» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஜப்பான் கடலில் 10 நாட்களாக பயணிகள் பரிதவிப்பு : கொரோனா வைரசால் கப்பலில் 174 பேர் பாதிப்பு

வியாழன் 13, பிப்ரவரி 2020 8:26:08 AM (IST)ஜப்பான் கடலில் நிறுத்தப்பட்டுள்ள கப்பலில் 10 நாட்களாக பயணிகள் பரிதவித்து வரும் நிலையில், கொரோனா வைரஸ் தாக்கியவர்களின் எண்ணிக்கை 174 ஆக உயர்ந்துள்ளது.

ஜப்பான் நாட்டை சேர்ந்த ‘டைமண்ட் பிரின்சஸ்‘ என்ற சொகுசு கப்பல் ஹாங்காங்குக்கு சென்று விட்டு, கடந்த 3-ந் தேதி ஜப்பானின் யோகோஹாமா நகருக்கு திரும்பியது. முன்னதாக ஹாங்காங்கில் இந்த கப்பலில் இருந்து இறங்கிய 80 வயது முதியவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து, கப்பலில் இருந்த 2,666 பயணிகள் மற்றும் 1,045 ஊழியர்களை தரையில் இறங்குவதற்கு தடை விதித்த ஜப்பான் அரசு, கப்பலை துறைமுகத்தில் இருந்து பல மைல் தொலைவில் நடுக்கடலில் நிறுத்தி தனிமைப்படுத்தியது.

கப்பலில் பயணிகளுக்கு தினந்தோறும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதில் முதல் 3 நாட்களில் கப்பலில் இருந்த 60 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. நேற்று முன்தினம் நிலவரப்படி 135 பேருக்கு நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. அவர்கள் அனைவரும் ஜப்பானில் உள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கப்பலில் மேலும் 39 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜப்பான் சுகாதாரத்துறை மந்திரி காட்சுனோபு காதோ தெரிவித்துள்ளார். இதன் மூலம் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட கப்பல் பயணிகளின் எண்ணிக்கை 174 ஆக உயர்ந்துள்ளது. இது குறித்து, காட்சுனோபு காதோ கூறுகையில், "கப்பலில் உள்ள மேலும் 53 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் 39 பேருக்கு நோய் பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது" என்றார்.

மேலும் அவர் வைரசால் பாதிக்கப்பட்ட 39 பேரும் உடனடியாக கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்டு, ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், ஏற்கனவே ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருபவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறினார். இதற்கிடையே இந்த சொகுசு கப்பல் தனிமைப்படுத்தப்பட்டு நேற்றுடன் 10 நாட்கள் ஆகிறது. பயணிகள் அனைவரும் அவர்களின் அறைகளுக்குள்ளேயே இருக்கும் படி அறிவுத்தப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு 3 வேளை உணவும் அறைகளிலேயே வழங்கப்படுகிறது.

ஒரு நாளில் சில நிமிடங்கள் மட்டுமே அவர்கள் கப்பலின் திறந்த வெளி பகுதிக்கு செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். அப்போதும் கூட அவர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும, ஒருவரிடம் இருந்து மற்றொருவர் விலகியிருக்க வேண்டும் என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இதனால் கப்பலில் உள்ள பயணிகள் பரிதவிப்புக்கு உள்ளாகி உள்ளனர். வருகிற 19-ந் தேதி வரை கப்பல் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் என ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது. கப்பலுக்குள் கொரோனா வைரஸ் வேகமாக பரவி 10 நாட்களுக்கு 174 பேரை தாக்கியுள்ள நிலையில், கப்பலில் இருக்கும் மேலும் பலருக்கு கொரோனா வைரஸ் பரவும் என்று அஞ்சப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes

Anbu CommunicationsThoothukudi Business Directory