» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அபாயகரமான துப்புரவுப் பணிகளில் எந்திரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்: ஆணைய உறுப்பினர் அறிவுறுத்தல்

திங்கள் 11, பிப்ரவரி 2019 4:38:43 PM (IST)தூத்துக்குடி மாவட்டத்தில் துப்புரவு பணியாளர்களுக்காக மேற்கொள்ளப்பட்டு திட்ட பணிகள் மற்றும் நலத்திட்டங்கள் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தேசிய துப்புரவு பணியாளர் மறுவாழ்வு ஆணைய உறுப்பினர் ஜெகதீஷ் ஹிர்மணி தலைமையில் தூத்துக்குடி மாவட்டத்தில் நகர்புற, ஊரக பகுதியில் நடைபெற்று வரும் திட்ட பணிகள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நலத்திட்ட பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் இன்று  நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேசிய துப்புரவு பணியாளர் மறுவாழ்வு ஆணைய உறுப்பினர் ஜெகதீஷ் ஹிர்மணி பேசியதாவது: தூத்துக்குடி மாநகராட்சி, கோவில்பட்டி, காயல்பட்டினம் ஆகிய நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பணியாற்றக்கூடிய துப்புரவு பணியாளர்களுக்கு பணியின்போது பாதுகாப்பிற்கு பயன்படுத்தக்கூடிய பொருட்களை நல்ல நிலையில் பராமரிக்க வேண்டும், 

துப்புரவு பணியாளர்களின் பாதுகாப்பிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். அவர்களுக்கு பல்வேறு வகையிலான நோய் பாதிப்புகள் வர வாய்ப்பு உள்ளதால் மருத்துவ பரிசோதனை முகாம்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் நடத்த வேண்டும். மருத்துவ முகாம்களில் அவர்களுக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகளை அவசியம் செய்திட வேண்டும். துப்புரவு பணியாளர்களுக்கு ஊதியம் உரிய நேரத்தில் வழங்க வேண்டும். மேலும், இ.எஸ்.ஐ., பி.எப். முதலியவைகளையும் வழங்கிட வேண்டும். அவர்களது வாரிசுதாரர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்திட பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கல்வி பயிலும் வாரிசுதாரர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

துப்புரவு பணியாளர்களுக்கு வசிப்பதற்கு வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களின் கோரிக்கைகள், பிரச்சினைகளை தீர்க்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். துப்புரவு பணியாளர்களின் பணி அர்ப்பனிப்பான அத்தியாவசியமான பணியாகும். எனவே, மற்ற அலுவலர்கள் அவர்களுடன் சகோதரத்துவத்துடன் பழக வேண்டும். துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கப்படும் திட்டங்கள், சலுகைகள் குறித்து நகர்ப்புறம் மற்றும் ஊரக பகுதிகளில் அவர்களுக்கு விழிப்புணர்வு முகாம்களை நடத்தி அவர்களிடம் விண்ணப்பங்கள் பெற்று நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அபாயகரமான பணிகளில் எந்திரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 

தற்போதைய காலத்தில் துப்புரவு பணியிடங்களுக்கு எல்லா சமுதாயத்தை சார்ந்த நபர்களும் பணி அமர்த்தப்படுகிறார்கள். இதில் உயர்சாதி வகுப்பினர்களுக்கு பல்வேறு பகுதிகளில் அலுவலக பணிகள் வழங்கப்படுவதாக புகார்கள் வரப்பெற்றுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் இதுபோன்ற புகார்கள் வராத வகையில் அனைவரையும் சமமாக நடத்த வேண்டும். சுகாதார பணியாளர்களுக்கு பிரதம மந்திரி காப்பீட்டு திட்டம் மற்றும் பல்வேறு காப்பீட்டு திட்டங்களில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இங்கு துப்புரவு பணியாளர்களுக்கான திட்டங்கள் மற்றும் விவரங்கள் குறித்து பல்வேறு எழுத்துப்பூர்வான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் எழுத்துபூர்வ தகவலுக்கும், உண்மை நிகழ்வுகளுக்கும் மிகப்பெரிய இடைவெளி உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் இதுபோன்ற இடைவெளிகள் இல்லாத வகையில் புள்ளிவிவரங்கள் இருக்க வேண்டும். தவறான புள்ளிவிவரங்களை கண்டறிந்து இதுவரை 25 அலுவலர்கள் மீது பணிநீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எந்த ஒரு சூழ்நிலையிலும் மனித கழிவுகளை துப்புரவு பணியாளர்கள் அகற்றுவதில் ஈடுபடுத்தக்கூடாது. 

துப்புரவு தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு அரசின் திட்டங்களை முழுமையாக பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களை உயர்ந்த நிலைக்கு முன்னேற்றம் அடைய அர்ப்பனிப்பு உணர்வுடன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், துப்புரவு பணியாளர்களும் தங்களுக்கு ஏற்படும் குறைகளை உடனுக்குடன் உயர் அலுவலர்களுக்கு தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும். அலுவலர்களும் அவர்களின் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து நிறைவேற்றிட வேண்டும் என தேசிய துப்புரவு பணியாளர் மறுவாழ்வு ஆணைய உறுப்பினர் பேசினார்.

முன்னதாக தூத்துக்குடி மாநகராட்சி பழைய பேருந்து நிலையம் மற்றும் டூவிபுரம் 5வது தெரு ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் தூய்மை பணிகளை தேசிய துப்புரவு பணியாளர் மறுவாழ்வு ஆணைய உறுப்பினர் ஜெகதீஷ் ஹிர்மணி ஆய்வு செய்தார். மேலும், துப்புரவு பணியாளர்களின் குறைகளை நேரில் கேட்டறிந்தார். இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா, மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் மு.வீரப்பன், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்க்கீஸ், தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரான் ஜீத் சிங் கலோன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மாகின் அபுபக்கர், உதவி இயக்குநர் ஊராட்சிகள் உமாசங்கர், தாட்கோ மாவட்ட திட்ட மேலாளர் ஜெயா மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes

Nalam Pasumaiyagam

CSC Computer EducationAnbu CommunicationsThoothukudi Business Directory