» செய்திகள் - விளையாட்டு » உலகம்

23 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட சிறுவனை மீண்டும் குடும்பத்தினருடன் இணைத்த கூகுள் மேப்

ஞாயிறு 19, மே 2013 12:13:28 PM (IST)சீனாவில் 23 ஆண்டுகளுக்கு முன்னர் கடத்தப்பட்ட ஒருவர் கூகுள் மேப் உதவியால் மீண்டும் தனது குடும்பத்தினருடன் இணைந்துள்ளார். 

சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள சிச்சுவான் மாகாணத்தின் ஒரு சிறிய நகரை சேர்ந்த லுவோ கேங் என்பவர், 5 வயது சிறுவனாக இருந்தபோது கடத்தப்பட்டு, அங்கிருந்து 1,500 கி.மீ. தொலைவில் உள்ள ஃபுஜியான் மாகாணத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விற்கப்பட்டார். 

கே.ஜி. வகுப்பில் படித்துவந்தபோது, பள்ளி செல்லும்போது தனது மகன் காணாமல்போய்விட்டதை அறிந்த பெற்றோர் பல இடங்களில், பல மாதங்களாக தீவிரமாக தேடியும் பயனில்லாமல்போகவே, சோகத்துடன் தேடுதல் முயற்சியை கைவிட்டுவிட்டு, பெண் குழந்தை ஒன்றை சுவீகாரம் எடுத்து வளர்த்தனர். 

இதனிடையே தன்னை தத்தெடுத்து வளர்த்த பெற்றோர் தன் மீது அன்பையும், பாசத்தையும் பொழிந்தபோதிலும், தன்னை பெற்றெடுத்த பெற்றோரை கண்டுபிடிக்க வேண்டும் என்ற வேட்கையும், ஆசையும் லுவோவுக்கு இருந்துகொண்டே இருந்தது. 

ஒவ்வொரு நாளும் தூங்கச் செல்லும் முன்னர் நான் என்னுடைய சிறிய வயதில் என்னுடைய பழைய வீட்டில் வாழ்ந்த வாழ்க்கையை நினைத்துப்பார்த்துகொள்வதை வழக்கமாக வைத்திருந்தேன். எனவே எனது பழைய வீடு மறக்காமல் இருந்தது. அதே சமயம் எனது வீடு இருந்த கிராமத்தில் இரண்டு பாலங்கள் இருந்தது என்பதுமட்டுமே எனது நினைவில் இருந்தது" என்று கூறும் லுவோ, காணாமல் போகும் குழந்தைகள் தங்களது வீட்டை கண்டுபிடிக்க உதவும் சீன இணைய தளம் ஒன்றின் மூலமாக தனது வீட்டை கண்டுபிடிக்க முடிந்ததாக தெரிவித்துள்ளார். 

மேற்கூறிய இணையதளத்தை லுவா தொடர்புகொண்ட பின்னர், அந்த தளத்தை சேர்ந்த ஒருவர் லுவாவை தொடர்புகொண்டு, சிச்சுவான் மாகாணத்தின் குவான்கன் நகரில் 23 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பெற்றோர் தனது மகனை தொலைத்துவிட்டார்கள் என்ற தகவலை அனுப்பி உள்ளார். 
 
இதனையடுத்து லுவோ, இணையதளத்தில் இடம்பெற்றுள்ள சிச்சுவான் மாகாண படங்களை பார்த்தபோது அவை பரிச்சயமானதாக தோன்றியிருக்கிறது. உடனே தனது சந்தேகத்தை உறுதி செய்துகொள்ள, அவர் கூகுள் இணையதளத்தின் சேட்டிலைட் மேப்பை பார்த்துள்ளார். குறிப்பிட்ட ஒரு இடத்தை அவர் ஜூம் செய்து பார்த்தபோது சிறிய வயதில் நினைவிருந்த குறிப்பிட்ட அந்த 2 பாலங்களும் இருப்பதை அறிந்துகொண்டார். 

உடனே மகிழ்ச்சியில் துள்ளி குதித்த லுவா,  இதுதான்...இதேதான்...இங்குதான் எனது வீடு உள்ளது" எனக் கூறி ஆனந்த கூத்தாடினார்.  அப்புறமென்ன... தனது கிராமத்திற்கு சென்று பெற்றோரை பார்த்து குடும்பத்தினருடன் ஒன்று சேர்ந்தார்.காணாமல்போன தங்களது மகன் மீண்டும் வந்ததை கண்டு மகிழ்ச்சியில் திகைத்த அவரது பெற்றோர், கண்ணீர் மல்க அவரை கட்டியணைத்து மகிழ்ச்சியில் திளைத்தனர். 

இதுகுறித்து லுவாவின் தாயார் செய்தியாளர்களிடம் கூறுகையில்," ஒவ்வொரு முறையும் எனது மகனை பற்றி நினைக்கும்போதெல்லாம் அவன் பசியோடு, கிழிந்த ஆடைகளோடு சுற்றிக்கொண்டு திரிவானே... என்று நினைத்துக்கொள்வேன். ஆனால் கடவுள் எனது மகனை அப்படியெல்லாம் துன்புற வைக்காமல் என்னிடம் சேர்த்துவிட்டார்" என தெரிவித்தார். 

இதனிடையே லுவாவை தத்தெடுத்த தம்பதியர் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யப்படுமா என்பது குறித்து காவல்துறையினர் எதுவும் தெரிவிக்கவில்லை. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory