» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் : கட்டிட இடிபாடுகளில் சிக்கி 26 பேர் பலி
சனி 16, ஜனவரி 2021 9:18:20 AM (IST)

இந்தோனேசியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 26 பேர் உயிரிழந்தனர்.
தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியா, நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும் புவித்தட்டுகள் அடிக்கடி நகரும் இடத்தில் அமைந்துள்ளதால் அங்கு நிலநடுக்கம் ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 100-க்கும் மேற்பட்ட முறை நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. இதில் ஒரு சில நிலநடுக்கங்கள் மிகப்பெரிய அளவில் தாக்கி பெரும் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தி விடுகின்றன.
இந்தநிலையில் இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள சுலவேசி தீவில் நேற்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 1 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கம் சுலவேசி தீவின் மஜீனே நகருக்கு 6 கிலோ மீட்டர் வடகிழக்கே பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக இந்தோனேசிய பேரிடர் முகமை அறிவித்துள்ளது.
7 வினாடிகள் வரை நீடித்த இந்த நிலநடுக்கத்தின் போது வீடுகள், கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. அதிகாலை நேரம் என்பதால் மக்கள் அனைவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வால் அவர்கள் திடுக்கிட்டு எழுந்தனர். பின்னர் அவர்கள் அலறி அடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலநடுக்கத்தின் போது மஜீனே நகரில் ஏராளமான வீடுகள், 2 ஓட்டல்கள் மற்றும் ஒரு வணிக வளாகம் ஆகியவை இடிந்து விழுந்து தரைமட்டமாகின.
அதேபோல் அந்த நகரில் உள்ள சுலவேசி மாகாண கவர்னரின் அலுவலகம் நிலநடுக்கத்தால் தரைமட்டமானது. இதனிடையே மஜீனே நகருக்கு அருகிலுள்ள மாமுஜு நகரில் மருத்துவமனை ஒன்று இடிந்து விழுந்தது. இப்படி பல கட்டிடங்கள் சீட்டு கட்டை போல் சரிந்ததில் ஏராளமான மக்கள் இடிபாடுகளில் சிக்கினர். இதனைத்தொடர்ந்து நிலநடுக்கம் தாக்கிய பகுதிகளில் உடனடியாக மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டன.
இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 26 பேர் உயிரிழந்ததாகவும் 600-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இடிபாடுகளுக்குள் இன்னும் பலர் சிக்கி இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. மாமுஜு நகரில் மருத்துவமனை இடிந்து விழுந்ததில் 6 நோயாளிகளும் அவர்களின் குடும்பத்தினரும் இடிபாடுகளில் சிக்கியதாக கூறப்படுகிறது. அவர்களை உயிருடன் மீட்பதற்கான முயற்சிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
இதனிடையே இந்த நிலநடுக்கம் சக்தி வாய்ந்ததாக அமைந்த போதிலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இருப்பினும் கடலோரம் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுவிட்டனர். முன்னதாக கடந்த 2018-ல் இதே சுலவேசி தீவில் ரிக்டர் அளவுகோலில் 7.5 புள்ளிகள் அளவில் ஏற்பட நிலநடுக்கம் மற்றும் அதனால் உருவான சுனாமியில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

செவ்வாய் கிரகத்தில் நாசாவின் ரோவர் சோதனை ஓட்டம் வெற்றி
ஞாயிறு 7, மார்ச் 2021 9:09:15 AM (IST)

கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க ஒபெக் நாடுகள் மறுப்பு: விலை உயரும் அபாயம்
சனி 6, மார்ச் 2021 3:47:36 PM (IST)

நியூசிலாந்தில் தொடர்ந்து 4 முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ; சுனாமி எச்சரிக்கையால் பதற்றம்
வெள்ளி 5, மார்ச் 2021 11:51:08 AM (IST)

ஹஜ் பயணம் வருபவர்களுக்கு கரோனா தடுப்பூசி சான்று கட்டாயம் : சவுதி அரசு அறிவிப்பு
வியாழன் 4, மார்ச் 2021 10:28:19 AM (IST)

நீண்ட சரிவுக்கு பின்னர் உலகளவில் கரோனா அதிகரிக்கிறது : உலக சுகாதார நிறுவனம் தகவல்
வியாழன் 4, மார்ச் 2021 8:29:39 AM (IST)

அரசு ஆதரவு பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்:ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்
புதன் 3, மார்ச் 2021 12:17:05 PM (IST)
