» செய்திகள் - விளையாட்டு » உலகம்

நீர் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த சீன ரோந்து கப்பல்கள்: ஜப்பான் கடும் கண்டனம்

புதன் 17, பிப்ரவரி 2021 8:51:17 AM (IST)

ஜப்பான் நீர் பரப்புக்குள் சீன ரோந்து கப்பல்கள் அத்துமீறி நுழைந்தது தொடர்பாக சீனாவுக்கு ஜப்பான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தென் சீனக்கடலில் உள்ள பல்வேறு தீவுகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. ஆனால் அந்த தீவுகள் தங்களுக்கு சொந்தமானது என ஜப்பான், வியட்நாம், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் கூறி வருகின்றன. இந்த விவகாரத்தில் சீனாவுக்கும் மேற்கூறிய நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. இது ஒருபுறமிருக்க கிழக்குச் சீனக் கடலில் ஜப்பானின் கட்டுப்பாட்டில் உள்ள செங்காகு தீவையும் சீனா நீண்ட காலமாக உரிமை கொண்டாடி வருகிறது.

இந்த தீவை டயோயுடாவ் தீவுகள் என்று அழைக்கும் சீனா, 1783 மற்றும் 1785-ம் ஆண்டுகளில் ஜப்பானிய வரைபடங்களில் இந்த தீவுகள் சீனா பிரதேசமாக குறிக்கப்பட்டுள்ளதாகவும், ஜப்பான் அதனை சட்டவிரோதமாக கைப்பற்றியதாகவும் கூறி வருகிறது. அதேசமயம் 1895-ம் ஆண்டு முதல் இந்த தீவின் மீது தங்கள் நாடு இறையாண்மையை கொண்டுள்ளதாக ஜப்பான் வாதிடுகிறது. இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நீடித்து வருகிறது.

செங்காகு தீவை கைப்பற்றுவதற்கு சீனா தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இதற்காக ஜப்பானுக்கு சொந்தமான அந்த தீவுக்குள் சீனாவின் போர் கப்பல்கள் மற்றும் ரோந்து கப்பல்கள் அடிக்கடி அத்துமீறி நுழைவதும் அதனை ஜப்பான் வன்மையாக கண்டிப்பதும் தொடர் கதையாகி வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட முறை சீன கப்பல்கள் ஜப்பான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக ஜப்பான் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் சீனா இதனை தங்களுக்கு சொந்தமான தீவில் தங்கள் நாட்டின் கடற்படை ரோந்து பணியில் ஈடுபடுவதாக கூறி நியாயப்படுத்துகின்றது.

இந்நிலையில் சீன கடற்படையின் 4 ரோந்து கப்பல்கள் செங்காகு தீவு அருகே உள்ள ஜப்பானின் நீர் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தன. பின்னர் இந்த 4 கப்பல்களும் நேற்று அதிகாலை வரை ஜப்பான் எல்லைக்குள்ளேயே இருந்தன. சீன கடற்படையின் இந்த நடவடிக்கை ஜப்பானுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஜப்பான் சீனாவிடம் தனது கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து ஜப்பான் அமைச்சரவையின் தலைமை செயலாளர் கட்சுனோபு கட்டோ பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், "சீன ரோந்து கப்பல்கள் நம் நாட்டின் பிராந்திய நீரில் நுழைந்திருப்பது மிகவும் வருந்தத்தக்கது. மேலும் அந்த ரோந்து கப்பல்கள் ஜப்பானிய மீன்பிடி கப்பல்களை அணுக முயற்சித்துள்ளன. இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. தூதரக ரீதியாக சீன தரப்பிடம் நமது வலுவான எதிர்ப்பை பதிவு செய்துள்ளோம்” என கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest CakesNalam Pasumaiyagam


Thalir ProductsThoothukudi Business Directory