» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வெப்பகாற்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து புகார் அளிக்கலாம் : ஆட்சியர் தகவல்

சனி 9, மார்ச் 2019 4:06:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் கோடைகாலத்தில் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான புகார்கள்/ தகவல்களை 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் கோடை காலங்களில் வெப்பத்தின் அளவு கூடுதலாக இருக்கும் என்பதால் அனல் காற்று வீச வாய்ப்புள்ளது. இதனால் பச்சிளம் குழந்தைகள், சிறுவயது குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியவர்கள் அதிக அளவில் பாதிப்படைய வாய்ப்புள்ளது.

கோடை வெயிலினால் அதிக வியர்வை வெளியேறும் பொழுது உடலில் உப்புச்சத்து மற்றும் நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் அதிக தாகம், தலைவலி, உடல் சோர்வு, தலைசுற்றல், தசைப்பிடிப்பு, குறைந்த அளவு சிறுநீர் வெளியேற்றம், மயக்கம் மற்றும் வலிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். இதை தவிர்க்க அதிக அளவு நீர் பருக வேண்டும். தாகம் இல்லையென்றாலும் போதிய அளவு நீர் பருக வேண்டும். சூடான பானங்கள் பருகுவதை தவிர்க்கவும். அதிக அளவில் மோர், இளநீர், எலுமிச்சைபழச்சாறு மற்றும் ORS உப்புக்கரைசல் ஆகியவற்றை பருக வேண்டும். 

அனைத்து அரசு ஆரம்ப சுகாதாரநிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் போதியஅளவு ORS உப்புக்கரைசல் இருப்புவைக்கப்பட்டுள்ளது. கோடைக்காலத்தில் வியர்வை எளிதாக வெளியேறும் வகையில் மிருதுவான தளர்ந்த பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். கருப்பு வண்ண ஆடைகள் அணிவதை தவிர்க்கவும். வெயில் அதிகமாக இருக்கும் நேரமான காலை 11.00 மணிமுதல் மாலை 04.00 மணிவரை குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். 

மேலும் வெளியே வரும் பட்சத்தில் குடையை எடுத்து சென்றிட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். உடலில் நீர்ச்சத்து குறையா வண்ணம் உரிய நீர் பானங்களை கையில் கொண்டு செல்லவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் தங்களிடம் உள்ள கால்நடைகளை நிழல்தரும் இடங்களில் நிறுத்தி அதிக நீர் வழங்கிடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களில் குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகளை விட்டு செல்லக்கூடாது.

கோடை காலங்களில் குறிப்பாக வெப்பம் அதிகமாக உள்ள நாட்களில் வளிமண்டல வெப்பம் மற்றும் உலர்ந்த வானிலை காரணமாக இயற்கையாகவே காட்டுத்தீ நிகழ வாய்ப்புள்ளது. மனித செயல்களினாலும் எதிர்பாராத விதமாக காட்டுத்தீ ஏற்படுகிறது. மேலும் அறுவடை செய்யப்பட்ட வயல்களில் அதனை அழிப்பதற்கு வைக்கப்படும் தீயினாலும் காட்டுத்தீ ஏற்படுகிறது. எனவே கோடை காலங்களில் பொது மக்கள் எவரும் காட்டிற்குள் செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வெப்பம் அதிகமாக உள்ள திறந்த வெளியில் வேலை செய்யும் போது களைப்பு, மயக்கம், உடல் சோர்வு, தலைவலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவருக்கோ அல்லது ஆம்புலன்ஸ்கோ தகவல் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் வெப்பகாற்றால் ஏற்படும் பாதிப்பு தொடர்பான புகார்கள்/ தகவல்களை 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsNew Shape Tailors

Nalam Pasumaiyagam

Black Forest Cakes


Joseph Marketing

Anbu Communications


CSC Computer EducationThoothukudi Business Directory