» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சலுகைகளை மீறி வியாபாரிகள் செயல்படக்கூடாது : எஸ்பி முரளி ரம்பா

வியாழன் 6, டிசம்பர் 2018 10:31:28 AM (IST)பண்டிகைகளை முன்னிட்டு வியாபாரிகளின் கோரிக்கையின் அடிப்படையில் காவல்துறை சில சலுகைகள் வழங்க முடியும், அவ்வாறு வழங்கப்படும் சலுகைகளை மீறி வியாபாரிகள் செயல்படக்கூடாது என எஸ்பி முரளி ரம்பா தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா தலைமையில் காவல்துறை மற்றும் தூத்துக்குடி நகர வியாபாரிகள் நல்லுறவு கூட்டம் நேற்று மாலை டி.எஸ்.எஃப் பிளாசாவில் வைத்து நடைபெற்றது. தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் வரவேற்புரையாற்றியதாவது: போலீஸ் - பொது மக்கள் நல்லுறவு விளையாட்டுப்போட்டி சமீபத்தில் முத்துநகர் கடற்கரையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது. அதே போன்று தூத்துக்குடி நகர வியாபாரிகள் அனைவரையும் நமது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் சந்தித்து, வியாபாரிகள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு கொடுப்பது குறித்தும், தூத்துக்குடி நகரில் உள்ள போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கும், வியாபாரிகளின் குறைகளை கேட்டறிந்து, அவற்றை நிவர்த்தி செய்வதற்காகவும் வருகை தந்துள்ளார்கள் என தூத்துக்குடி நகர வியாபாரிகளை வரவேற்றார். 

பின் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா தலைமை உரையாற்றியதாவது, காவல்துறைக்கு உங்களுடைய ஒத்துழைப்பு மிக அவசியமானதாகும். உங்களுடைய பிரச்சனைகளை தெரிவித்தால், அவற்றை தீர்த்து வைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இது முதல் தடவை என்பதால் இக்கூட்டத்திற்கு மற்ற துறைகளைச்சேர்ந்தவர்களை அழைக்கவில்லை. அடுத்தாற்போல் நீங்கள் கூறினால் மாநகராட்சி ஆணையாளர், சார் ஆட்சியர் அவர்களையும் இக்கூட்டத்தில் பங்கு பெறுவதற்கு அழைத்து, உங்கள் குறைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இனி வருங்காலங்களில் 3 மாதத்திற்கு ஒரு முறை இக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்படும். அதே போன்று தூத்துக்குடி நகரத்தில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையத்திலும், காவல் ஆய்வாளர்களும் அடிக்கடி இது போன்ற ஒரு கூட்டத்தை நடத்தி, உங்கள் குறைகளை கேட்டறிந்து, அவற்றை தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு அறிவுறுத்துகிறேன். 

உங்களின் பாதுகாப்பு மற்றும் பொது மக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு அனைத்து வர்த்தக நிறுவனங்கள் மற்றும் கடைகளின் உட்புறங்களில் மட்டுமின்றி வெளிப்புறமும் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்த வேண்டும் எனவும், ஒவ்வொரு பகுதிக்கும் காவலர்கள் ரோந்து வருகின்றனர், இருப்பினும் அவர்களால் இரவு நேரங்களில் ஒவ்வொரு கடைகள் மற்றும் அனைத்து வணிக நிறுவனங்களையும் தனிப்பட்ட முறையில் கவனிப்பது சிரமம், ஒரு சில கடைகளில் இரவு நேர காவலர்களை நியமிக்கப்பட்டுள்ளனர். அதே போன்று ஒவ்வொருவரும் கூடுமானவரை இரவு நேர பாதுகாவலர்களை தங்கள் கடை நிறுவனங்களில் நியமித்தால் நலமாக இருக்கும் எனவும், தூத்துக்குடி நகரில் பெரும்பாலான சாலைகளில் இரண்டு பக்கமும் இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துகின்றனர். 

