» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் 5 பேருக்கு பன்றிகாய்ச்சல் அறிகுறி : மாவட்ட ஆட்சியர் தகவல்

வியாழன் 8, நவம்பர் 2018 7:23:38 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் 5 பேருக்கு பன்றிகாய்ச்சல் அறிகுறி இருப்பதாக மாவட்ட ஆட்சியர் சந்திப்நந்தூரி தகவல் தெரிவித்துள்ளார்.

கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு தரச்சான்றிதழ் பெற, அரசு விதிகளுக்கு உட்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேசிய தரக்கட்டுப்பாட்டு ஆணைய குழுவினர் நவம்பர்.12, 13, 14-ம் தேதிகளில் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் ஆய்வு நடத்துகின்றனர். இதுதொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய இன்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு வந்தார். 

ஆட்சியர் மருத்துவமனையில் உள்ள அனைத்து பிரிவுகளிலும் ஆய்வு மேற்கொண்டு, அங்கு நடைபெறும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். மருத்துவமனை கண்காணிப்பாளர் கமலவாசன், தரச்சான்றிதழ் பணிகளுக்கான ஒருங்கிணைப்பாளர் பத்நாபபுரத்தை சேர்ந்த மருத்துவர் ரியாஸ், கோட்டாட்சியர் விஜயா, தாசில்தார் பரமசிவன், வட்டார வளர்ச்சி அலுவலர் கிரி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் ஆட்சியர் சந்திப்நந்துாரி செய்தியாளர்களிடம் கூறும்போது, கோவில்பட்டியை பொருத்தவரை டெங்கு, பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இல்லை. டெங்கு பாதிப்பு காரணமாக அனுமதிக்கப்பட்ட குழந்தையும் தற்போது நலமாக உள்ளது. மருத்துவமனையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆதரவு சிகிச்சை மையம் இந்த மாதம் புதிதாக தொடங்கப்பட உள்ளது. 

அதே போல் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்றிதழ் பெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. அவர்கள் அடுத்த வாரம் 3 நாட்கள் தேசிய தரக்கட்டுப்பாட்டு ஆணைய குழுவினர் சான்றிதழ் வழங்குவதற்கான ஆய்வு நடத்த உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் முதல் மருத்துவமனையாக இந்த தரச்சான்றிதழ் கோவில்பட்டி மருத்துவமனைக்கு கிடைக்கும் என நம்புகிறோம். சான்றிதழ் கிடைத்தால், மருத்துவர்கள் இன்னும் உற்சாகத்துடன், நவீன வசதிகளுடன் தரமான சிகிச்சை அளிப்பார்கள்.

தூத்துக்குடி மாவட்டத்தை பொருத்தவரை பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் 5 பேர் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 3 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். பன்றிக்காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன, என்றார்.

இதற்கிடையில் தமிழ் மாநில காங்கிரஸ் நகர தலைவர் ராஜகோபால் தலைமையில் அக்கட்சியினர், ஆட்சியரிடம் மருத்துவமனை தொடர்பான கோரிக்கை மனு ஒன்றினை அளித்தனர். அந்த மனுவில், கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் 40க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில், 25க்கும் குறைவான மருத்துவர்கள் மட்டுமே பணிக்கு வருகின்றனர். இதற்கு, அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு மாற்றுப்பணிக்கு சென்றிருப்பதாக காரணம் கூறுகின்றனர். இதனால் இங்கு நோயாளிகள் அவதிப்படுகின்றனர். எனவே, இங்குள்ள மருத்துவர்களை மாற்றுப்பணிக்கு அனுப்புவதை நிறுத்த வேண்டும். 

மேலும், மருத்துவர்கள் சரியான நேரத்துக்கு வருவதற்கும், மாலையில் மருத்துவர்கள் வெளிப்புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்த வேண்டும். மருத்துவமனையில் இருந்து கழிவுநீர் செல்ல போதிய வசதி இல்லாததால், வெளிநோயாளிகள் கட்டடத்துக்கு பின்புறம் கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. போதுமான கழிவுநீர் குழாய் அமைத்து கழிவுநீரை அகற்ற வேண்டும். 

புறநோயாளிகள் சீட் பெறும் இடம் மாற்றுப்பட்டு விட்டதால், இரவு நேரத்தில் விபத்து ஏற்பட்டு சிகிச்சை பெற வருபவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். அதே போல், புறநோயாளிகள் அமருவதற்கு இருக்கை வசதிகளும் இல்லை. தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பட்டி அமைந்துள்ளதால், அவசர சிகிச்சை பிரிவில் 2 மருத்துவ பணியாளர்கள், 24 மணி நேரமும் ஸ்கேன், எக்ஸ்ரே மற்றும் ரத்த பரிசோதனை செய்ய ஏதுவாக பணியாளர்கள் நியமனம் செய்தால், சிறிய காயங்களுக்கு கூட திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பது தவிர்க்கப்படும், என தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam


Black Forest Cakes

Anbu Communications


CSC Computer Education
Thoothukudi Business Directory