» செய்திகள் - விளையாட்டு » உலகம்

நூறு சதவீதக் கடன்களையும் செலுத்திவிடுகிறேன்: வழக்குகளை கைவிட விஜய் மல்லையா கோரிக்கை

வியாழன் 14, மே 2020 10:39:45 AM (IST)

100 சதவீதக் கடன்களையும் செலுத்தி விடுகிறேன். எனக்கு எதிரான வழக்குகள் அனைத்தையும் கைவிட வேண்டும் என்று விஜய் மல்லையா மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மதுபான ஆலை, விமான நிறுவனம் என பல்வேறு தொழில்களை நடத்திய தொழிலதிபர் விஜய் மல்லையா, பல்வேறு இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்குத் தப்பி ஓடினார். அவரைத் தாயகம் அழைத்து வரும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. அதற்கான பணிகள் லண்டன் உச்ச நீதிமன்றத்தில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியாவுக்கு விஜய் மல்லையாவை அழைத்து வரும் தீவிரப்பணியில் அமலாக்கப் பிரிவினர், சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த சூழலில் கரோனா வைரஸ் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் இந்தியப் பொருளாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக ரூ.20 லட்சம் கோடிக்கான பொருளாதார மீட்புத் தி்ட்டத்தை பிரதமர் மோடி நேற்று முன்தினம் அறிவித்தார். அதில் முதல் கட்டமாக ரூ.6 லட்சம் கோடிக்கான திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார்.

இந்தியப் பொருளாதாரத்தை மீ்ட்டெடுக்க பிரதமர் மோடி ரூ.20 லட்சம் கோடி திட்டங்களை அறிவித்ததை தொழிலதிபர் விஜய் மல்லையா தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார். மேலும், தன்னுடைய கோரிக்கையையும் மத்திய அரசு ஏற்று வழக்குகளைக் கைவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விஜய் மல்லையா ட்விட்டரில் பதிவி்ட்ட கருத்தில், "கரோனா வைரஸிலிருந்து பொருளாதாரத்தை மீட்க இந்திய அரசு ரூ.20 லட்சம் கோடிக்கான திட்டங்களை அறிவித்ததமைக்கு நான் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். இந்திய அரசு அவர்களின் தேவைக்கு ஏற்றார்போல் ரூபாய் நோட்டுகளை அச்சிடலாம். ஆனால், என்னைப் போன்ற சிறு பங்களிப்பாளர் 100 சதவீதம் கடனை வங்கிகளிடம் திருப்பிச்செலுத்துகிறேன் எனப் பலமுறை கோரிக்கை விடுத்தும் தொடர்ந்து புறந்தள்ளப்படுகிறது.

நான் வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய அனைத்துக் கடன்களையும் செலுத்திவிடுகிறேன், நிபந்தனையில்லாமல் ஏற்றுக்கொண்டு, எனக்கு எதிரான வழக்குகள் அனைத்தையும் கைவிடுங்கள் என மத்திய அரசிடம் கேட்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் இதேபோன்று விஜய் மல்லையா கோரிக்கை விடுத்தார். அதில், " கிங்பிஷர் விமான நிறுவனத்துக்காக வங்கிகளிடம் பெற்ற கடனை 100 சதவீதம் அடைக்க விருப்பம் தெரிவித்தேன், ஆனால் எந்த வங்கியும் எனது கோரிக்கையை ஏற்கவில்லை, அமலாக்கப் பிரிவும் எனது சொத்துகளை விடுவிக்க மறுத்துவிட்டது” எனத் தெரிவி்த்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes

Friends Track CALL TAXI & CAB (P) LTDAnbu Communications
Thoothukudi Business Directory