» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழகத்திலேயே முதன்முறையாக தூய்மை திட்டம்: தூத்துக்குடியில் அறிமுகம்... ஆட்சியர் பேச்சு

சனி 12, ஆகஸ்ட் 2017 3:46:00 PM (IST)



தமிழகத்திலேயே முதன்முறையாக தூத்துக்குடி மாநகரத்தை தூய்மையாக மாற்றிட தொலை நோக்கு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் கூறினார்.

பெருகி வரும் மக்கள் தொகையை மனதில் கொண்டு, தூத்துக்குடி மாநகராட்சி பகுதியினை சுத்தம் ஆக்குவதற்காக, தமிழகத்திலேயே முதன்முறையாக தூத்துக்குடி மாவட்டத்தில், தூய்மை தூத்துக்குடி என்ற தொலைநோக்குத் திட்டத்தினை, மாநகராட்சி நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாநகராட்சி பகுதியினை, தூய்மைப்படுத்தும் விதமாக, முதற்கட்ட துப்பரவு பணியினை மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மகேந்திரன் முன்னிலையில், சின்னமணி நகர் பகுதியில் இன்று  துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் ஆட்சியர் தெரிவித்ததாவது: நமது தூத்துக்குடி மாவட்டத்தை சுகாதாரமான, நோயற்ற, நோய்க்கான காரணிகளை தடுக்கும் விதமாக தூத்துக்குடி மாநகரத்தில் முதற்கட்டமாக முழுவீச்சில் துப்பரவு பணி, இன்று முதல் துவக்கப்படுகிறது. மாநகரத்தை தூய்மையாக மாற்றிட தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 63 பகுதிகளில் முதற்கட்டமாக குப்பைகளை அகற்றும் பணி இன்று முதல் நடைபெற்று வருகிறது. இன்று காலை 7.00 மணிக்கு சின்னமணி நகர் பகுதியில், குப்பைகளை அகற்றும் பணி துவக்கப்பட்டது. 

இன்று நடைபெறும் துப்பரவு பணியில் அண்ணா பல்கலைக்கழத்தை சார்ந்த 700 மாணவ, மாணவிகளும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் பயிலும் 950 நாட்டு நலப்பணி திட்ட மாணவ, மாணவிகளும், பிரன்சிஸ். சேவியர் காரப்பேட்டை நாடார், விக்டோரியா, செயின்ட்.தாமஸ், இக்னேசியஸ், கால்டுவெல். புனித. மரியன்னை, எஸ்.ஏ.வி., தஸ்நேவிஸ், ஹோலிகராஸ், சுப்பையா வித்யாலயம் ஆகிய மேல்நிலைப்பள்ளிகளை சார்ந்த 1200 மாணவ, மாணவிகள், காவல்துறை, கடலோரக் காவல்படை, மாவட்ட விளையாட்டு மையம், ரோட்டரி பாராமெடிக்கல், நேரு யுவகேந்திரா, சுய உதவிகுழு உறுப்பினர்கள் உள்ளிட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சார்ந்த 4000க்கும் மேற்பட்ட தன்னார்வளர்கள் இன்று நடைபெறும் நமது மாநகரத்தை சுத்தமாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். 

நமது மாநகரத்தை சுத்தப்படுத்துவதற்காக இப்பணியில் ஈடுபடும் அனைவரும் தாமகவே முன்வந்து ஈடுபட்டுள்ளது பாராட்டிற்குரியது. இன்று நடைபெறும், சுத்தப்படுத்தும் பணி மட்டுமல்லாது, பொது மக்களிடையே குப்பைகளை தெருவில் கொட்டுவதால் ஏற்படும், சுகாதாரக்கேடுகள், தொற்று நோய்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. பொது மக்கள் தங்களது வீடுகளில் சேரும் குப்பைகளை, அருகில் வைக்கப்பட்டு உள்ள மாநகராட்சி குப்பைத்தொட்டிகளில் மட்டுமே போட வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், பொது மக்கள் தங்களது அண்டை வீட்டாரிடம் இன்று நடைபெறும் தூய்மை பணிகள் குறித்து எடுத்துரைக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும், இது போன்ற துப்பரவு பணிகள் தொடர்ந்து நடைபெறும். 

அவ்வாறு பணிகள் நடைபெறும் போது பொது மக்கள் தாமாகவே முன்வந்து, இது போன்ற பொதுப்பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். அவ்வாறு ஈடுபடுத்தினால் நீங்களும், உங்களது குடும்பத்தாரும் தொற்று நோய்களில் இருந்து பாதுகாக்கப்படுவீர்கள் என்ற உணர்வோடு செயல்பட வேண்டும். தங்களது பகுதிகளை தூய்மைபடுத்த வேண்டும் என்பதனை வலியுறுத்தியும், அவ்வாறு தூய்மைபணிகளில் ஈடுபடும் இல்லதரசிகளை ஊக்குவிக்கின்ற வகையிலும், மாநகராட்சி நிர்வாகம் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து பரிசுகளை வழங்குகிறது. எனவே, பொது மக்கள் தூய்மை தூத்துக்குடி திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் கேட்டுக்கொண்டார்.

அதனை தொடர்ந்து, தூத்துக்குடி மாநகராட்சி பகுதியினை, தூய்மைப்படுத்தும் பணியில் சிறப்பாக பணியாற்றிய துப்பரவு பணியாளர்கள் 3 நபர்களுக்கு தலா ரூ.1000/-விதம் ரூ.3000/-க்கான காசோலைகளையும், சிறப்பாக தங்களது சுற்றுபுறத்தை தூய்மையாக வைத்திருந்தமைக்காக, குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.செல்வி, சண்முகராஜ் ஆகியோருக்கு தலா 1 கிராம் தங்க நாணயங்களும் பரிசாக மாவட்ட ஆட்சியர் வழங்கினார். முன்னதாக உலக இளைஞர்கள் தினம் - 2017 மாற்றத்திற்கான உறுதிமொழியினை காமராஜ் கல்லூரி மாணவிகள், மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் எடுத்துக்கொண்டனர்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.மூ.வீரப்பன், மாநகராட்சி ஆணையர் ஆல்பி ஜாண் வர்க்கீஸ், சார் ஆட்சியர் தீபக்ஜேக்கப் மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வே.பிச்சை, உதவி ஆட்சியர் (பயிற்சி) எஸ்.சரவணன் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் டி.நவாஸகான், தூத்துக்குடி, திருநெல்வேலி அண்ணா பல்கலைகழக ஒருங்கிணைப்பாளர் (பொ) சக்திநாதன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக ராஜலிங்கம், தூத்துக்குடி வட்டாட்சியர் ராமசந்திரன் உட்பட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள், மாநகராட்சி பொறியாளர் உள்ளீட்ட பணியாளர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Joseph Marketing

crescentopticals





New Shape Tailors

Friends Track CALL TAXI & CAB (P) LTD





Thoothukudi Business Directory