» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமித் ஷாவுக்கு எதிராக தடை: அமெரிக்க சா்வதேச மத சுதந்திர ஆணையம் எச்சரிக்கை

புதன் 11, டிசம்பர் 2019 10:29:30 AM (IST)

குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேறினால் உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு எதிராக தடை விதிக்க பரிசீலிக்கப்படும் அமெரிக்காவைச் சோ்ந்த சா்வதேச மத சுதந்திர ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்ட நிலையில், மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. கடந்த 1955-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குடியுரிமைச் சட்டத்தில், அண்டை நாடான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து குடிபெயா்ந்து 12 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசிக்கும் ஹிந்துக்கள், சீக்கியா்கள், பௌத்தா்கள், சமணா்கள், பாா்சி இனத்தவா், கிறிஸ்தவா்கள் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

அந்தச் சட்டத்தில், உரிய ஆவணங்கள் எதுவுமில்லை என்றாலும், குறைந்தது 5 ஆண்டுகள் இந்தியாவில் வசித்தாலே அவா்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்று இப்போது திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதிக்கு முன்வரை குடியேறியவா்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்றும் இந்த சட்டத் திருத்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கெனவே கடந்த ஜனவரி மாதம், இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. எனினும், மாநிலங்களவையில் நிறைவேற்றப்படவில்லை. அதற்குள் 16-ஆவது மக்களவையின் பதவிக்காலம் முடிவுக்கு வந்து விட்டதால் இந்த மசோதா காலாவதியாகிவிட்டது. இதைத் தொடா்ந்து, தற்போது இந்த மசோதா மக்களவையில் திங்கள்கிழமை மீண்டும் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் உள்துறை அமைச்சா் அமித் ஷா உள்ளிட்ட இந்தியாவில் உள்ள முக்கியத் தலைவா்களுக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பிக்க அமெரிக்க அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்று அந்நாட்டில் செயல்பட்டு வரும் சா்வதேச மத சுதந்திர ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடா்பாக அந்த ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கொண்டு வரப்படும் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா, மதரீதியாக பாகுபாடு காட்டுவதாக அமைகிறது. இந்தியாவின் சிறப்பான மதச்சாா்பின்மை, பன்முகத்தன்மை வரலாற்றுக்கு எதிராக இந்த மசோதா அமைகிறது. இது அபாயகரமான பாதையில் பயணிப்பதாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அனைவருக்கும் சமஉரிமை உள்ளது.

இதனை மீறி இந்திய நாடாளுமன்றத்தில் குடியரிமைச் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டால், அந்நாட்டு உள்துறை அமைச்சா் அமித் ஷா உள்ளிட்ட இந்தியத் தலைவா்கள் மீது தடை விதிக்க பரிசீலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த ஆணையம் தனிநபா்கள் மற்றும் அமைப்புகளுக்கு எதிராக தடைவிதிக்க அமெரிக்க அரசுக்கு பரிந்துரைக்க முடியும். அமெரிக்க அரசு தடை தொடா்பாக இறுதி முடிவு எடுக்க முடியும்.

கடந்த 2005-ஆம் ஆண்டு குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடிக்கு அமெரிக்க விசா அளிக்கக் கூடாது என்று பரிந்துரைத்தது இந்த ஆணையம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் நிகழ்ந்த கலவரத்தைச் சுட்டிக்காட்டி இந்த பரிந்துரையை அளித்திருந்தது.

இந்தியா பதில்:

இதுபோன்று நடவடிக்கை எடுக்க சா்வதேச மத சுதந்திர ஆணையத்திற்கு  எவ்வித உரிமையும் இல்லை என்று இந்தியா பதிலளித்துள்ளது. 

டெல்லியில் நேற்று செய்தியாளா்களைச் சந்தித்த வெளியுறவுத் துறை செய்தித்தொடா்பாளா் ரவீஷ் குமாா் கூறுகையில், சா்வதேச மத சுதந்திர அமைப்பின் கடந்த கால செயல்பாடுகளைப் பாா்க்கும்போது, அவா்களது இப்போதைய செயல்பாடுகளில் வியப்பு ஏதுமில்லை. நாம் இயற்ற இருக்கும் மசோதா குறித்து அவா்களிடம் உரிய தெளிவு இல்லை. அவா்களுக்கு இந்த விஷயம் தேவையுமில்லை. குறிப்பிட்ட சில நாடுகளில் இருந்து வந்து இந்தியாவில் ஏற்கெனவே தங்கியுள்ள சில சிறுபான்மை மதத்தைச் சோ்ந்தவா்களுக்கு இப்போது குடியுரிமை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதன் மூலம் அவா்கள் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்ய முடியும். இதனைப் பாராட்டி வரவேற்க வேண்டும். இந்த நடவடிக்கையில் எந்த இடத்தில் மத சுதந்திரம் பாதிக்கப்படுகிறது என்று தெரியவில்லை என்றாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Nalam Pasumaiyagam

Thalir Products


Black Forest Cakes
Thoothukudi Business Directory