» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தியாவுடனான ராஜீய உறவுகளைக் குறைக்க முடிவு : தூதரை வெளியேற்றியது பாகிஸ்தான்

வியாழன் 8, ஆகஸ்ட் 2019 11:31:33 AM (IST)

ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இந்தியத் தூதர் அஜய் பிசாரியாவை பாகிஸ்தான் வெளியேற்றியது.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் அந்நாட்டு தேசிய பாதுகாப்பு கமிட்டி கூட்டம் நேற்றுநடைபெற்றது. இதில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், உள்துறை அமைச்சர், முப்படை தலைமைத் தளபதிகள், ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் தலைவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்திருப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்தியாவுடனான இருதரப்பு வர்த்தகத்தை ரத்து செய்வது, இருதரப்பு உறவுகள் தொடர்பான ஏற்பாடுகளை மறு ஆய்வு செய்வது என்று முடிவெடுக்கப்பட்டது.

இதன்பின்னர் பாகிஸ்தான் மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி உரை நிகழ்த்தினார். அவர் கூறியதாவது: தில்லியில் பாகிஸ்தான் தூதர் இனிமேல் இருக்க மாட்டார். அதேபோல், பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் அந்நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவார் என்றார். அதேபோல், பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு கமிட்டி கூட்டத்துக்கு பிறகு வெளியிடப்பட்ட அறிவிக்கையில், "ஜம்மு-காஷ்மீர் மற்றும் எல்லைக் கட்டுப்பாடு கோட்டுப் பகுதி தொடர்பான இந்திய அரசின் சட்டவிரோதமான, தன்னிச்சையான நடவடிக்கை குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து இந்தியாவுடனான ராஜீய உறவுகளைக் குறைப்பது என முடிவு செய்யப்பட்டது. அதேபோல் இந்தியாவுடனான இருதரப்பு வர்த்தகத்தை நிறுத்தவும் தீர்மானிக்கப்பட்டது. 

மேலும், காஷ்மீர் விவகாரம் தொடர்பான இந்தியாவின் நடவடிக்கை குறித்து ஐ.நா.விடமும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடமும் முறையீடு செய்வதென்று தீர்மானிக்கப்பட்டது. வரும் 14ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கும் பாகிஸ்தான் சுதந்திர தினத்தை காஷ்மீர் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் தினமாக கடைப்பிடிக்கவும், ஆகஸ்ட் 15ஆம் தேதியை கருப்பு தினமாக அனுசரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்தியப் படையினர் நிகழ்த்தி வரும் மனித உரிமைகள் மீறல் குறித்து உலக நாடுகளிடம் தெரிவிக்கும்படி தூதர்களுக்கு இம்ரான் கான் உத்தரவிட்டுள்ளார். எல்லையில் தீவிர கண்காணிப்புடன் இருக்கும்படியும் ராணுவத்தை இம்ரான் கான் வலியுறுத்தியுள்ளார் என்று அந்த அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதர் அஜய் பிசாரியா, இஸ்லாமாபாதில் உள்ளார். அதேநேரத்தில், இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் மொயின் உல் ஹக் இன்னும் தனது பொறுப்பை ஏற்கவில்லை.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu CommunicationsFriends Track CALL TAXI & CAB (P) LTD


Black Forest CakesThoothukudi Business Directory