» செய்திகள் - விளையாட்டு » உலகம்

மோடி மிகச்சிறந்த மனிதர்; இந்திய சுற்றுப்பயணத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்: டிரம்ப் உற்சாகம்

வியாழன் 13, பிப்ரவரி 2020 10:53:25 AM (IST)

இந்திய சுற்றுப்பயணத்தை ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும், இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகும் வாய்ப்பு இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் உற்சாகத்துடன் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்கா சென்றிருந்த போது, அந்த நாட்டு அதிபர் டிரம்பை இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார். பிரதமர் மோடியின் இந்த அழைப்பை டிரம்ப் ஏற்றுக்கொண்டு உள்ளார். இதையடுத்து அவர் தனது மனைவி மெலனியாவுடன் வருகிற 24 மற்றும் 25-ம் தேதிகளில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த தகவலை வெள்ளை மாளிகை நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்த பயணத்தின்போது டெல்லியில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களை சந்திக்கும் டிரம்ப், குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகருக்கும் செல்கிறார். அங்கு மொடேரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் மிகப்பெரும் பொதுக்கூட்டம் ஒன்றிலும் மோடியுடன் இணைந்து உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் டிரம்ப் நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரது இந்திய பயணம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:- மோடி ஒரு மிகச்சிறந்த மனிதர். இந்தியாவுக்கு செல்வதை நான் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறேன். எனவே இந்த மாத இறுதியில் நாங்கள் இந்தியா செல்வோம்.

இந்த பயணத்தின்போது இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட விரும்புகிறேன். அவர்கள் (இந்தியர்கள்) ஏதாவது செய்ய நினைக்கிறார்கள். அது குறித்து நாங்கள் பரிசீலிப்போம். வர்த்தகம் தொடர்பாக சரியான ஒப்பந்தம் ஒன்றை உருவாக்க முடிந்தால், நாங்கள் அதை செய்வோம். இவ்வாறு டிரம்ப் கூறினார். ஆமதாபாத் மைதானத்தில் மிகப்பெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் நிகழ்வை உற்சாகமாக வெளியிட்ட டிரம்ப், அதை ஒப்பிடும்போது அமெரிக்காவில் தான் பேசும் நிகழ்வுகள் எல்லாம் ஒன்றுமில்லை என்று நகைச்சுவையாக குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘ஆமதாபாத்தில் லட்சக்கணக்கான மக்கள் திரளுவார்கள் என அவர் (மோடி) கூறியிருக்கிறார். நேற்று இரவு நாம் வெறும் 40 முதல் 50 ஆயிரம் வரையிலான மக்கள் மத்தியில்தான் பேசியிருக்கிறோம். ஆனால் ஆமதாபாத்தில் விமான நிலையத்தில் இருந்து மைதானம் வரை 50 முதல் 70 லட்சம் வரை மக்கள் கூடுவார்கள். இவ்வளவு பெரிய கூட்டத்தை பார்த்தால்தான் எனக்கு ஏதோ செய்யும். எனது ஒரே பிரச்சினை அதுதான்’ என்று நகைச்சுவையாக கூறினார். ஆமதாபாத் மைதானம் உலகிலேயே மிகப்பெரியது எனக்கூறிய டிரம்ப், தற்போதுதான் பிரதமர் மோடி அதை கட்டி வருவதாகவும் தெரிவித்தார். உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான ஆமதாபாத் மொடேரா மைதானம் 1 லட்சம் பேர் அமரும் வகையில் கட்டப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதற்கிடையே டிரம்பின் இந்திய வருகை குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி வெளியிட்டு உள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘டிரம்ப் மற்றும் மெலனியா டிரம்பின் இந்திய வருகை மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எங்கள் மதிப்புமிக்க விருந்தினர்களுக்கு மறக்க முடியாத ஒரு வரவேற்பை இந்தியா வழங்கும். இந்த வருகை ஒரு மிகவும் சிறப்பானது மட்டுமின்றி, இந்தியா-அமெரிக்கா இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்துவதாகவும் அமையும்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu CommunicationsThalir Products

Friends Track CALL TAXI & CAB (P) LTD


Black Forest Cakes
Thoothukudi Business Directory