலைவரிடமும் புகார் செய்துள்ளனர். இந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


CSC Computer Education

Anbu CommunicationsNalam PasumaiyagamThoothukudi Business Directory