» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சீனப் பொருள்கள் மீது ரூ.21 லட்சம் கோடி கூடுதல் வரி விதிக்க டிரம்ப் அதிரடி முடிவு: சீனா பதிலடி

சனி 3, ஆகஸ்ட் 2019 12:51:33 PM (IST)

30,000 கோடி டாலர் (ரூ.21 லட்சம் கோடி) மதிப்பிலான சீனப் பொருள்கள் மீது கூடுதல் வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். எனினும், அவ்வாறு வரி விதிக்கப்பட்டால் அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று சீனா எச்சரித்துள்ளது.

இதுகுறித்து டுவிட்டர் வலைதளத்தில் டிரம்ப் தெரிவித்துள்ளதாவது: வர்த்தகப் பதற்றத்தைத் தணிப்பதற்காக சீன பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள அமெரிக்கப் பிரதிநிதிகள் ஷாங்காய் நகரிலிருந்து திரும்பியுள்ளனர். அந்த நாட்டுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள முடியும் என்று 3 மாதங்களுக்கு முன்னர் நம்பினோம். 

ஆனால் அவர்களோ, ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு முன்னர் மறுபேரம் பேச விரும்புகின்றனர். அமெரிக்க வேளாண் பொருள்களை அதிக அளவில் வாங்குவதாக சீனா உறுதியளித்தது. எனினும், அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. எனவே, தற்போது கூடுதல் வரி விதிக்கப்படாத 30,000 கோடி மதிப்பிலான சீனப் பொருள்களுக்கு, 10 சதவீதம் கூடுதல் வரி விதிக்க திட்டமிட்டுள்ளேன் என்று தனது பதிவுகளில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், தங்களது பொருள்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்பட்டால், அதற்கு பதிலடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ தெரிவித்துள்ளார். சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் பொருள்களைவிட,  அந்த நாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் பொருள்களின் மதிப்பு குறைவாக உள்ளதால் ஏற்படும் வர்த்தகப் பற்றாக்குறையை சரிசெய்ய வேண்டும் என்று சீனாவிடம் அதிபர் டிரம்ப் வலியுறுத்தி வருகிறார்.

அதற்காக, சீனாவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் 25,000 கோடி டாலர் (சுமார் ரூ.17 லட்சம் கோடி) மதிப்பிலான சீனப் பொருள்கள் மீது கூடுதலாக 25 சதவீத இறக்குமதி வரி விதித்திருந்தார். அத்துடன், மேலும் 30,000 கோடி டாலர் (சுமார் ரூ.21 லட்சம் கோடி) மதிப்பிலான சீனப் பொருள்கள் மீது கூடுதல் இறக்குமதி விதிக்கப்படும் என்றும் டிரம்ப் மிரட்டல் விடுத்து வந்தார்.அதற்குப் பதிலடியாக, அமெரிக்க இறக்குமதிப் பொருள்கள் மீது சீனாவும் கூடுதல் வரி விதித்தது. இதனால், உலகின் இரு பெரும் பொருளாதார சக்திகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தகப் போர் பதற்றம் மேலும் அதிகரித்து வந்தது.

அந்தப் பதற்றத்தைத் தணிப்பதற்காக, இரு தரப்பிலும் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. எனினும், முக்கிய விவகாரங்களில் இரு தரப்பினருக்கும் இடையே ஒருமித்த கருத்து எட்டப்படாததால் அந்தப் பேச்சுவார்த்தை தடைபட்டது. இந்த நிலையில், ஜப்பானின் ஒசாகா நகரில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ஜி20 மாநாட்டினிடையே அதிபர் ஷி ஜின்பிங்குடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, தடைபட்டுள்ள வர்த்தகப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கு இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். அதற்குப் பிறகு, இருநாட்டுப் பிரதிநிதிகளும் சீனாவின் ஷாங்காய் நகரில் கடந்த சனிக்கிழமை முதல் முறையாக நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தச் சூழலில் அதிபர் டொனால்ட் டிரம்ப் இவ்வாறு அறிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications
Friends Track CALL TAXI & CAB (P) LTD

Black Forest Cakes
Thoothukudi Business Directory