» செய்திகள் - விளையாட்டு » உலகம்
அதிபராக ஜோ பைடன் - துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவி ஏற்பு: வாஷிங்டனில் கோலாகல விழா
வியாழன் 21, ஜனவரி 2021 8:52:13 AM (IST)

அமெரிக்க நாட்டின் 46-வது அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்றார். துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவி ஏற்றார்.
உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் 3-ந் தேதி நடைபெற்றது. அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்பை வீழ்த்தி ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் (78) அமோக வெற்றி பெற்றார்.இவரது முழுப்பெயர் ஜோசப் ராபினெட் பைடன் ஆகும். துணை அதிபராக ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவருமான பெண் தலைவர் கமலா ஹாரிஸ் (56) தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அமெரிக்காவில் புதிய அதிபர், துணை அதிபர் பதவி ஏற்பு விழா, ஜனவரி 20-ந் தேதி நடைபெறுவது மரபாக உள்ளது. அந்த மரபுப்படி, தலைநகர் வாஷிங்டனில் அமைந்துள்ள நாடாளுமன்ற கட்டிடத்தின் மேற்கு பகுதியில் புதிய அதிபர், துணை அதிபர் பதவி ஏற்பு விழா, நேற்று அமெரிக்க நேரப்படி காலை சுமார் 11 மணிக்கு (இந்திய நேரப்படி நேற்றிரவு 9.30 மணி) கோலாகலமாக தொடங்கியது. கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலம் என்பதால், அதற்கான கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டன. அனைவரும் முக கவசம் அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பதவி ஏற்பு விழா, ஜோ பைடன் குடும்பத்தினருக்கு நெருக்கமான ஏசு சபை போதகர் லியோ ஜெரேமியா ஓ டொனோவன் பிரார்த்தனையுடன் தொடங்கியது. அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடனுக்கு, அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் நண்பகல் 12 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 10.30 மணி) பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஜோ பைடன் 127 ஆண்டு கால பாரம்பரியம் கொண்ட குடும்ப பைபிளை அவரது மனைவி ஜில் பைடன் கையில் பிடித்திருக்க, அதன் பேரில் பதவி ஏற்றுக்கொண்டார்.
அதே போன்று அமெரிக்காவின் 49-வது துணை அதிபராக கமலா ஹாரிசுக்கு, அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சோனியா சோட்டாமேயர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். கமலா ஹாரிஸ், தனது நெருங்கிய குடும்ப நண்பரான ரெஜினா ஷெல்டன் மற்றும் அமெரிக்க சுப்ரீம் நீதிமன்றத்தின் முதல் ஆப்பிரிக்க வம்சாவளி நீதிபதி துர்கூட் மார்ஷல் ஆகியோருக்கு சொந்தமான 2 பைபிள்களின்பேரில் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார். இந்த பதவி ஏற்பு விழா, முன் எப்போதும் இல்லாத வகையில் 25 ஆயிரம் தேசிய பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பில் நடைபெற்றது.
விழாவில், முன்னாள் அதிபர்கள் ஒபாமா, ஜார்ஜ் புஷ், பில் கிளிண்டன், அவர்களது மனைவிமார் மிச்செல்லி ஒபாமா, லாரா புஷ், ஹிலாரி கிளிண்டன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில், விடைபெற்றுச்சென்ற அதிபரான டிரம்ப் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் அவர், "நாங்கள் எங்கள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம். அவர்களுக்கு அதிர்ஷ்டம் வாய்க்கவேண்டும். இது முக்கியமான வார்த்தை” என கூறி வாழ்த்து தெரிவித்தார்.
அவர் அத்துடன் வாஷிங்டனில் இருந்து புளோரிடாவுக்கு புறப்பட்டு சென்றார். அதே நேரத்தில் விடைபெற்றுச்சென்ற துணை அதிபர் மைக் பென்ஸ், விழாவில் கலந்து கொண்டார். பொதுமக்களுக்கு பதிலாக அமெரிக்க தேசிய கொடிகள் இடம் பெற்றிருந்தன. விழாவில் பிரபல பாடகி லேடி காகா என்று அழைக்கப்படுகிற ஸ்டெபானி ஜோன் ஏஞ்சலினா ஜெர்மனோட்டா தேசிய கீதம் பாடினார். பதவி ஏற்பு விழா முடிந்ததும் அதிபர் ஜோ பைடன் நாட்டு மக்களுக்கு உரை ஆற்றினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

செவ்வாய் கிரகத்தில் நாசாவின் ரோவர் சோதனை ஓட்டம் வெற்றி
ஞாயிறு 7, மார்ச் 2021 9:09:15 AM (IST)

கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க ஒபெக் நாடுகள் மறுப்பு: விலை உயரும் அபாயம்
சனி 6, மார்ச் 2021 3:47:36 PM (IST)

நியூசிலாந்தில் தொடர்ந்து 4 முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ; சுனாமி எச்சரிக்கையால் பதற்றம்
வெள்ளி 5, மார்ச் 2021 11:51:08 AM (IST)

ஹஜ் பயணம் வருபவர்களுக்கு கரோனா தடுப்பூசி சான்று கட்டாயம் : சவுதி அரசு அறிவிப்பு
வியாழன் 4, மார்ச் 2021 10:28:19 AM (IST)

நீண்ட சரிவுக்கு பின்னர் உலகளவில் கரோனா அதிகரிக்கிறது : உலக சுகாதார நிறுவனம் தகவல்
வியாழன் 4, மார்ச் 2021 8:29:39 AM (IST)

அரசு ஆதரவு பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்:ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்
புதன் 3, மார்ச் 2021 12:17:05 PM (IST)
