» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஜேசிபி, லாரிகளை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம்.

திங்கள் 20, மே 2019 8:48:09 PM (IST)கோவில்பட்டி அருகே கண்மாயில் சரள்மண் அள்ளுவதை எதிர்த்து பொது மக்கள் ஜேசிபி, லாரிகளை சிறைப்பிடித்து போராட்டம் நடத்தினர்.

கோவில்பட்டி அருகேயுள்ள ஆவல்நத்தம் கிராமத்தில் விவசாயம், குடிநீருக்கு ஆதாரமாக இருப்பது அங்குள்ள கரிசல்கண்மாய், 100ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த கண்மாயினால் ஆவல்நத்தம் கிராமத்தில் 500ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் பயன்பெற்று வந்தது மட்டுமின்றி, அந்த கிராமத்தின் நீர் ஆதாரமாக இருந்து வருகிறது. இந்த கண்மாயை ஆழப்படுத்தி சீரமைக்க வேண்டும் என்று 10 ஆண்டுகளாக இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

இந்நிலையில் கோவில்பட்டியை சேர்ந்த செல்வம் என்பவர் இந்த கண்மாயில் கரம்பைமண் அள்ள அரசிடம் அனுமதி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. தங்களது கிராமத்தில் மண் அள்ள கூடாது என்று அக்கிராம மக்கள் ஆரம்பத்தில் இருந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், சில அரசு அதிகாரிகளின் உதவியோடு அவ்வப்போது சரள் மண் அள்ளி வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் இன்று கண்மாயில் ஜேசிபி இயந்திரங்கள், லாரிகளோடு மண் அள்ள வந்தது மட்டுமின்றி, அங்கு உள்ள பாறைகளை தகர்க்க வெடி வைத்ததாக தெரிகிறது. 

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் ஜேசிபி இயந்திரம், லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே நிலத்தடி நீர் பாதிக்கப்பட்ட நிலையில் நீர் ஆதாரமாக விளங்கும் கண்மாயில் சரள்மண் அள்ளப்பட்டால் முற்றிலுமாக நிலத்தடிநீர் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும், மேலும் கண்மாயில் ஆங்காங்கே சீராக இல்லாமல் குழிகளை தோண்டி மண் எடுத்து இருப்பதால், மழைக்காலங்களில் தண்ணீர் நிரம்பும் போது, மேடு, பள்ளம் தெரியாமல் போவது மட்டுமின்றி, உயிரிழப்பு ஏற்படும் நிலை உருவாகும், இது தவிர கண்மாய்க்கு வரும் நீர்வரத்து பகுதிகளையும் அடைத்துள்ளதாகவும் குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயத்திற்கு மண் எடுக்க கேட்டால் பல கையெழுத்து கேட்டு அலைகழிக்க வைக்கும் அரசு அதிகாரிகள், எங்கள் கண்மாயில் வெடி வைத்து மண் எடுக்க அனுமதி கொடுத்துள்ளனர். 

எங்கள் ஊர் மண்ணை அடுத்த ஊரை சேர்ந்தவர்கள் எப்படி எடுக்க முடியும், மண் அள்ளுபவர்கள் எங்கள் ஊர் ஆண்கள் பிரச்சனை எதுவும் செய்யாமல் இருக்கும் வகையில் அவர்களுக்கு குவாட்டர், பிரியாணி கொடுத்து மண் அள்ளி வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து தகவல் கிடைத்ததும், தாசில்தார் பரமசிவம் நேரில் சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தினை கைவிட்டனர். கண்மாய் நீர்வரத்து பகுதியில் அடைக்கப்பட்டுள்ள மண்ணை அகற்ற தாசில்தார் உத்தரவிட்டது மட்டுமின்றி, மக்கள் புகாரை மனு அளித்தால் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes

Anbu Communications
Thoothukudi Business Directory