» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

துப்பாக்கிச்சூடு: தூத்துக்குடியில் தென் மண்டல ஐ.ஜி. ஆய்வு

வியாழன் 14, ஜூன் 2018 3:19:26 PM (IST)

கலவரம் நடந்த தூத்துக்குடியின்  தற்போதைய நிலவரம் குறித்தும் தென் மண்டல ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரன் இன்று ஆலோசனை நடத்தினார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மாதம் 22-ம் தேதி நடந்த போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். துப்பாக்கி சூடு மற்றும் கலவரம் தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம், வடபாகம், சிப்காட் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் 5 வழக்குகள் பதியப்பட்டன. தூத்துக்குடி கலவரம் தொடர்பான வழக்குகள் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டன. 

இதையடுத்து ஒவ்வொரு வழக்கிற்கும் தனித்தனியாக துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் அடங்கிய விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. அவர்கள் தூத்துக்குடி கலவரம், மோதல், தீவைப்பு, துப்பாக்கி சூடு உள்ளிட்ட சம்பவங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வழக்கிற்கு தேவையான அனைத்து ஆவணங்கள் மற்றும் தகவல்களை சேகரித்து வருகின்றனர். 

இந்நிலையில் சி.பி.சி.ஐ.டி. எஸ்பி பிரவீன்குமார் அபினவும் தூத்துக்குடி கலவரம் தொடர்பாக நேரடி விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்.கடந்த 12-ம் தேதி தூத்துக்குடி வந்த அவர், தனது முதல் நாள் விசாரணையில் துப்பாக்கி சூடு, தீவைப்பு, தடியடி, கல்வீச்சு நடந்த தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்கு நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் வழக்குகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். நேற்று அவர் 2-வது நாளாக விசாரணை மேற்கொண்டார். 

அப்போது அவர் தூத்துக்குடி கலவர வழக்குகளில் விசாரணை அதிகாரிகள் சேகரித்துள்ள அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்தார். மேலும் எந்தெந்த கோணங்களில் விசாரணை மேற்கொள்ள வேண்டும், எந்தவிதமான ஆவணங்கள் சேகரிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு வி‌ஷயங்கள் குறித்து விசாரணை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து தூத்துக்குடியில் முகாமிட்டுள்ள சி.பி.சி.ஐ.டி. எஸ்பி பிரவீன்குமார் அபினவ் இன்று 3-வது நாளாக விசாரணை மேற்கொண்டார். வழக்கு விசாரணையை துரிதப்படுத்துவது குறித்து அவர் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

மேலும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு உதவுவதற்காக சென்னை சைபர் கிரைம் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மாணிக்க வாசகம் தூத்துக்குடி வரவழைக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் பலியானதால் அதற்கு காரணமான அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிய வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். அதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த வெங்கடேஷ், எஸ்பியாக இருந்த மகேந்திரன் ஆகியோர் மாற்றப்பட்டனர்.

மேலும் தென்மண்டல போலீஸ் ஐ.ஜி.யாக இருந்த சைலேஷ்குமார் யாதவும் மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக தென்மண்டல போலீஸ் ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்ட சண்முக ராஜேஸ்வரன், நேற்று மதுரையில் உள்ள தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அலுவலகத்தில் பதவியேற்று கொண்டார். இதையடுத்து அவர் இன்று தூத்துக்குடி வந்தார். தூத்துக்குடியில் நடந்த கலவரம் மற்றும் துப்பாக்கி சூடு குறித்தும், தற்போதைய நிலவரம் குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும் அவர் கலவரம் நடந்த பகுதிகளுக்கு நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு பணியிலும் ஈடுபடுகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications


Nalam Pasumaiyagam

New Shape Tailors


Black Forest CakesJoseph Marketing

CSC Computer EducationThoothukudi Business Directory