» செய்திகள் - விளையாட்டு » உலகம்

போராட்டத்தால் பற்றி எரியும் லெபனான்! அரசுக்கு எதிராக கொதித்தெழுந்த பெய்ரூட் மக்கள்!!

திங்கள் 10, ஆகஸ்ட் 2020 1:00:38 PM (IST)லெபனானில் வெடி விபத்தை தொடர்ந்து அரசுக்கு எதிராக மக்கள் கொதித்தெழுந்ததால் போராட்டத்தால் தலைநகரம் பெய்ரூட் பற்றி எரிந்து வருகிறது.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் கடந்த 4-ந் தேதி வெடித்துச் சிதறியது. இந்த பயங்கர வெடி விபத்து ஒட்டுமொத்த பெய்ரூட் நகரை தலைகீழாக புரட்டிப் போட்டுவிட்டது. இந்த விபத்தில் 160-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். மேலும் இந்த வெடி விபத்தில் சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்தனர். வெடி விபத்தால் பெய்ரூட் நகரில் 75 சதவிகிதத்துக்கும் அதிகமான கட்டிடங்கள் குலுங்கி, சேதமடைந்துள்ளன. இதனால் கான்கிரீட் மற்றும் உடைந்த கண்ணாடித் துண்டுகள் இன்னும் சாலைகளில் சிதறிக் கிடக்கின்றன.

கடும் பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் லெபனான் அரசு பொது மக்களுக்கு உரிய நிவாரணம் அளிக்க முடியாமல் திணறி வருகிறது. பலர் வீடுகளை இழந்து சாலைகளில் வசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உணவு கிடைக்காமல் திண்டாடுகின்றனர். இந்த கோரமான வெடி விபத்துக்கு அரசாங்கம் மற்றும் அதிகாரிகளின் அலட்சியம்தான் காரணம் என்று பெய்ரூட் மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் அரசின் அலட்சிய போக்கை கண்டித்து பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராடத் தொடங்கி உள்ளனர்.

நேற்று முன்தினம் மாலை நூற்றுக்கணக்கான மக்கள் பெய்ரூட்டில் உள்ள அமைச்சக கட்டிடங்களுக்குள் புகுந்து சூறையாடினர். ஆட்கள் இன்றி காலியாக இருந்த வெளியுறவு அமைச்சகத்தின் கட்டிடத்துக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் இனி இந்த கட்டிடம் போராட்ட அமைப்பின் தலைமையகமாக இருக்கும் என அறிவித்தனர். அதே போல் பொருளாதாரம் மற்றும் எரிசக்தி அமைச்சகங்களின் கட்டிடங்களையும் போராட்டக்காரர்கள் ஆக்கிரமித்து தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

போராட்டக்காரர்கள் ஒரு பிரிவினர் பெய்ரூட்டில் உள்ள வங்கி சங்கத்தின் தலைமை கட்டிடத்தை தாக்கி தங்களின் கோபத்தை வெளிப்படுத்தினர். அதேபோல் நாடாளுமன்றத்துக்கு முன்பு திரண்ட போராட்டக்காரர்கள் போலீசார் ஏற்படுத்தியிருந்த தடுப்பு வேலிகளை தாண்டி நாடாளுமன்றத்துக்குள் நுழைய முயன்றனர். இதனால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் இது கைகலப்பாக மாறியது. அதனைத் தொடர்ந்து பெய்ரூட் முழுவதும் பல இடங்களில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக பெய்ரூட் நகரில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர்.இந்த நிலையில் இந்த போராட்டம் மேலும் தீவிரமடைந்தது. போராட்டக்காரர்கள் அரசு அலுவலகங்களை அடித்து நொறுக்கியதோடு சாலைகளில் வாகனங்களுக்கு தீ வைத்தும் வன்முறையில் ஈடுபட்டனர். மேலும் போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் மீது கற்களை வீசி தாக்கினர். அதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்களை விரட்டியடிக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதோடு, ரப்பர் குண்டுகளால் துப்பாக்கிச்சூடும் நடத்தினர்.

இதன் காரணமாக வெடி விபத்தால் ஏற்கனவே நிலைகுலைந்து உள்ள பெய்ரூட் நகரம் கலவர பூமியாக காட்சியளிக்கிறது. எங்கு பார்த்தாலும் பற்றி எரியும் வாகனங்கள் மற்றும் போராட்டக்காரர்கள் போலீசாரின் மோதல்களால் பெய்ரூட் போர்களமாக மாறி இருக்கிறது. இந்த கலவரத்தில் போலீஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டதாகவும், சுமார் 700 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes

Anbu CommunicationsThoothukudi Business Directory