» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஐ.நா. பாதுகாப்பு சபையில் தற்காலிக உறுப்பினர் ஆகிறது இந்தியா

ஞாயிறு 31, மே 2020 3:45:27 PM (IST)

ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தரம் அல்லாத தற்காலிக உறுப்பினர் பதவிக்கு இந்தியா தேர்ந்து எடுக்கப்படுகிறது.

அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, சீனா, பிரான்ஸ் ஆகிய 5 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐ.நா. பாதுகாப்பு சபையில், 10 நாடுகள் நிரந்தரம் அல்லாத தற்காலிக உறுப்பினர்களாக இடம்பெறுகின்றன. பிராந்திய அடிப்படையில் 10 நாடுகள் தற்காலிக உறுப்பினர் பதவிக்கு தேர்ந்து எடுக்கப்படுகின்றன. இந்த தற்காலிக உறுப்பினர்களின் பதவி காலம் 2 ஆண்டுகள் ஆகும். மொத்தம் உள்ள 10 தற்காலிக உறுப்பினர் இடங்களில் 5 இடங்களுக்கு உறுப்பு நாடுகளை தேர்ந்து எடுக்க ஆண்டுதோறும்தேர்தல்நடைபெறும். 

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா ஏற்கனவே 7 முறை தற்காலிக உறுப்பினராக இடம்பெற்று உள்ளது. கடைசியாக 2011 மற்றும் 2012-ம் ஆண்டுகளில் உறுப்பினராக இருந்தது. ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர் ஆக இந்தியா நீண்ட காலமாக முயற்சி செய்து வருகிறது. இதற்கு பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ள போதிலும், சீனா உள்ளிட்ட சில நாடுகள் முட்டுக்கட்டை போடுகின்றன. இதனால் நிரந்தர உறுப்பினர் ஆகும் இந்தியாவின் முயற்சி தாமதம் ஆகிறது.

இந்த நிலையில், ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளுக்கான 5 தற்காலிக உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதில் ஆசியா பசிபிக் பிராந்தியத்துக்கான ஒரு இடத்துக்கு இந்தியா போட்டியிடுகிறது. இந்த ஒரு இடத்துக்கு இந்தியா போட்டியிட ஆசியா- பசிபிக் நாடுகள் குழுவில் உள்ள சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 55 நாடுகளும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒரு மனதாக ஆதரவு அளித்தன. எனவே இந்தியா தேர்ந்து எடுக்கப்படுவது உறுதியாகி இருக்கிறது.

இந்த தேர்தலை வருகிற ஜூன் 17-ந் தேதி நடத்த, 193 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐக்கிய நாடுகள் சபை முடிவு செய்து இருந்தது. வழக்கமாக இந்த தேர்தல் ஐ.நா. பொதுச்சபை மண்டபத்தில் ரகசிய வாக்கெடுப்பு முறையில் நடைபெறும். 193 நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு ஓட்டுப் போட்டு 5 தற்காலிக உறுப்பினர்களையும் தேர்ந்து எடுப்பார்கள்.

ஆனால் இப்போது கொரோனா பரவல் காரணமாக தேர்தல் நடைபெறும் நாள் மற்றும் தேர்தல் முறையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, தேர்தல் நாளன்று உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் குறிப்பிட்ட இடத்தில் வைக்கப்பட்டுள்ள ஓட்டுப்பெட்டியில் தங்கள் ஓட்டுச்சீட்டை போட வேண்டும். இது தொடர்பாக ஐ.நா. பொதுச்சபை தலைவர் திஜ்ஜானி முகமது பாண்டே வாக்குப்பதிவு நடைபெறும் தேதிக்கு 10 நாட்கள் முன்பாக உறுப்பு நாடுகளுக்கு தேர்தல் தேதி, நேரம் தொடர்பாக கடிதம் எழுத இருக்கிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Anbu Communications


Black Forest CakesThoothukudi Business Directory