» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தியாவை விட முதலீடு செய்ய சிறந்த இடம் எதுவும் இல்லை : நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

வெள்ளி 18, அக்டோபர் 2019 11:12:16 AM (IST)

இந்தியாவைவிட முதலீடு செய்வதற்கு சிறந்த இடம் எதுவும் இல்லை என்று அமெரிக்காவில் முதலீட்டாளர்கள் மத்தியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். வா‌ஷிங்டனில் சர்வதேச நிதியத்தின் (ஐ.எம்.எப்.) தலைமையகத்தில் நடந்த கலந்துரையாடல் கூட்டம் ஒன்றில் அவர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், ‘‘இன்றைக்கும் வேகமாக வளர்ந்து வருகிற பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கிறது. இந்தியாவில், மிகச்சிறப்பான, திறமையான மனித வளமும், சீர்திருத்தங்கள் என்ற பெயரில் என்னவெல்லாம் தேவையோ, அதையெல்லாம் செய்து கொண்டிருக்கிற அரசாங்கமும், எல்லாவற்றுக்கும் மேலாக ஜனநாயகமும், சட்டத்தின் ஆட்சியும் இருக்கிறது’’ என்று கூறினார்.

‘‘முதலீட்டாளர்கள் எதற்காக இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும்?’’ என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், ‘‘கோர்ட்டு நடைமுறைகள் சற்றே தாமதமாக இருந்தாலும்கூட, இந்தியா ஒரு வெளிப்படையான, திறந்த சமூகத்தை கொண்டிருக்கிறது. சட்டத்தின் ஆட்சி, இந்தியாவில் வேலை செய்கிறது. ஏராளமான சீர்திருத்தங்கள் செய்யப்படுகின்றன. எனவே நீங்கள் இதை விட சிறப்பாக எதையும், பெற்று விட முடியாது. ஜனநாயகத்தின் மீது நேசம், முதலாளித்துவத்தின் மீது மரியாதையும் வைத்திருக்கிற சூழல் இந்தியாவில் இருக்கிறது. எனவே இந்தியாவை விட முதலீடு செய்வதற்கு சிறந்த இடம் ஏதுமில்லை’’ என்று பதில் அளித்தார்.

காப்பீட்டு துறையில் முதலீட்டு உச்சவரம்பை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிற அந்த துறையினரின் கேள்விகளுக்கும் நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார். அப்போது அவர், ‘‘காப்பீட்டு துறையில் முதலீட்டு உச்சவரம்பை நீக்குவது தவிர்த்து, இந்த துறையின் எதிர்பார்ப்புகளை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டியதிருக்கிறது. உச்சவரம்பை நீக்க திறந்த மனதுடன் உள்ளேன். இது தொடர்பான விவரங்களை நீங்கள் அனுப்பி வையுங்கள். அதே நேரத்தில் இப்போது அது தொடர்பான வாக்குறுதிகள் எதையும் தர இயலாது’’ என்றார்.

இந்திய பொருளாதாரம், மந்த நிலையில் இருப்பது பற்றியும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நிர்மலா சீதாராமன், ‘‘பாதிக்கப்பட்டுள்ள துறைகளில் உள்ள பிரச்சினைகளை சரிசெய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஜூலை மாதத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தேர்தலுக்கு முன்னதாக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தோம். அடுத்த பிப்ரவரியில் வரக்கூடிய பட்ஜெட்டுக்காக காத்திருக்கவும் முடியாது. எனவே பிரச்சினைக்குரிய துறைகளில் இப்போது தலையிட்டு நடவடிக்கை எடுத்து இருக்கிறோம்’’ என பதில் அளித்தார்.

‘‘ஒட்டுமொத்தமாக பொருட்களின் பயன்பாடு அதிகரிக்கத்தக்க விதத்தில், உள்கட்டமைப்புக்கான செலவுகள் முன்னிறுத்தப்படும். பொதுமக்களின் கைகளில் பணப்புழக்கம் அதிகரிக்கிறபோது, பயன்பாடு அதிகரிக்கும். எனவேதான் கிராமங்களை சென்றடையும்படி, வங்கிகள், பிற நிதி நிறுவனங்களை கேட்டுக்கொண்டிருக்கிறேன்’’ என்றும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education

Anbu Communications

Black Forest Cakes

Nalam Pasumaiyagam


Thoothukudi Business Directory