» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்காவில் நடுவானில் விமானத்தில் தீவிபத்து: விமானியின் சாதுரியத்தால் பயணிகள் உயிர் தப்பினர்

திங்கள் 22, பிப்ரவரி 2021 9:03:54 AM (IST)அமெரிக்காவில் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் விமானத்தின் என்ஜினில் தீ பற்றியது. எனினும் விமானியின் சாதுரியத்தால் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

அமெரிக்காவில் கொலோரோடா மாகாணத்தின் தலைநகர் டெனவர் விமான நிலையத்தில் இருந்து யுனெடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 777-200 ரக விமானம் நேற்று முன்தினம் மதியம் புறப்பட்டது. 231 பயணிகள் மற்றும் 10 சிப்பந்திகளுடன் ஹவாய் மாகாணத்தின் தலைநகர் ஹோனாலுலுவுக்கு விமானம் புறப்பட்டு சென்றது. புறப்பட்ட சிறிது நேரத்துக்குப்பிறகு நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தின் வலது புற என்ஜினில் திடீரென தீ பற்றியது. கண்ணிமைக்கும் நேரத்தில் தீ மளமளவென பரவி என்ஜின் முழுவதும் பற்றி எரிந்தது.

இதனால் விமானம் நடுவானில் திணறியது. பயணிகள் அனைவரும் பயத்தில் மரண ஓலமிட்டனர். இதனிடையே என்ஜினில் தீப்பற்றி எரிவதை அறிந்து கொண்ட விமானி உடனடியாக விமானத்தை டெனவர் விமான நிலையத்துக்கு திருப்பி அவசரமாக தரையிறக்க முடிவு செய்தார். அதன்படி அவர் விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விட்டு விமானத்தை திருப்பினார். இதற்கிடையில் விமானம் டெனவர் விமான நிலையத்துக்கு செல்லும் வழியில் விமானத்தின் என்ஜின் பாகங்கள் ஒவ்வொன்றாக கீழே விழுந்தன. இவை விமான நிலையத்தையொட்டியுள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்தன‌.

வானில் பறந்து கொண்டிருந்த போதே விமானத்தின் பாகங்கள் ஒவ்வொன்றாக உடைந்து விழுந்தது பயணிகள் மத்தியில் பெரும் பதற்றத்தையும் பீதியையும் ஏற்படுத்தியது. எனினும் விமானி மிகவும் சாதுரியமாக செயல்பட்டு விமான நிலைய ஓடுபாதையில் விமானத்தை பாதுகாப்பாக தரை இறக்கினார். அதனைத் தொடர்ந்து அங்கு தயார் நிலையில் இருந்த தீயணைப்பு வீரர்கள் என்ஜினில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.‌

அதன் பின்னர் பயணிகள் மற்றும் சிப்பந்திகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். விமானியின் சாதுரியத்தால் பயணிகள் அனைவரும் காயங்கள் எதுவும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். என்ஜினில் தீ பற்றிய விமானம் 26 ஆண்டுகள் பழமையானது என்றும் என்ஜினில் உள்ள மின் விசிறியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ பற்றியதாகவும் கூறப்படுகிறது. எனினும் இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் மத்திய விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் தரையில் சிதறி கிடக்கும் என்ஜின் பாகங்களை யாரும் தொட வேண்டாம். இந்த பாகங்கள் ஆய்வுக்கு தேவைப்படுகிறது என உள்ளூர் மக்களுக்கு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. முன்னதாக கடந்த 2018-ம் ஆண்டு யுனெடெட் நிறுவனத்தின் போயிங் 777 விமானம் ஹோனலுலு நகர விமான நிலையத்தில் தரை இறங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் என்ஜின் செயலிழந்தது. அப்போதும், விமானிகள் திறம்பட செயல்பட்டு விமானத்தை பத்திரமாக தரையிறக்கினர் என்பது நினைவு கூரத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Thalir Products

Nalam Pasumaiyagam

Black Forest CakesThoothukudi Business Directory