அதே போன்று ‘வாகனங்கள் நிறுத்தக்கூடாது’ (No Parking) என்ற அறிவிப்பு செய்யப்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்துதல் போன்று பல்வேறு இடையூறுகளால் தூத்துக்குடி நகரில் போக்குவரத்து நெரில் ஏற்படுகிறது, அவற்றை தவிர்ப்பதற்கு விரைவில் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், பிரச்சனைக்குரிய இடம், பாதுகாப்பு அதிகப்படுத்த வேண்டிய இடம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தால் சம்மந்தப்பட்ட இடங்களில் பட்டா புத்தகம் அமைக்கப்பட்டு காவல்துறையினரின் ரோந்து அதிகரிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும், தூத்துக்குடி மாவட்டத்தில், வெளி மாநிலத்தவர்களை பணியமர்த்தும் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள், அவர்களை பற்றிய பதிவேடுகள் கட்டாயம் பராமரிக்க உத்தரவிடப்பட்டு, பராமரித்து வருகின்றனர். 

ஒவ்வொரு காவல் நிலையத்திலும் பதிவேடுகள் பராமரிக்கப்பட்டு வெளிமாநிலத்தவர்கள் தீவரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்றும், அடுத்து வருகின்ற பண்டிகைகளை முன்னிட்டு வியாபாரிகளின் கோரிக்கையின் அடிப்படையில் காவல்துறை சில சலுகைகள் வழங்க முடியும், அவ்வாறு வழங்கப்படும் சலுகைகளை மீறி வியாபாரிகள் செயல்படக்கூடாது என்றும், உங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்தோ, அல்லது சட்ட விரோத செயல்கள் குறித்தோ ஏதேனும் தகவல் இருந்தால் ‘ஹலோ போலீஸ்;’ என்ற அலைபேசி எண் 95141 44100 எண்ணிற்கு தகவல் அளித்தீர்களானால் காவல்துறையினர் உடனடியாக அங்கு கட்டாயம் வந்து நடவடிக்கை எடுப்பார்கள் என்றும், உங்களுடைய பாதுகாப்பிற்கும், பொதுமக்களின் பாதுகாப்பிற்கும், நீங்கள் காவல்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். 

சாலை விபத்துக்களை தவிர்ப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் 18 வயதுக்கு கீழ் உள்ள மாணவ, மாணவிகள் இரு சக்கர வாகனம் ஓட்டுவதை தவிர்க்க பள்ளி, கல்லூரிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும், இரு சக்கர வாகனத்தில் செல்வதற்கு அனுமதிக்கும் பெற்றோர்கள் மீது சட்டப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.இக்கூட்டத்தில் தூத்துக்குடி மத்திய வியாபாரிகள் சங்க தலைவர் விநாயக மூர்த்தி, சட்ட ஆலோசகர் சொக்கலிங்கம் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். ஒவ்வொரு பகுதி வியாபாரிகள் சங்க தலைவர்கள் மற்றும் வியாபாரிகள் தரப்பு கோரிக்கைகளை தெரிவித்தனர். 

அனைவரது கோரிக்கைகளையும் கேட்டுக்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், அனைவரது கோரிக்கைகளையும் பரிசீலனை செய்து உடனடியாக நிறைவேற்றுதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்கள். தூத்துக்குடி மத்திய வியாபாரிகள் சங்க செயலாளர் பாஸ்கரன் நன்றியுரையாற்றினார். மாவட்ட பொருளாளர் செந்தில் ஆறுமுகம், நகர பொருளாளர் ராஜலிங்கம் மற்றும் அந்தந்த பகுதி வியாபாரிகள் சங்க தலைவர்கள் மற்றும் வியாபாரிகள், தென்பாகம் காவல் ஆய்வாளர் முத்து, மத்திய பாகம் காவல் ஆய்வாளர் ரேணியல் ஜேசுபாதம், தெர்மல் நகர் காவல் ஆய்வாளர் திருமதி. கோமதி, அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் திருமதி. முத்துலெட்சுமி, குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர்கள் ஜென்ஸி, ராதா மற்றும் சார்பு ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu CommunicationsBlack Forest Cakes


Thoothukudi Business Directory