» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கடுமையான ஆய்வு தேவை: ரஷிய தடுப்பூசி குறித்து உலக சுகாதார அமைப்பு கருத்து

புதன் 12, ஆகஸ்ட் 2020 10:45:27 AM (IST)

ரஷிய அறிவித்துள்ள உலகத்தின் முதல் கரோனா தடுப்பூசி மீது கடுமையான ஆய்வு தேவை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் என்ற பெயரை கேட்டாலே உலகமே அஞ்சி நடுங்குகிறது. இந்த வைரசின் பிடியில் 200-க்கும் மேற்பட்ட நாடுகள் சிக்கி தவிக்கின்றன. கரோனாவுக்கு முடிவு கட்ட தடுப்பூசி ஒன்றுதான் ஆயுதமாக இருக்கும் என கருதப்படுகிறது. அதனால்தான் இதுவரை வேறு எந்த தொற்று நோய்க்கும் இல்லாத அளவில், கரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எதிராக உலகமெங்கும் ஏறத்தாழ 165 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருவதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. 

இவற்றில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ‘கோவிஷீல்டு’ உள்ளிட்ட 6 தடுப்பூசிகள் மட்டும் பரிசோதனையின் இறுதிக்கட்டத்தில் உள்ளன. கரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக விளங்கும் ரஷியாவில் அந்த நாட்டின் ராணுவ அமைச்சகமும், கமலேயா தொற்றுநோயியல், நுண்ணுயிரியல் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனமும் சேர்ந்து ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளன.

இந்த தடுப்பூசி பரிசோதனைகளை வெற்றிகரமாக முடித்துக்கொண்டுள்ள நிலையில், விரைவில் பதிவு செய்யப்படும் என தகவல்கள் வெளிவந்தன. அதன்படி, அந்த தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தயாராகி நேற்று பதிவு செய்யப்பட்டுவிட்டது.

இந்தத் தகவலை வெளியிட்ட ரஷிய அதிபர் புதின், கரோனா தடுப்பூசிக்கு ‘ஸ்புட்னிக்-வி’ என பெயரிடப்பட்டுள்ளதாகவும் இது மிகவும் திறம்பட செயல்படுகிறது. இது ஒரு நிலையான எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது. இந்த தடுப்பூசியானது, தேவையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு விட்டது. இந்த தடுப்பூசி ஆற்றல்மிக்கது என்பது சோதனைகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இது பாதுகாப்பானது எனவும் தெரிய வந்துள்ளது” என்றார். 

இந்த நிலையில், ரஷ்யாவின் கரோனா தடுப்பூசி குறித்து கருத்து தெரிவித்த உலக சுகாதார அமைப்பு பாதுகாப்பு ஆய்வுகளை மிகக்கடுமையாக ஆய்வு செய்ய வேண்டியது அவசியம் என்று தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் செய்தி தொடர்பாளர் தரிக் ஜசரேவிக் ஜெனீவாவில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். 

அப்போது அவர் கூறுகையில், "ரஷியாவின் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் நாங்கள் தொடர்பில் உள்ளோம். தடுப்பூசிக்கு முன் தகுதி அளிப்பது குறித்த நடைமுறைகள் பற்றிய ஆலோசனை நடைபெறுகிறது. எந்த ஒரு தடுப்பூசிக்கும் முன் தகுதி அளிப்பது என்பது தேவையான பாதுகாப்பு மற்றும் திறன் அம்சங்களை கடுமையாக மதிப்பாய்வு செய்த பின்னரே இருக்கும்” என்றார். இதற்கிடையில் 3-வது கட்ட சோதனையை இன்று தொடங்க இருப்பதாக ரஷியா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes



Anbu Communications






Thoothukudi Business Directory