» செய்திகள் - விளையாட்டு » உலகம்

நாடு கடத்துவதை எதிர்த்த விஜய் மல்லையா வழக்கு தள்ளுபடி: இங்கிலாந்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு

செவ்வாய் 21, ஏப்ரல் 2020 8:48:37 AM (IST)

ரூ.9 ஆயிரம் கோடி வங்கிக் கடன் மோசடி விவகாரத்தில், இந்தியாவுக்கு நாடு கடத்துவதை எதிர்த்த விஜய் மல்லையா வழக்கை தள்ளுபடி செய்து இங்கிலாந்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 

‘கிங் பிஷர்’ குழும நிறுவனங்களின் தலைவர் விஜய் மல்லையா (64). இவர் இந்தியாவில் ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 12 பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு வட்டியுடன் முறையாக திருப்பி செலுத்தாமல், இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனுக்கு தப்பி ஓடிவிட்டார். இதற்காக விஜய் மல்லையா மீது சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவு இயக்குனரகமும் இந்திய கோர்ட்டுகளில் வழக்குகள் தாக்கல் செய்துள்ளன. ஆனால் இந்த வழக்குகளை சட்டப்படி சந்திப்பதற்கு அவர் இந்தியா வர மறுத்து விட்டார்.

இதையடுத்து அவரை சட்டப்படி இந்தியாவுக்கு நாடு கடத்திக்கொண்டு வர மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்தது. ஆனால் இதற்கு எதிராக விஜய் மல்லையா, லண்டனில் உள்ள இங்கிலாந்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை நீதிபதிகள் ஸ்டீபன் இர்வின், எலிசபெத் லாயிங் ஆகியோர் அமர்வு விசாரித்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில் விஜய் மல்லையாவின் வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் இருவரும் நேற்று பரபரப்பு தீர்ப்பு அளித்தனர்.

தீர்ப்பில் நீதிபதிகள் கூறி இருப்பதாவது: இந்த வழக்கை பொறுத்தமட்டில், விஜய் மல்லையாவை நாடு கடத்துவதற்கு, இந்திய விசாரணை அமைப்புகளான சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவு இயக்குனரகமும் கூறிய காரணங்களைவிட, மூத்த மாவட்ட நீதிபதி பரந்த அளவில் அடிப்படை ஆதாரங்கள் இருப்பதாக கூறியதை நாங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டோம். இந்தியாவின் குற்றச்சாட்டுகளுடன் 7 அடிப்படை அம்சங்கள் ஒத்துப்போவதை நாங்கள் பார்க்கிறோம்.எனவே நாடு கடத்தலுக்கு எதிரான விஜய் மல்லையாவின் வழக்கை தள்ளுபடி செய்கிறோம். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பை எதிர்த்து விஜய் மல்லையா, இங்கிலாந்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய முடியும். அதற்கு உயர் நீதிமன்றம் 14 நாட்கள் அவகாசம் அளித்துள்ளது.விஜய் மல்லையா அப்படி மேல்முறையீடு செய்யாவிட்டால், இந்தியா, இங்கிலாந்து நாடுகள் இடையேயான கைதிகள் ஒப்படைப்பு சட்டத்தின்கீழ், இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தீர்ப்பை சி.பி.ஐ. வரவேற்றுள்ளது. இதுகுறித்து சி.பி.ஐ. செய்தி தொடர்பாளர் ஆர். கே.கவுர் நேற்று கருத்து தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இந்த தீர்ப்பு சி.பி.ஐ.யின் கடினமான, துல்லியமான விசாரணையை உறுதிப்படுத்துகிறது. கோர்ட்டு செயல்முறையில் இருந்து தப்பிப்பதற்காக, வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கையில் இது குறிப்பிடத்தகுந்த ஒரு சாதனை ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications

Black Forest CakesThoothukudi Business Directory