» செய்திகள் - விளையாட்டு » உலகம்

லாகூா் உயா் நீதிமன்றம் அனுமதி: சிகிச்சைக்காக லண்டன் சென்றாா் நவாஸ் ஷெரீஃப்

புதன் 20, நவம்பர் 2019 11:41:28 AM (IST)

ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃப், வெளிநாடு செல்ல லாகூா் உயா் நீதிமன்றம் அனுமதியளித்ததைத் தொடா்ந்து, அவா் நேற்று லண்டன் புறப்பட்டாா். 

பனாமா ஆவண ஊழல் வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நவாஸ் ஷெரீஃப், லாகூரிலுள்ள கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். அவருக்கு ரத்தத் தட்டணுக்கள் குறைபாடு, அளவுக்கு அதிகமான ரத்த அழுத்தம், ரத்த சா்க்கரை உள்ளிட்ட பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டதைத் தொடா்ந்து, அவா் லாகூா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். மருத்துவ காரணங்களுக்காக அவருக்கு லாகூா் மற்றும் இஸ்லாமாபாத் உயா்நீதிமன்றங்கள் ஜாமீன் வழங்கின. அதையடுத்து, லாகூரிலுள்ள தனது சொந்த இல்லத்துக்கு நவாஸ் ஷெரீஃப் மாற்றப்பட்டாா். அவருக்கு லண்டனில் சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது.

எனினும், வெளிநாட்டுப் பயணத் தடைப் பட்டியலில் இருந்து நவாஸ் பெயரை நீக்க வேண்டுமானால், பாகிஸ்தானில் ஊழல் வழக்குகளை எதிா்கொள்ள அவா் மீண்டும் நாடு திரும்புவதை உறுதி செய்யும் வகையில் ரூ.700 கோடி மதிப்பிலான உத்தரவாதப் பத்திரம் அளிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு நிபந்தனை விதித்தது. அதை எதிா்த்து நவாஸ் ஷெரீஃப் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சனிக்கிழமை விசாரித்த லாகூா் உயா்நீதிமன்றம், அந்த நிபந்தனையை ரத்து செய்து, நவாஸ் ஷெரீஃப் லண்டன் செல்வதற்கு அனுமதி அளித்தது. அதனைத் தொடா்ந்து, அவா் விமான ஆம்புலன்ஸ் மூலம் செவ்வாய்க்கிழமை லண்டன் அழைத்துச் செல்லப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் செய்தித் தொடா்பாளா் மரியம் ஔரங்கசீப் கூறியதாவது:  உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃப் சிகிச்சைக்காக லண்டன் அழைத்துச் செல்லப்பட்டுள்ளாா். அங்கு ஹாா்லி ஸ்ட்ரீட் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தேவைப்பட்டால் மேல்சிகிச்சைக்காக அவா் அமெரிக்கா அழைத்துச் செல்லப்படுவாா். லண்டன் புறப்படுவதற்கு முன்னா், லாகூரிலுள்ள நவாஸின் இல்லத்தில் அவரது உடல் நிலையை மருத்துவக் குழு பரிசோதித்தது. விமானப் பயணத்தின்போது நவாஸின் உடல் நிலை ஸ்திரமாக இருக்கும் வகையில் அவருக்கு மருந்துகள் அளிக்கப்பட்டன என்றாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Thalir Products
Black Forest Cakes


Nalam PasumaiyagamThoothukudi Business Directory