» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சினிமா தயாரிப்பாளரின் மகனை கடத்திய 6பேருக்கு ஆயுள் தண்டனை - தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு

புதன் 14, ஆகஸ்ட் 2019 8:09:35 AM (IST)

தூத்துக்குடியில் ரூ.5 கோடி கேட்டு சினிமா தயாரிப்பாளரின் மகனை கடத்திய வழக்கில் கார் டிரைவர் உள்பட 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் நேற்று தீர்ப்பு கூறியது.

தூத்துக்குடியில் பிரபல ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனம் நடத்தி வருபவரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஒருவரின் 4½ வயது மகனை, கடந்த 17-8-2011 அன்று அவரது கார் டிரைவர் கே.வி.கே.நகரை சேர்ந்த கணேசமூர்த்தி மகன் பாலகருப்பசாமி (24) என்பவர் பள்ளிக்கு அழைத்து சென்றார். மில்லர்புரம் அருகே உள்ள மையவாடி ரோட்டில் சென்றபோது, அங்கு நின்று கொண்டு இருந்த கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்த ராஜ் மகன் மாரியப்பன் என்ற அசோக் (26), புதுக்கோட்டை நல்லமலையை சேர்ந்த தங்கராஜ் பாண்டி மகன் மகேஷ் (25), பெருங்குளம் தெற்கு தெருவை சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் லட்சுமிகாந்தன் (29) ஆகியோர் காரை வழிமறித்தனர்.

அவர்கள் அந்த சிறுவனின் தந்தை நிறுவனத்துக்கு செல்ல வேண்டும் என்று கூறி காரில் ஏறினர். சிறிது தூரம் சென்றதும், திடீரென கார் டிரைவர் பாலகருப்பசாமியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, காரை கதிர்வேல்நகர் அருகே உள்ள முத்துகுமார் நகருக்கு ஓட்டி செல்லுமாறு கூறினர். அங்கு சென்றதும், அவர்கள் சிறுவனை கடத்தி ஒரு வாடகை வீட்டில் அடைத்து வைத்தனர். பின்னர் மகேஷ், டிரைவர் பாலகருப்பசாமியின் செல்போனில் இருந்து சிறுவனின் தாயை தொடர்பு கொண்டு ரூ.5 கோடி கேட்டு மிரட்டினார். அவர்கள் புதுக்கோட்டை பாலம் அருகே வந்து பணத்தை வீசி விட்டு செல்லுமாறு கூறினர். இதனால் சிறுவனின் பெற்றோர் காரில் புதுக்கோட்டைக்கு சென்றனர். அந்த காரில் போலீசார் சாதாரண உடையில் மறைந்து இருந்தனர்.

அங்கு சென்றபோது, தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்த மாடசாமி மகன் ஜெகநாதன் என்ற ஜெகன் (25), பிரையண்ட்நகரை சேர்ந்த சிவராஜ் மகன் முருகேஷ் (25) ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் சென்றவாறு சிறுவனின் பெற்றோரின் நடவடிக்கையை கண்காணித்தனர். அப்போது போலீசார் சாதாரண உடையில் இருந்ததை கண்டுபிடித்தனர். இதனால் கடத்தல்காரர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். மறுநாள் 18ம் தேதி மதியம் மதுரையில் இருந்து சிறுவனின் பெற்றோரை தொடர்பு கொண்டு பேசிய மகேஷ், மதுரை விமான நிலையம் அருகே பணத்தை கொண்டு வந்து கொடுக்க வேண்டும், உடனடியாக பணத்தை எண்ணி பார்த்து விட்டு சிறுவனை விட்டுவிடுவோம் என்று கூறினார். 

இதனால் தனிப்படை போலீசார் மதுரைக்கு விரைந்தனர். அதே நேரத்தில் சிறுவனையும், பாலகருப்பசாமியையும் பைபாஸ் ரோட்டில் இறக்கி விட்டு இருப்பதாக மகேஷ் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, 2 பேரையும் மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் கார் டிரைவர் பாலகருப்பசாமி மற்ற 5 பேருடன் சேர்ந்து சிறுவனை கடத்தியது தெரியவந்தது.இதையடுத்து தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாலகருப்பசாமி, மாரியப்பன், மகேஷ், லட்சுமிகாந்தன், ஜெகநாதன், முருகேஷ் ஆகிய 6 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குமார் சரவணன், குற்றம் சாட்டப்பட்ட பாலகருப்பசாமி உள்ளிட்ட 6 பேருக்கும் ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சுபாஷினி ஆஜர் ஆனார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes


Anbu CommunicationsThoothukudi Business Directory