» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மருதம் காப்போம் வேளாண் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி : கப்பிகுளம் இளைஞர்கள் அதிரடி!

ஞாயிறு 6, மே 2018 6:40:24 PM (IST)கப்பிகுளம் கிராமத்தில் மருதம் காப்போம் என்ற தலைப்பில் வேளாண் பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே கப்பிகுளம் கிராம இளைஞர் மன்றத்தின் 48 வது ஆண்டு விழா, விளையாட்டு விழா, டாக்டர். அம்பேத்கரின் 148வது பிறந்த நாள் விழா ஆகிய முப்பெரும் விழாவை முன்னிட்டு, மருதம் காப்போம் என்ற தலைப்பில் வேளாண் பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் ஜான்சன் தேவசகாயம் தலைமையில் நடைபெற்ற மாரத்தான் போட்டியை மணியாச்சி சரக காவல்துணைக் கண்காணிப்பாளர் என்.ஞானசம்பந்தன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மராத்தான் போட்டிக்கு பசுவந்தனை காவல் உதவி ஆய்வாளர் பொன்ராஜ், திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி பேராசிரியர் டாக்டர். சங்கிலிமாடன், சென்னை துறைமுக பொறுப்புக்கழக முன்னாள் கண்காணிப்பாளர் தமிழ்செல்வன், வ.உ.சி.விளையாட்டுக் கழகத் தலைவர் சாமுவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை உரையாற்றிய ஒட்டப்பிடாரம் வட்டாட்சியர் த.ஜான்சன் தேவசகாயம் பேசும்போது, "கிராமப்புற இளைஞர்களுக்கு விளையாட்டின் மீதான ஆர்வத்தை அதிகரிக்க மாரத்தான் போட்டிகள் உதவுகின்றன. தமிழக அரசு மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் விளையாட்டுத் திறன்களை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக கிராமங்களின் வளர்ச்சிக்காக படித்த இளைஞர்கள் அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும்” என்று கூறினார்.மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்துப் பேசிய காவல் துணைக் கண்காணிப்பாளர் என்.ஞானசம்பந்தன், "மாணவர்கள் தினசரி உடற்பயிற்சிகள் மூலம் தங்கள் உடல் திறனை வலுப்படுத்த வேண்டும். விளையாட்டில் வெற்றி பெற்றால் சாதனைகள் படைக்கலாம், அரசுத்துறைகளில் முன்னுரிமை பெறலாம் என்பது மட்டுமல்ல, ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் விளையாட்டும், உடற்பயிற்சியும் அவசியமான ஒன்றாகும். கிராமங்களில் இதுபோன்ற பல மாவட்டங்களைச் சேர்ந்த மாரத்தான் வீரர்கள் பங்கேற்கும் போட்டிகளை நடத்துவது பாராட்டுக்குரியது” என்றார்.

பத்து கிலோ மீட்டர் தூர மாரத்தான் போட்டியில் முதலிடம் பிடித்த புதுக்கோட்டை வி.அரங்கமுத்துவுக்கு ரூ6001ஐ தொழிலதிபர் அரிச்சந்திரன் வழங்கினார். இரண்டாம் பரிசு பெற்ற திருநெல்வேலி ஜான்ஸ் கல்லூரி மாணவர் பசுபதிக்கு ரூ5001ஐ சென்னை கீழ்கட்டளை முன்னாள் கவுன்சிலர் மனோகரன் சார்பாக தமிழ்செல்வன் வழங்கினார். மூன்றாம் பரிசாக திருநெல்வேலி தர்மாவுக்கு  ரூ.4001ஐ சென்னை துறைமுக பொறுப்புக் கழக துணைக் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் சார்பாக முன்னாள் கண்காணிப்பாளர் தமிழ்செல்வன் வழங்கினார். நான்காவது இடம் பிடித்த திருநெல்வேலி விக்கிக்கு ரூ3001ஐ ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் ஜெயராஜ் நினைவாக ஜெ.பிரபாகர் வழங்கினார். ஐந்தாவது இடம் பிடித்த சிவகாசி சிப்பிப்பாறை அருண்குமாருக்கு ரூ2001ஐ பூவாணி லட்சுமணப்பாண்டியன் சார்பாக அ.சம்பத் வழங்கினார்.

சிறப்பு பரிசு பெற்ற ஐந்து வீரர்களுக்கு முன்னாள் இளைஞர் மன்றத் தலைவர்கள் பொ.அண்ணாத்துரை, வெ.லட்சுமணப்பெருமாள் ஆகியோர் வழங்கினர். முதல் ஐந்து இடம் பிடித்த வீரர்களுக்கு நினைவு சுழற்கோப்பையை கீழமுடிமன் சாய் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் பிரியங்கா சேகர் வழங்கினார். பத்து கிலோ மீட்டர் பந்தய தூரத்தை முழுமையாக நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐம்பெரும் நிலங்களின் அவசியத்தை உணர்த்தும் விதமாகவும், வேளாண் மரபினர் வாழும் மருதம் காப்போம் என்ற முழக்கத்தோடும் நடைபெற்ற வேளாண் பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில், வேளாண் மரபினர் நலன்களையும், வேளாண் நிலங்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வோம், இயற்கை வளங்களை பாதுகாப்போம், நீர் நிலைகளை மேம்படுத்துவோம், சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுப்போம், இயற்கையோடு இணைந்து வாழ்வோம் என்று உறுதிமொழி ஏற்க்கப்பட்டது. 

தூத்துக்குடி பாரதி அரிமா சங்கம், ஓட்டப்பிடாரம் வ.உ.சி.விளையாட்டுக் கழகம், கப்பிகுளம் இளைஞர் மன்றம் இணைந்து நடத்திய இப்போட்டியில் தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, விருதுநகர், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.வேளாண் பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டிக்கு வ.உ.சி.விளையாட்டுக் கழகத்தின் செயலாளர் வீரபாண்டியன், கைலாசநாதர் ஆலய முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் மு.பரமசிவன், ஊராட்சி செயலாளர் கூட்டமைப்பின் மாநில நிர்வாகி வேல்முருகன், பாண்டியன் கிராம வங்கி அலுவலர் பன்னீர்செல்வம், கீழமங்கலம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயக்கனி அரிச்சந்திரன், தமிழ்நாடு மின்சார வாரியம் அசோக்குமார், திருச்சி சிறைத்துறை அலுவலர் பால்ராஜ், சு.பாபு, காண்ட்ராக்டர் ராஜேந்திரன், கணபதி, எட்ராஜ், தமிழ்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக வருகை தந்த அனைவரையும் இளைஞர் மன்றத் தலைவர் மனோஜ்குமார் வரவேற்றார், துணைத்தலைவர் அண்ணாவி மகாராஜா நன்றி கூறினார். நிகழ்ச்சியை முன்னாள் தலைவர் இல.மகேந்திரன் தொகுத்து வழங்கினார். போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை பசுவந்தனை காவல் துறையினர் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து

கருப்பன் லிங்கம்மே 7, 2018 - 09:38:43 PM | Posted IP 172.6*****

சிறப்பான முன்னெடுப்பு வாழ்த்துக்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Nalam Pasumaiyagam

New Shape Tailors

Black Forest Cakes

CSC Computer Education

Anbu Communications

Joseph Marketing
Thoothukudi Business Directory