» செய்திகள் - விளையாட்டு » உலகம்

உலகில் முதல் முறையாக மனிதனுக்கு பன்றி இதயம்: மருத்துவ வரலாற்றில் புதிய சாதனை

செவ்வாய் 11, ஜனவரி 2022 4:06:33 PM (IST)



உலகில் முதல் முறையாக அமெரிக்காவில் மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தை மாற்று அறுவை சிகிச்சை மூலம் மனிதருக்கு பொருத்தி மருத்துவர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர். 

அமெரிக்காவை சேர்ந்த டேவிட் பென்னட் (57)  என்பவரின் உயிரை காப்பாற்ற அவருக்கு மாற்று இதயம் பொருத்த வேண்டியிருந்தது. ஆனால் மருத்துவ காரணங்களால், மனித இதயம் பொருத்தப்படுவதற்கு அவர் தகுதியற்றவராக இருந்தார். இதன் காரணமாக டேவிட் பென்னட்டை காப்பாற்ற இறுதி முயற்சியாக அவருக்கு மரபணு மாற்றப்பட்ட  பன்றியின் இதயத்தை பொருத்த மருத்துவர்கள் முடிவு செய்தனர். 

இதற்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம், புத்தாண்டின் போது அனுமதியளித்தது. அதனைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக் கிழமையன்று அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் பன்றியின் இதயத்தை டேவிட் பென்னட்டிற்கு பொருத்தியுள்ளனர். தற்போது டேவிட் பென்னட், மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார். டேவிட் பென்னட்டுக்கு பொருத்தப்பட்ட இதயம் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் உடலிலிருந்து எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

பன்றியின் உறுப்புகளை மனித உடம்பு ஏற்காமல் போவதற்கு காரணமாக இருக்கும் மூன்று மரபணுக்களை பன்றியின் உடலிலிருந்து மருத்துவர்கள் நீக்கியுள்ளனர். பன்றியின் இதய திசுவை தேவைக்கு மேல் வளர செய்யும் மரபணுவையும் மருத்துவர்கள் நீக்கியுள்ளதோடு, பன்றியின் உறுப்பை மனித உடல் ஏற்பதற்காக, ஆறு மனித மரபணுக்களை பன்றியின் உடலில் செலுத்தியுள்ளனர். அதன்பின்னர் பன்றியின் இதயம் டேவிட் பென்னட்க்கு பொருத்தப்பட்டுள்ளது.

கடந்தாண்டு அமெரிக்காவில், மூளை சாவு அடைந்த ஒருவருக்கு பன்றியின் சிறுநீரகத்தை பொருத்தினர். தற்போது அதேநாட்டை சேர்ந்த மருத்துவர்கள் ஒருபடி மேலே சென்று, சுயநினைவுடன் இருக்கும் மனிதனுக்கு பன்றியின் இதயத்தை பொருத்தியுள்ளனர். மனிதனுக்கு பன்றியின் இதயம் பொருத்தப்பட்டது வெற்றியடைந்தால், அது மனித உடல் உறுப்புகளுக்கான தட்டுப்பாட்டை போக்கும் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

அறுவை சிகிச்சை நிபுணர் பார்ட்லி க்ரிபித் கூறியதாவது: மாற்று உறுப்பு பற்றாக்குறை நெருக்கடியைத் தீர்ப்பதற்கு இதுபோன்ற சாதனைகள் பயன்படும் என கூறினார். அமெரிக்காவில் ஒரு நாளைக்கு 17 பேர் மாற்று அறுவை சிகிச்சைக்காகக் காத்திருக்கிறார்கள், ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் காத்திருப்போர் பட்டியலில் இருப்பதாகக் கூறப்படுகிறது. தேவையை பூர்த்தி செய்ய விலங்கு உறுப்புகளைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறு நீண்ட காலமாக கருதப்படுகிறது, மேலும் பன்றி இதய வால்வுகளைப் பயன்படுத்துவது ஏற்கனவே பொதுவானது.


மக்கள் கருத்து

ஒருவன்Jan 12, 2022 - 09:38:23 AM | Posted IP 173.2*****

அங்கு இதய நோயாளிகள் அதிகரிக்க காரணம் பர்கர் , PIZZA , COCA COLA , PEPSI, இனிப்பு திண்பாண்ட வகைகள் அதிகரிக்க CORPORATE கம்பெனிகளே காரணம்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital




Thoothukudi Business Directory