» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஜோர்டானில் ஆட்சியை கவிழ்க்க முயன்றதாக முன்னாள் பட்டத்து இளவரசர் கைது
திங்கள் 5, ஏப்ரல் 2021 8:48:14 AM (IST)
ஜோர்டானில் ஆட்சியை கவிழ்க்க முயன்ற குற்றச்சாட்டில் முன்னாள் பட்டத்து இளவரசர் ஹம்ஸா பின் உசேன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஜோர்டானில் கடந்த 1999-ம் ஆண்டு முதல் மன்னராக இருந்து வருபவர் 2-ம் அப்துல்லா. அண்மையில் இவரது ஆட்சியை கவிழ்க்க முயற்சிகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக அரசின் உயர்மட்ட பிரதிநிதிகள் பலர் கைது செய்யப்பட்டனர். இந்தநிலையில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி குற்றச்சாட்டில் மன்னர் அப்துல்லாவின் ஒன்றுவிட்ட சகோதரரும் முன்னாள் பட்டத்து இளவரசருமான ஹம்ஸா பின் உசேன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தான் வீட்டுக்காவலில் சிறைவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஹம்ஸா பின் உசேன் ஆட்சியாளர்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசியதாவது: சமீபத்தில் நான் கலந்து கொண்ட கூட்டங்களில் அரசு மற்றும் மன்னர் குறித்து விமர்சித்ததாக குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் என்னை வெளியே செல்லவோ அல்லது மக்களுடன் தொடர்பு கொள்ளவோ அனுமதிக்கவில்லை.
கடந்த 15 முதல் 20 ஆண்டுகளாக எங்கள் ஆளும் கட்டமைப்பில் நிலவும் மோசமடைந்து வரும் ஆளுகை முறிவு, ஊழல் மற்றும் திறமையின்மைக்கு நான் பொறுப்பேற்கவில்லை. மக்கள் தங்கள் அரசு மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நான் பொறுப்பல்ல. நாட்டின் தற்போதைய சூழல் யாரும் கொடுமைப்படுத்தப்படாமலும், கைது செய்யப்படாமலும், துன்புறுத்தப்படாமலும், அச்சுறுத்தப்படாமலும் எதையும் பேசவோ அல்லது கருத்து தெரிவிக்கவோ முடியாத ஒரு நிலையை எட்டியுள்ளது.
எனது ஊழியர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். நானும் எனது குடும்பத்தினரும் அம்மானுக்கு வெளியே உள்ள அல் சலாம் அரண்மனையில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளோம். தொலைபேசி, இணைய வசதி உள்பட எனது தகவல் தொடர்புகள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளன. நான் எந்த தவறையும் செய்யவில்லை. அரசுக்கு எதிராக நடந்த எந்த சதித்திட்டத்துடனும் எனக்கு தொடர்பு இல்லை. இவ்வாறு அந்த வீடியோவில் ஹம்ஸா பின் உசேன் பேசியுள்ளார்.
ஜோர்டானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் மன்னர் 2-ம் அப்துல்லாவுக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது. ஜோர்டானை அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஆட்சி செய்த மன்னர் உசேனுக்கும், அவரது 4-வது மனைவியான ராணி நூருக்கும் பிறந்த மூத்த மகன்தான் இந்த ஹம்ஸா பின் உசேன். 1999-ம் ஆண்டு மன்னர் உசேன் இறந்தபோது, ஹம்ஸா பின் உசேன் மன்னர் பதவிக்கு மிகவும் இளமையாகவும், அனுபவமற்றவராகவும் கருதப்பட்டார்.
இதனால் மன்னர் உசேனின் 2-வது மனைவியான ராணி முனா அல் உசேனின் மூத்த மகன் 2-ம் அப்துல்லா மன்னராக முடிசூட்டப்பட்டார். எனினும் ஹம்ஸா பின் உசேனுக்கு பட்டத்து இளவரசர் பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனால் கடந்த 2004- ம் ஆண்டு மன்னர் 2-ம் அப்துல்லா, ஹம்ஸா பின் உசேனிடம் இருந்து பட்டத்து இளவரசர் பொறுப்பை பறித்து தனது மூத்த மகனுக்கு வழங்கினார்.
அப்போது முதலே மன்னர் 2-ம் அப்துல்லாவுக்கும், ஹம்ஸா பின் உசேனுக்கும் மோதல் போக்கு நிலவி வரும் சூழலில் தற்போது ஆட்சி கவிழ்ப்பு குற்றச்சாட்டில் ஹம்ஸா பின் உசேன் வீட்டுக்காவலில் சிறை வைக்கப்பட்டுள்ளார். இதனிடையே இந்த விவகாரத்தில் அமெரிக்கா, சவுதி அரேபியா மற்றும் எகிப்து உள்ளிட்ட பல நாடுகள் ஜோர்டான் மன்னர் 2-ம் அப்துல்லாவுக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜார்ஜ் ஃப்ளாய்டு கொலை வழக்கில் காவல்துறை அதிகாரி குற்றவாளி: அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு
புதன் 21, ஏப்ரல் 2021 10:23:12 AM (IST)

இந்தியாவுக்கு பயணம் செல்வதை தவிர்க்க வேண்டும்: அமெரிக்கா அறிவுறுத்தல்
செவ்வாய் 20, ஏப்ரல் 2021 5:27:08 PM (IST)

போரிஸ் ஜான்ஸனின் இந்திய வருகை ரத்து: பிரிட்டன் பிரதமர் அலுவலகம் அறிவிப்பு
திங்கள் 19, ஏப்ரல் 2021 4:30:42 PM (IST)

இந்தியாவுடனான அனைத்து விமான சேவைகளும் ரத்து - ஹாங்காங் அரசு அறிவிப்பு
திங்கள் 19, ஏப்ரல் 2021 11:18:04 AM (IST)

பிரான்ஸ் நாட்டிற்கு எதிரான போராட்டம் எதிரொலி : பாகிஸ்தானில் சமூக வலைத்தளங்கள் முடக்கம்
வெள்ளி 16, ஏப்ரல் 2021 3:44:03 PM (IST)

ஏழைநாடுகளை சேர்ந்த 8 லட்சம் பேருக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி வழங்குகிறது நியூசிலாந்து
வெள்ளி 16, ஏப்ரல் 2021 11:39:49 AM (IST)
