» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மனுநீதி நாள் முகாமில் ரூ.32 லட்சம் நலத்திட்ட உதவி : ஆட்சியர் சந்தீப் நந்தூரி வழங்கினார்

வியாழன் 11, ஜூலை 2019 8:59:36 AM (IST)பூவானி கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் நிகழ்ச்சியில் 100 பயனாளிகளுக்கு ரூ.32.07 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டம் பூவானி கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் மாவட்ட ஆட்சியர் பொது மக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றுக்கொண்டார். மனுக்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி உடன் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். இம்முகாமில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:-தமிழக அரசு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் ஒவ்வொரு மாதமும் ஒரு கிராமத்தினை தேர்ந்தெடுத்து அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெற ஏதுவாக மனுநீதி நாள் முகாம் நடத்திட தெரிவித்துள்ளது. அவ்வகையில் இன்று திருவைகுண்டம் வட்டம் கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் பூவானி கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மனுநீதி நாள் முகாம் சிறப்பாக நடைபெற்றது.

இம்முகாம்கள் நடத்தப்படுவதன் நோக்கம் அரசின் திட்டங்களை பொதுமக்கள் அறிந்து விழிப்புணர்வு பெற்று அவைகளை பெற வேண்டும் என்பதுதான். மேலும் பொதுமக்கள் அரசு அலுவலகத்தை தேடி வந்து சிரமப்படாமல் மாவட்ட ஆட்சியர் உட்பட அனைத்து அரசு அலுவலர்களும் கிராமங்களுக்கு வருகை தந்து பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை பெற்று நிறைவேற்றுவதுதான் மனுநீதிநாள் முகாம் ஆகும். இம்மனுநீதி நாள் நடைபெறுவதையொட்டி முன்னதாக இப்பகுதியில் 82 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இதில் 34 மனுக்களுக்கு இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. 48 மனுக்கள்; மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்று நடைபெறும் விழாவில் வருவாய் துறையின் மூலம் 64 பயனாளிகளுக்கு ரூ.16.62 இலட்சம் மதிப்பிலும், சுகாதாரத்துறையின் மூலம் 3 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ரூ.2,000/- மதிப்பிலான அம்மா ஊட்டச்சத்து பெட்டகம், வேளாண்மைத்துறையின் மூலம் 3 நபர்களுக்கு ரூ.59,881/- மதிப்பில் நலத்திட்ட உதவிகளும், ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் 1 பயனாளிக்கு ரூ.8,000/- மதிப்பிலான தையல் இயந்திரம், கலால் ஆணையம் மூலம் 25 நபர்களுக்கு மறுவாழ்வு நிதியாக ரூ. 7.50 லட்சத்திற்கான காசோலை என மொத்தம் 100 பயனாளிகளுக்கு ரூ.32.07 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

கடந்த ஆண்டைவிட நடப்பு ஆண்டில் மழையின் அளவு 28 சதவிதம் குறைவாக பெய்துள்ளது. வரும் அக்டோபர் மாதத்தில் இயல்பான அளவு மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மழைநீர் சேமிப்பதற்காக குளங்களை தூர்வாரும் பணிகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலமும், சமூக பொறுப்பு நிதி மூலமும் மேற்கொள்ளப்படவுள்ளது. மத்திய அரசால் ஜல்சக்தி அபியான் திட்டம் அறிவித்துள்ளது. மேலும், குடிமராமத்து திட்டத்தின்கீழ் பல்வேறு பகுதியில் உள்ள குளங்கள், கண்மாய்கள் உள்ளிட்டவை தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் மரம் நடுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குடிமராமத்து திட்டத்தின்கீழ் இந்த ஆண்டு 37 குளங்கள் தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் 20 சிறு குளங்கள் டி.வி.எஸ். நிறுவனம் மூலமும். மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஊருக்கு நூறு கை திட்டத்தின்கீழ் குளங்களை தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. மழைநீரை சேமித்தால் நிலத்தடி நீர் அதிகரிக்கும். இதனால் மழை பெய்யாத காலத்திலும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாது. எனவே பொதுமக்கள் மழைநீரை சேமிக்கவும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். தமிழக அரசு ஒவ்வொரு துறையின் வாயிலாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் தாட்கோ திட்டத்தின்கீழ் சுயதொழில் செய்வதற்கு கடன் வழங்கி வருகிறது. இளைஞர்கள் சுயதொழில் செய்ய மாவட்ட தொழில் மையம் மூலம் கடன் உதவிகள் வழங்கி வருகிறது. 

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் 10, 12, பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு உதவித்தொகை, மகளிர் திட்டம் மூலம் வேலைக்கு செல்லும் மகளிர்களுக்கு அம்மா இருசக்கர வாகனம், கால்நடை பராமரிப்புதுறை மூலம் ஆட்டு பண்ணை, மாட்டு பண்ணை, கோழி பண்ணை, சுகாதாரத்துறை மூலம் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின்கீழ் ரூ.18,000/- நிதியுதவி 3 தவணையான வழங்கப்படுகிறது. தனியார் மருத்துவமனைக்கு நிகராக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்; தரமான சிகிச்சைகள் வழங்கப்படுகிறது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மூலம் ஊட்டச்சத்து மாவு கர்ப்பிணி தாய்மார்களுக்கும், சிறு வயது குழந்தைகைளுக்கும் வழங்கப்படுகிறது. பள்ளி கல்வித்துறை மூலம் அங்கன்வாடியுடன் கூடிய அரசு நடுநிலைப்பள்ளிகளில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி. வகுப்புகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சீருடைகள், இலவச பேருந்து பயண அட்டை, புத்தகங்கள், மடிக்கணிணிகள் இதுபோன்ற பல்வேறு திட்டங்கள் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

எனவே, தங்களது குழந்தைகளை பள்ளிகளுக்கு தவறாமல் அனுப்ப வேண்டும். நமது மாவட்டம் ஏற்கனவே திறந்தவெளி மலம் கழித்தல் அல்லாத மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து. பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும். 1.30 லட்சம் கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் வீட்டில் உள்ள கழிப்பறைகளை பயன்படுத்த வேண்டும். வீட்டில் கழிப்பறை இ;ல்லாத நபர்கள் மனு அளித்தால் கழிப்பறை உடனடியாக கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும். அரசு செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து திட்டங்களையும் பொதுமக்கள் முழுமையாக தெரிந்துகொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பேசினார்.

முன்னதாக மாவட்ட ஆட்சியர் , முகாமில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், வேளாண்மைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலமாக வைக்கப்பட்டிருந்த கண்காட்சியினை பார்வையிட்டார். இம்முகாமில் தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரான் ஜீத் சிங் கலோன், இணை இயக்குநர் (வேளாண்மைத்துறை) மகாதேவன், துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம் (பொ)) சுகுமார், துணை இயக்குநர் சுகாதார பணிகள்(தூத்துக்குடி) மரு.கீதாராணி, துணை இயக்குநர் (தோட்டக்கலைத்துறை) சரஸ்வதி, துணை ஆட்சியர் (பயிற்சி) சுப்புலட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலர் அமுதா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் கவிதா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உமாசங்கர், மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் கண்ணன், வட்டாட்சியர் சந்திரன் மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads
Anbu Communications
Black Forest CakesThoothukudi Business Directory