» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழ்நாடு பொன் விழா போட்டிகள்: ஆட்சியர் தகவல்

திங்கள் 18, ஜூன் 2018 5:10:09 PM (IST)

தமிழ்நாடு பொன் விழா போட்டிகளில் தூத்துக்குடி மாவட்ட மாணவர்கள் பங்கேற்கலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : 1967 ஆம் ஆண்டில் சென்னை மாநிலம் ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாற்றம் பெற்றதைத் தொடர்ந்து இவ்வாண்டு 50ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு மாண்புமிகு முதலமைச்சர் 11.01.2018 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110 அறிவிப்பின் கீழ் உரை நிகழ்த்தினர். அவ்வறிப்பு உரையில் "தமிழ்நாட்டின் வரலாறும், தமிழ் மக்களின் பண்பாடும் மிகவும் தொன்மை வாய்ந்தவை ஆகும்! பூமியில், முதல் மனிதன் தோன்றியது தமிழ் பேசும் நிலத்தில் தான் என்று மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் சொல் ஆராய்ச்சிகளால் விளக்கியுள்ளார்.

"வட வேங்கடம் தென்குமதி ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகம்”

என்று வடக்கே வேங்கட மலை முதல், தெற்கே குமரி வரை, ‘தமிழ்நாடு’ சீரோடும் சிறப்போடும் விளங்கியதை வரையறுத்துச் சொல்கிறார்!

தொடர்ந்து, இருபதாம் நூற்றாண்டில் இணையில்லாத் தமிழ்ப்பெருங்கவியாக விளங்கிய மகாகவி பாரதியார்,

" வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்றும்

"கல்வி சிறந்த தமிழ்நாடு புகழ்
கம்பன் பிறந்த தமிழ்நாடு என்றும்

‘தமிழ்நாடு’ என்ற உணர்வோடு பாடி அன்றைக்கே பரவசப்படுத்தினார்.
"நம் நாடு தமிழ்நாடு, நாமெல்லாம் தமிழ் மக்கள்” என்று புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனார் ஆணித்தரமாக உரைத்தார்.

இவ்விதமாக, ஆளுமைத் திறம்கொண்ட தமிழ்ப் புலவர்கள் ‘தமிழ்நாடு’ என்று வாயாரப் பாடி மனதார அழைத்த நாடு, நம் தமிழ்நாடு!

நம்மோடு ஆந்திரம், கர்நாடகம், கேரளம் இணைந்து, ‘பிரசிடன்சி ஆப் மெட்ராஸ்’ என்று ஆங்கிலத்திலும், ‘சென்னை மாகாணம்’ என்று தமிழிலும் அழைக்கப்பட்டு வந்த நிலையில், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி, மாநில பிரிவினை ஏற்படுத்தப்பட்ட பிறகு சென்னை மாகாணம் என்னும் பெயர் மாற்றித் ‘தமிழ்நாடு’ எனப் பெயர் மாற்றப்பட வேண்டும் என்று அன்றைக்கு ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ் அரசின் முன் 1956, சூலையில் கோரிக்கையினைத் தியாகி சங்கரலிங்கனார் அவர்கள் முன் வைத்தார்கள்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையிலான அரசு அமைந்தவுடன், 1967-ஆம் ஆண்டு அப்போதைய "சென்னை மாகாணத்திற்கு” "தமிழ்நாடு” என்று பெயர் சூட்ட, சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 1969-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ஆம் நாள் "தமிழ்நாடு” என்று நமது மாநிலத்திற்கு பெயர் மாற்றப்பட்டது. வரும் ஜனவரி 14-ஆம் நாள் வரலாற்று சிறப்பு மிக்க இந்த நிகழ்வு நடந்து 50-வது ஆண்டில் காலடி எடுத்து வைப்பதை முன்னிட்டு "தமிழ்நாடு” பொன் விழா ஆண்டாக மாண்புமிகு அம்மாவின் அரசு கொண்டாட முடிவு செய்துள்ளது என்பதை இந்த மாமன்றத்தில் தெரிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் மேலான அறிவிப்பிற்கிணங்க, தமிழ்நாட்டின் பெருமையையும் தமிழர் பெருமையையும் அனைவரும் உணரும் வகையில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தி மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் பரிசுகள் வழங்கப்படவுள்ளன.

கல்லூரி மாணவர் போட்டிகளுக்கான தலைப்புகள், மொழியின் பெருமையினை உலகிற்கு எடுத்துரைத்த பேரறிஞர் அண்ணா, பாரதியார், பாரதிதாசன், திரு.வி.கல்யாண சுந்தரனார், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஆகியோரின் படைப்புகளை அடியொற்றி அமையும். மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் முதல் பரிசு ரூ.5,000/- இரண்டாம் பரிசு ரூ.3,000/-, மூன்றாம் பரிசு ரூ.2,000/- மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள், மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்குபெற அனுமதிக்கப் பெறுவார்கள். மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.50,000/- மற்றும் நான்கு கிராம் தங்கப் பதக்கம், இரண்டாம் பரிசு ரூ.25,000/- மற்றும் நான்கு கிராம் தங்கப்பதக்கம், மூன்றாம் பரிசு ரூ.10,000/- மற்றும் நான்கு கிராம் தங்கப்பதக்கம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் சென்னையில் நடைபெறவுள்ள தமிழ்நாடு 50 ஆம் ஆண்டு பொன்விழாவில் வழங்கப்படும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்குப் போட்டிகள் 25.06.2018 ஆம் நாளன்று தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் தாங்கள் பயிலும் கல்லூரி முதல்வரின் பரிந்துரைக் கடிதத்துடன் தூத்துக்குடி மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநரிடம் போட்டி நாளன்று நேரில் அளித்து போட்டிகளில் கலந்து கொள்ளலாம்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

CSC Computer Education


New Shape Tailors

Black Forest Cakes

Joseph MarketingNalam PasumaiyagamThoothukudi Business Directory